முன்னாள் அமைச்சர் சுபையிர் ஹாஜியாரை ஒருபோதும் மறக்கமாட்டேன்: ஏறாவூர் கிலோர் முகம்மட்

0
158

(எம்.ஜே.எம்.சஜீத்)

தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்வதற்கு உதவி கோரி சென்ற போது எதுவித செலவுகளுமின்றி அரச வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்வதற்கு உதவி செய்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிரின் மனிதாபிமான செயற்பாடு ஏனைய அரசியல்வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஏறாவூரைச் சேர்ந்த எம்.ஏ.கிலோர் முகம்மட் தெரிவித்தார்.

சிறுநீர் கல் பிரச்சினை காரணமாக சத்திர சிகிச்சை செய்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் கிலோர் முகம்மட் வைத்தியசாலையில் இருந்தவாறு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு வயது 47 ஆகிறது, நான், மனைவி உட்பட ஆறு பிள்ளைகளுடன்; அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்ந்துவருகின்றேன். எனக்கு ஏற்பட்ட சிறுநீர் கல் பிரச்சினை காரணமாக வைத்தியசாலை சென்ற போது சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அரச வைத்தியசாலையில் அந்த சத்திர சிகிச்சையினை செய்வதற்கு எனக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது.

குறித்த அந்த காலப்பகுதியில் எனது குடும்ப உறவினர் ஒருவர் மரணித்ததன் காரணமாக மேற்படி தினத்தில் வைத்தியசாலைக்கு செல்ல முடியாமல் போனது. இருந்தும் ஒருவாரத்தின் பின்னர் சென்றேன். தற்போது அதனை செய்ய முடியாது எனவும் 2019ஆம் ஆண்டுதான் அதற்குரிய வாய்ப்பு உள்ளது பின்னர் வருமாறும் தெரிவித்தனர். பெரும் கவலையுடன் வீடு திரும்பினேன்.

இருந்த போதிலும் குறித்த நோயின் தாக்கத்தினால் தினமும் அவதியுற்ற நான் தனியார் வைத்தியசாலையிலாவது சத்திர சிகிச்சை செய்துகொள்வோம் என முடிவு செய்தேன். அதற்காக உதவி கோரி பலரையும் சந்தித்தேன். அப்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் ஹாஜியாரையும் சந்திக்க கிடைத்தது.

அப்போது சுபையிர் ஹாஜியார் எனது சுகயீனம் தொடர்பாகவும், குடும்ப நிலைமைகளையும் விசாரித்துவிட்டு எவ்வளவு பணம் வைத்துள்ளீர்கள் எனவும் கேட்டார் வெறும் 90,000 ரூபாய் உள்ளது என்றேன். நீங்கள் சிரமப்பட வேண்டாம் அந்தப் பணத்தை உங்களது வீட்டு செலவுகளுக்காக வைத்துக்கொள்ளுங்கள். சத்திர சிகிச்சையினை அரச வைத்தியசாiலையில் இலவசமாக செய்துகொள்வோம் கவலைப்பட வேண்டாம் என மனதுக்கு சற்று ஆறுதல் கிடைக்குமளவிற்கு அன்பாக பேசினார்.

அதன் பின்னர் சுபையிர் ஹாஜியார் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஏ.அஸீஸ் அவர்களை தொடர்புகொண்டு எனது சுகயீனம் மற்றும் நிலமைகள் தொடர்பாக எடுத்துக்கூறினார். அப்போது அவர் என்னை சம்மாந்துறை வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்புமாறும் ஹாஜியாரிடம் கூறினார்.

அதற்கமைவாக கடந்த மாதம் 20ஆம் திகதி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். பின்னர் அங்கிருந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு எனக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டேன் தற்போது அங்கு இரு வாரங்களாக சிகிச்சை பெற்று வருகின்றேன்.

குறிப்பாக ஏழை மக்களின் நலனில் அக்கரையுடன் செயற்பட்டு அந்த மக்களுக்காக அல்லும் பகலும் உதவி செய்கின்ற சுபையிர் ஹாஜியார் போன்றவர்களின் ஆயுளை இறைவன் நீடிக்க வேண்டும். அவரின் ஊடாக ஏழைகளின் துயர் துடைக்கப்பட வேண்டும். சுபையிர் ஹாஜியாரின் நற்பணி மேலும் சிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது வாழ்நாளில் அவரை ஒரு போதும் மறக்கவும் மாட்டேன்.

அத்துடன் எனக்கு சத்திர சிகிச்சையினை செய்வதற்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸீஸ் அவர்களுக்கும், சத்திர சிகிச்சையினை மேற்கொண்ட வைத்தியர்களுக்கும் நன்றியினை தெரிவிக்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY