மத்திய வங்கி மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்!

0
148

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியும் பொறுப்புக்கூற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று (05) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

”மூன்று வருடங்களாக ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கத்திடம், ஒரு பட்டதாரிக்கேனும் வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் இல்லை.

இப்போது தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால், வேலைவாய்ப்பு வழங்கவும் காணிகள் வழங்கவும் இப்போது அமைச்சுக்களில் விண்ணப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தில் பொதுச் சொத்துக்களை பயன்படுத்த முடியாதென குறிப்பிடும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் இன்று பாரிய வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளது. அதனால் லஞ்சம் கொடுத்து வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஒரு வகையிலும், எதிரணியினருக்கு ஒரு வகையிலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த மூன்று வருட காலமாக மஹிந்த ராஜபக்ஷவை ஏசியே ஆட்சி நடத்துகின்றனர். அதுமட்டுமல்ல, ஜனாதிபதியை பிரதமரும், பிரதமரை ஜனாதிபதியும் திட்டுவதோடு, அமைச்சரவையிலும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். ஆனால், உருப்படியான வேலைத்திட்டம் ஒன்றும் இல்லை.
ஜனாதிபதிக்கு நாம் சேறுபூச வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்தில் உள்ளவர்கள், அவர்களே அவர்களுக்கு சேறுபூசிக் கொள்கின்றனர்.

சகல தவறுகளுக்கும் பிரதமர் மட்டும் காரணம் அல்லர். மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் கடிதத்தில் இறுதியில் ஜனாதிபதியே கையெழுத்திட்டுள்ளார். ஆகையால் பிணை முறி மோசடிக்கு மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவு வழங்கிய மக்கள் விடுதலை முன்னணியும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

இப்போது அரசாங்கத்தின் பிழைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் சற்று தேடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, அரசாங்கத்தின் ஒரு அங்கம்.

அதனால் அக்கட்சியை பற்றி கதைப்பதற்கு ஒன்றும் இல்லை. மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு அமைச்சரவைக்கு சென்றால் நல்லது” என்றார்.

LEAVE A REPLY