(Article) காத்தான்குடி நகர சபை தேர்தலும் வேட்பாளர் தெரிவும்

0
355

(எம்.எஸ்.எம். நூர்தீன்)

எதிர் வரும் 2018 ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதில் காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலும் இடம் பெறவுள்ளது.

இதற்காக எதிர் வரும் நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் அல்லது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வேட்புமனுப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த தேர்தல் ஜனவரி இறுதி வாரத்தில் இடம் பெறுமெனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலுக்காக கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபை தேர்தலை பொறுத்த வரைக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணி மற்றும் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய அணிகள் போட்டியிடுவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிடலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இதில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணி எந்தக் கட்சியில் எந்த சின்னத்தில் போட்டிடும் என்பது பற்றி இன்னும் தெரியாமலுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நமது கட்சி என்றே குறிப்பிட்டு வருகின்ற நிலையில் அவர் தற்போது சார்ந்துள்ள ஜனாதிபதியின் கட்சியான சிரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது சிரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டு கட்சி ஒன்றில் காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இம் முறை வட்டார ரீதியாக நடைபெறவுள்ள தேர்தலானது உள்ளுராட்சி மன்ற புதிய தேர்தல் முறையாகும்.

எனினும் காத்தான்குடி நகர சபை பத்து வட்டாரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த பத்து வட்டாரத்திற்கும் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பத்து பேர் போட்டியிட வேண்டும் அதில் குறிப்பாக பெண்கள் இருபத்தி ஐந்து வீதம் போட்டியிட்டே ஆக வேண்டும். (இருபத்தி ஐந்து வீதம் என்பது காத்தான்குடி நகர சபையை பொறுத்த வரைக்கும் இரண்டு பெண்களாகும்)

தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் காத்தான்குடி நகர சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆர்வம் காட்டி வருகின்றது.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 2022 (டுவண்டி டுவண்டிடு) என்பதை இலக்காக கொண்ட அபிவிருத்தி பயணத்தினை 2018ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து வட்டார ரீதியாக வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

கடந்த காலங்களை விட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு காத்தான்குடி நகர சபை தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு சவாலாகவுள்ளது. தனது அரசியல் பயணத்தில் பல தேர்தல்களை வெற்றி கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சில தேர்தல்களில் தோல்வியும் கண்டுள்ளார்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் அந்தந்த வட்டாரங்களிலுள்ள பொது மக்களின் அபிப்பிராயத்துடன் வேட்பாளர்களை ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யும் ஒரு புதிய முறையை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கையாண்டிருப்பதானது இந்த நாட்டில் ஒரு புதிய வடிவத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள முக்கியஸ்தர்கள் நலன் விரும்பிகள் தனது ஆதரவாளர்கள் பெண்கள் என பலரையும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு அழைத்து மக்களின் விருப்பத்தை எழுத்து மூலம் இராஜாங்க அமைச்சர் பெற்று வருகின்றார்.

ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் மூன்று நான்கு பேர் என இதற்காக முன் வந்துள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் பொது மக்களின் தெரிவுக்காக விடப்பட்டுள்ளன.

பொது மக்களின் தெரிவு வாக்குகள் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது எண்ணப்பட்டு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அந்தந்த வட்டாரங்களிலுள்ள அவர்களின் கட்சி முக்கியஸ்தர்கள் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி முதலாம் வட்டாரத்திற்கான வேட்பாளர் தெரிவு கூட்டத்தினை நடாத்தி வேட்பாளர் ஒருவரின் பெயர் முன் மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதே நேரம் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை இன்னும் இடம் பெறவில்லை என தெரிய வருகின்றது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கிடம் கேட்ட போது இன்னும் வேட்பாளர் தெரிவு இடம் பெறவில்லையெனவும் நேரம் வரும் போது அதை செய்வோம் எனவும் தெரிவித்தார்.

சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களிடம் கேட்ட போது அதற்கான சில ஆயத்தங்களை மேற் கொண்டு வருவதாகவும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களோடு இணைந்து இதற்கான வேலைத்திட்டங்களை தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளதாக அதன் முக்கியஸ்தர் முஸ்தபா குறிப்பிட்டார்.

இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை சூடு பிடித்து வரும் நிலையில் காத்தான்குடி நகர சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு எப்படியிருக்க வேண்டும்.

1 ஐந்து நேரமும் தொழக் கூடியவராக இருக்க வேண்டும்

2 இஸ்லாமிய மர்க்க பின்னணியுள்ளவராக இருத்தல் வேண்டு;ம்

3. ஒழுக்கமுள்ளவராக இருத்தல் வேண்டும்;

4. போதை வஸ்த்து பாவனையில்லாதவராக இருக்தல் வேண்டும்.

5. புகைத்தல் பழக்க மற்றவராக இருக்க வேண்டும்.

6 பொதுச் சொத்தை அபகரிக்காதவராக இருக்க வேண்டும்.

7. மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய மனோ இயல்பை கொண்டவராக இருத்தல் வேண்டும்.

8.நம்பகத்தன்மை மற்றும் நேர்மை உண்மை தன்மையுள்ளவராக இருப்பதுடன் வெளிப்படைத்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும். அத்துடன் ஊழல் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.

9.பொய் உரைப்பவராகவோ அல்லது பொய் சாட்சியம் சொல்பவராகவோ இருக்க கூடாது.

10. ஊர் விவகாரங்களிலும் சமூகத்தின் மீதும் அக்கறை செலுத்துபவராகவும் சமூக சிந்தனையாளராகவும் இருக்க வேண்டும்.

11. ஊருக்கும் சமூகத்திற்கும் நன் மதிப்பை பெற்றுக் கொடுப்வராக இருக்க வேண்டும்.

மேற்படி குணாம்சங்களைக் கொண்ட வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் அதன் முக்கியஸ்தர்கள் தெரிவு செய்தால் சமூகத்திற்கு செய்கின்ற மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.

இதன் மூலம் தெரிவு செய்யப்படும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

LEAVE A REPLY