முதல் டுவென்டி-20: இந்தியா அபார வெற்றி

0
444

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் முதல் ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது..

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது..

முதல் போட்டி ராஞ்சியில் நடந்தது. தோள்பட்டை காயத்தால் ஸ்டீவ் ஸ்மித் விலகியதால் கேப்டன் பொறுப்பை டேவிட் வார்னர் ஏற்றார்.’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

முதலில் ‘பேட்டிங்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் வார்னர் (8) ஏமாற்றினார். மேக்ஸ்வெல் (17) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஆரோன் பின்ச் (42) அரைசத வாய்ப்பை இழந்தார். குல்தீப் ‘சுழலில்’ ஹென்ரிக்ஸ் (8) சிக்கினார். டிராவிஸ் ஹெட் (9) ஒற்றை இலக்கில் திரும்பினார். பும்ரா பந்தில் டிம் பெய்னே (17), நாதன் கூல்டர்-நைல் (1) போல்டாகினர். டேனியல் கிறிஸ்டியன் (9) ரன்-அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி, 18.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியா சார்பில் குல்தீப், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மழை நின்ற பின், மீண்டும் போட்டி துவங்கியதும் இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவரில் 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா (11) நல்ல துவக்கம் தந்தார். பின் இணைந்த ஷிகர் தவான், கேப்டன் கோஹ்லி இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.இந்திய அணி 5.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (22), தவான் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் 10ல் கவுகாத்தியில் நடக்கவுள்ளது.

LEAVE A REPLY