நான் ஒரு திருடன் அல்ல என எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும்? தான் அத்தகையவன் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன்..!

0
154

(றிஸ்கான் முகம்மட்)

நான் ஒரு திருடன் அல்ல, என இந்த நாட்டில் இருக்கும் எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை.

ஆனால், அத்தகைய நான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்று எனக்கு சொல்ல முடியும் என நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பிரபல தலைமைத்துவ பயிற்சியாளர் பாரிவள்ளல் அவர்களினால், ஜனநாயக இளைஞர் இணைய அங்கத்தவர்களுக்கு பயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டது.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு கூடத்தில் நடைபெற்ற, இந்த தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் விசேட அதிதியாக கலந்துக்கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர் ஒருவர், அதிலும் ஆளும் அரசாங்க கூட்டணியின் பிரதான கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைகுழுவிற்கு அழைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகிறார். அங்கே அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அமைச்சரை துளைத்து எடுக்கிறார்கள்.

கடந்த காலங்களில் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாத அளவில் காரியங்கள் நடைபெறுகின்றன. இது நல்லாட்சி அரசாங்கம் என்பது இன்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

உண்மையில், பொது எதிரணிக்கு தேவைப்பட்டது ரவியின் ராஜினாமா அல்ல. நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து, அதற்கு ஆதரவு அளிக்கவும், எதிர்க்கவும் முடியாத நிலைமையை அரசில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பீக்களுக்கு ஏற்படுத்தி, அரசை ஆபத்தில் போட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. இன்று, இவர்களின் எதிர்பார்ப்பில் மண் விழுந்து விட்டது.

இன்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்க வேண்டும். அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஏனெனில் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பிரதான அடிப்படைகளில் ஒன்று, ஊழல் ஒழிப்பு என்பதாகும். இந்த அராசங்கத்தை அமைப்பதில் எங்களுடன் பாரிய பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார்.

ஒருபுறம் ஊழல் மற்றும் பிழைகளை இந்நாட்டில் இருந்து முழுமையாக ஒழிக்க எம்மால் இன்னமும் முடியாமல் இருந்தாலும் கூட, இன்று நாடு முழுக்க ஊழலுக்கு எதிராக ஒரு மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த நாட்டின் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத முறையில் ஊழலுக்கு, திருட்டுக்கு, அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான எழுச்சியும், அது தொடர்பில் நாடு முழுக்க மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

நான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்காக, சொந்த நிதியை பயன்படுத்தி பல்லாண்டுகளாக கட்சி நடத்தி வரும் எமக்கு இது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

நான் ஒரு திருடன் அல்ல, என இந்த நாட்டில் இருக்கும் எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை.

இந்த நாட்டில் பேசப்படும் மூன்று மொழிகளையும் பேசி, எழுத, படிக்க தெரிந்த அரசியல்வாதி நான் என எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை.

ஒரு நாளில் இருபது மணித்தியாலங்கள்வரை உழைக்கும் ஒரு அரசியல்வாதி என எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை.

ஆனால், நான் அத்தகைய நான் ஒரு கட்சி தலைவர் அரசியல்வாதி என்று எனக்கு சொல்ல முடியும் என நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஆனால், தேர்தல் காலங்களில் வந்தவனுக்கும், போனவனுக்கும் வாக்குகளை அளிக்கும் எமது மக்கள், என்னைப்பற்றி, எங்கள் கட்சியை பற்றி, எந்தளவு அறிந்து வைத்துள்ளார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் போது துயரமாகவும் இருக்கிறது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

இனி எதிர்காலத்தில் துயரங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, ஒட்டு மொத்த மகிழ்ச்சியை பெருக்கிடும் பணியை, நமது கட்சிக்குள் ஜனநாயக இளைஞர் இணையம் செய்திட வேண்டுமென விரும்புகிறேன்.

LEAVE A REPLY