முரண்பாடுகள்: poem

0
157

Mohamed Nizous

ரோட்டோரம் பசியோடு
கூட்டாக அலைவார்கள் பலர்
ஹோட்டலில் சிவாஜி பாட்டில்
கூத்தாடி மகிழ்வார்கள் சிலர்

படிக்கப் பணம் இன்றி
பாய் கடையில் மாய்கின்றார் பலர்
அடிக்கடி உம்றான்னு
ஆகாய விமானத்தில் சிலர்

தப்பான வழி நடந்து
அப்படியே தொழுகையின்றி பலர்
தொப்பி போடும் விவாதத்தில்
தொடராக ஈடுபடுவார் சிலர்

உடல் மறைக்கும் ஆடைக்காய்
கடன் வாங்கி உடுப்பார்கள் பலர்
ஒடேல் சென்று லட்சத்தில்
படாடோபம் காட்டுவார் சிலர்.

குடியேற்ற வழியின்றி
குடிசைகளில் அகதிகளாய் பலர்
கொடியேற்றி லைட் போட்டு
களியாட்டம் செய்வார்கள் சிலர்.

கொட்டும் மழை நின்று
கூதலில் தொண்டு செய்வார் பலர்
கட்டிலில் படுத்துக் கொண்டு
கண்டபடி கொமண்ட் செய்வார் சிலர்

பட்டம் பல பெற்றும்
பாதையிலே வேலையின்றிப் பலர்
எட்டாம் வகுப்புமின்றி
இங்காட்சி செய்கின்றார் சிலர்

இந்த அவலங்கள்
எப்போதும் மாறாது
நிந்தனைக்காய் எழுதவில்லை
சிந்தனைக்கு எழுதினேன்.

LEAVE A REPLY