அல்லாஹ்விற்கும் இறைத்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்து அல்லாஹ்வால் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

0
187

அல்லாஹ்விற்கும் இறைத்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்து அல்லாஹ்வால் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி
பெற்றோருக்கு துரோகமிழைப்பவர் சுவனம் செல்வதில்லை, அவரது எந்த நல் அமலும் வானிற்கு உயர்த்தப் படுவதில்லை, ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.

“நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (ஸுரத்துல் லுக்மான் 31:14)

பெற்றார்களது அறியாமைகள் இல்லாமை இயலாமைகளுக்கு முன்னால் பணிவாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளுமாறு அல்-குரான் எங்களுக்கு கண்டிப்பாக கட்டளை இட்டிருக்கின்றது.

அவர்களோடு தர்க்கிப்பது அவர்களது மனம் புண்படுபடி நடந்து கொள்வது “சீ” என்று கடிந்து கொள்வது எல்லாம் இணைவை த்தலிற்குப் பின் பெரிய பாவங்களாகும்.

“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!”

அவர்கள் சிறுவயதில் எங்கள் மீது கருணை காட்டியது போல் இராட்சகா அவர்கள் இருவர் மீதும் கருணை காட்டுவாயாக. என பிரார்திக்குமாறு அழ குரான் சொல்லித் தருகின்றது.

நாம் குழந்தைகளாய் இருந்த பொழுது நிபந்தனை இல்லாத கருணை, வாய்பேச முடியாத பொழுதும் எதையும் முறையிடவோ, கேட்கவோ முடியாத பொழுதும் எமது சின்னச் சின்ன உணர்வுகளையம் புரிந்து எம்மை ஊட்டி வளர்த்த, எம்மை தோள் மேல் சுமந்து வளர்த்த அவர்களது உணர்வுகளை புரிந்து தேவைகளை அறிந்து அவர்கள் மீது கரிசனை கொள்வது எமது கடமையாகும்.

“இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!”

(ஸுரத்துல் இஸ்ரா 17:23,24)

இணைவைத்தல், அல்லது தீமைகள் செய்தல், அநீதி இழைத்தல், நீதி நியாயமற்ற அஅணுகுமுறைகள், பாரம்பரியங்கள் என்று வருகின்ற பொழுது அவற்றில் பெற்றார்களிற்காக விட்டுக் கொடுப்புக்கள் செய்ய வேண்டும் என்று நாம் கருத வேண்டியதில்லை, அவர்கள் நமது வழிமுறையில் மார்கத்தில் இல்லாதிருப்பினும் அவர்களுடன் அன்றாடம் நாம் நல்ல முறையிலேயே நடந்து கொள்ளல் வேண்டும்.

“ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”
(ஸுரத்துல் லுக்மான் 31:15)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.

அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) நூற்கள்:- புகாரி, முஸ்லிம்

ஒரு முறை இறை தூதர் முஹம்மது ஸல் அவர்கள் மிம்பரில் ஏறும் பொழுது ஒவ்வொரு படியிலும் ஆமீன் சொன்னார்கள், சஹாபாக்கள் அது பற்றி வினவிய பொழுது, ஹஸரத் ஜிபிரீல் அவர்கள் கேட்ட ஒவ்வொரு துஆவிற்கும் ஆமீன் சொன்னேன் என்கிறார்கள், எனது பெயர் மொழியக் கேட்டும் என்மீது ஸலாவாத் சொல்லாதவர், ராமழானை அடைந்தும் பாவ மன்னிப்பை பெறாதவர், வயதான தாய் தந்தையரை கவனித்து சுவன பாக்கியம் பெறாதவர் என ஒவ்வொருவராக கூறி அவர்கள் நாசமாகட்டும் என துஆ செய்ததாகவும் அதற்கு இறைதூதர் ஸல் ஆமீன் சொன்னதாகவும் ஹதீஸில் வருகின்றது.

பெற்றோர்களோடு பணிவன்போடு நடந்து கொள்ளுங்கள் பற்றோர்களை “ச்சி” என்று கூட கடிந்து கொள்ள வேண்டாம், அவர்களை ஏச வேண்டாம், உலக வாழ்வில் அவர்களோடு நல்லுறவைப் பேணி வாழுங்கள், என்றெல்லாம் அல் குரானும் அஸ்ஸுன்னாஹ்வும் அழகிய உபதேசங்களைக் கூறியுள்ளன.

தங்களை விடவும் கல்வியிலும் செல்வத்திலும் அந்தஸ்திலும் எங்களை உயர்த்தி அழகு பார்க்க அத்தனையையும் அள்ளித் தந்த அவர்களுக்கு கிள்ளித் தரவோ, அல்லது அவர்களை தள்ளி வைக்கவோ எங்கள் மனம் எந்தவொரு சூழ்நிலையிலும் இடமளிக்கக் கூடாது.

எமது உதவிகள், காசு, பணம் என்பவற்றை விட அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களோடு உரையாடி உறவாடி, அருகாமையில் பணிந்து பரிவு காட்டுவதையே அவர்கள் விரும்புவார்கள், அவர்கள் தனிமைப் படுத்தப் படுவதனை, அல்லது புறக்கணிக்கப் படுவதனை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

பெற்றோர் தமது பராமரிப்பில் இருக்கின்றார்கள், அவர்கள் எங்களுக்கு கடமைப் பட்டிருக்கின்றார்கள் என்ற மன நிலை எவருக்கும் வரவே கூடாது, அவர்களது இரக்க சிந்தனை, அவர்களது இயலாமை என்பவற்றை பயன்படுத்தி அவர்களை தமது குழந்தைகள் பராமரிக்கும் சேவைகர்களாகவோ, வீட்டு வேலைக் காரர்களாக்வோ கட்டுப்பாடுகள் விதித்து அல்லது எதிர்பார்த்து நாம் அவர்களை நடாத்தக் கூடாது.

எல்லா சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு தரப் பட வேண்டிய முன்னுரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கவோ, மறுக்கவோ கூடாது, எமது பிள்ளைகள் அவர்களது பேரக் குழந்தைகள் , அவர்கள் மீது அன்பு காட்டவும் அவர்களை மதித்து நடக்கவும் நாம் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.

நாளை நாமும் தாய் தந்தையர், மாமனார், மாமியார், தாத்தா பாட்டியாவோம் என்பதனை ஆழமாக மனதில் கொண்டு ஒவ்வொரு கணவனும் மனைவியும் எந்த்வொரு சூழ் நிலையிலும் தத்தமது பெற்றோர்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதனையும் அந்த அழகிய பாரம்பரியத்தை தம்மிடம் இருந்து குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதனையும் மனத்திலிருத்திக் கொள்ளல் வேண்டும்.

வயது முதிர்ந்த மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள பெற்றோர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

தங்களை விடவும் உயர்ந்த நிலையில் பிள்ளைகள் வளர்ந்து வாழ்வாங்கு வாழவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் அளவில்லா அர்பணிப்புகளைச் செய்கின்றார்கள்.

பிள்ளைகள் -பெற்றோர்கள் பெற்றுத்தந்த- தமது தகைமைகளிற்கும் தகுதிகளிற்கும் ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றார்கள். சிலர் தமது தொழில் நிமித்தம் நகர்புரங்களிற்கு அல்லது வெளிநாடுகளிற்கு சென்றுவிடுகின்றனர், இன்னும் சிலர் திருமணத்திற்கு பிறகு தூரமாகி விடுகின்றனர்.

கணவனின் பெற்றோர் ஆக இருப்பினும், மனைவியின் பெற்றோராக இருப்பினும் பெற்றோர்களை பெற்றோர்களை விட்டு பிள்ளைகளை தூரமாக்குவது அல்லாஹ்விற்கு இணைவத்தலிற்குப் பின்னர் மிகக் கொடிய பெரிய பாவமாகும்.

பல பிள்ளைகள் இருந்தும் அருகில் தம்மை கவனித்துக் கொள்ள ஒருவரும் இல்லாத நிலையில், பிள்ளைகளின் அந்தஸ்திற்கு குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்று தமது அஸௌகாரியங்களை அடுத்தவர்களிடம் சொல்லவும் முடியாமல் மௌனமாக வேதனையில் வெந்து கொண்டிருக்கும் பெற்றோர்களும் இருக்கின்றார்கள்.

பல இலட்சக் கணக்கில் உழைத்து கண்காணா இடங்களில் ஆடம்பரமாக சொகுசு வாழ்க்கை வாழும் பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டுள்ள தமது அன்புப் பெற்றோருக்கு அருகில் இருந்து ஒரு சிறிய உதவி ஒத்தாசையேனும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலையில் இருக்கின்றார்கள்.

பெரும்பாலான இடங்களில் தாய்மார்களின் தயவில் தப்பன்மார்கள் அல்லது தகப்பனின் தயவில் தாய்மார்கள் அல்லது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியாத நிலையில் இருவரும் என பலர் சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தவிர்க்க முடியாத காரணங்களால் குடும்பங்களை விட்டு தூரமாகி வாழ்பவர்கள் உங்கள் பெற்றோர்களை அருகில் இருந்து கவனிப்பதற்கு உதவியாட்களை நியமித்து அவர்களையும் சந்தோஷமாக இருக்கச் செய்யுங்கள், அவர்களுக்கு வேளாவேளை சரியாக உணவுகள், தேநீர் மருந்துகள் என்பவற்றை கொடுக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்து வையுங்கள்.

பணத்தால் அன்பை, அருகாமையை வழங்க முடியாது என்றாலும் அடிப்படித் தேவைகளாவது நிறைவேறுவதன உறுதிசெய்து கொள்ளமுடியும்.

உங்களைவிட வசதியில் குறைந்த சகோதர சகோதரிகள் அருகில் இருப்பின் பெற்றார்களை அருகிலிருந்து அன்புகாட்டி நன்கு கவனித்து கொள்ளக் கூடிய உதவி ஒத்தாசைகளை அவர்களுக்கு நீங்கள் செய்தேயாக வேண்டும்.

அல்-ஹம்துலில்லாஹ், இஸ்லாம் மிகப் பெரிய அருளாகும் , அல்லாஹ்விற்கும் அவன்தூதரிற்கும் அடுத்த அந்தஸ்தை பெற்றார்களுக்கு தந்திருக்கின்றது, அந்த வகையில் முஸ்லிம்களில் பெரும்பானமையினர் பெற்றார்களை நன்றாகவே கவனித்து வருகின்றார்கள், முதியோர் இல்லங்களிற்கும் அனுப்புவதில்லை.

அதே போன்றே எமது பிள்ளைகளிற்கு அவர்களது தாயின் மீதும், தந்தையின் மீதும் இருக்கின்ற உரிமைகளை கணவன் மனைவி இருவரும் மதித்து நடந்து கொள்ளல் வேண்டும், தமக்குள் எத்தகைய விருப்பு வெறுப்புக்கள் இருந்தாலும் தாயின் விடயத்தில் தந்தையோ தந்தையின் விடயத்தில் தாயோ பிள்ளைகளை தவறாக வழிநடாத்துவதும் மிகப் பெரிய குற்றமாகும்.

கடுமையான வெறுப்பிற்கு மத்தியிலும் என்றேனும் முறையாக துண்டித்துக் கொள்ளப்பட முடியும் என்ற கணவன் மனைவி உறவு, என்றுமே துண்டிக்கப்படவே முடியாத தந்தை பிள்ளை உறவை அல்லது தாய்பிள்ளை உறவை விவாகரத்து என்ற நிலை வரினும் அதற்குப்பின்னரும் எந்த வகையிலும் பாதித்துவிடக்கூடாது.

உறவு முறைகளில் தலையாயது பெற்றோர் பிள்ளைகள் உறவு

பெரும்பாவங்களில் உள்ளது தாய் தந்தையரைத் திட்டுவது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன மாத்திரத்தில், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் தாய், தந்தையரைத் திட்டுவானா?” என்று நபித்தோழர்கள் வினவுகின்றார்கள். “ஆம்! இவன் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகின்றான். உடனே அவன் பதிலுக்கு இவனது தந்தையைத் திட்டுகின்றான். இவன் அவனுடைய தாயைத் திட்டுகின்றான். உடனே அவன் இவனது தாயைத் திட்டுகின்றான். (இது இவன் நேரடியாகத் திட்டியதற்குச் சமம்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம்

“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புகாரி

“இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள். அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

“யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

“தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி

“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்- படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹுல் புகாரி 5984,5986

யா அல்லாஹ் எனது பெற்ரார்களது பாவங்களை மன்னித்து, அவர்களது நல் அமல்களை அங்கீகரித்து அவர்கள் மீதுகருணை காட்டுவாயாக!
எங்களை விட்டும் பிரிந்து சென்றுவிட்டவர்களை உனது மேலான சுவனத்தில் சேர்த்து விடுவாயாக, எங்களோடு வாழ்கிறவர்களுக்கு நீண்ட ஆயுளையும் பூரண ஆரோக்கியத்தையும், மன நிறைவையும் வழங்குவாயாக..!

LEAVE A REPLY