இந்திய அணியை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

0
2696

அதிக அளவு பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு நிரம்பிய இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பங்களிக்கும் வீரர் உடனடியாக அனைவரின் கவனத்தையும் பெறுவார்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்தொடர் தொடங்குவதற்கு முன்பு, கிரிக்கெட் உலகில், ஃபகார் ஜமான் பெரிதும் அறியப்படாதவராகத்தான் இருந்தார். இந்த போட்டி தொடரில்தான் அவர் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடினார்.

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஃபகார் ஜமான் சாதித்தது

சம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்களில் ஃபகார் ஜமானும் ஒருவர்.

இப்போட்டி தொடரில், தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக முறையே 31 மற்றும் 50 ஓட்டங்களை எடுத்த ஃபகார் ஜமான், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் 57 ஓட்டங்கள் எடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இறுதியாட்டத்தில் 106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் பெற்றார். 114 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பாண்டியாவின் பந்துவீச்சில் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்தார்.

தனது நான்காவது ஒருநாள் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி, ஃபகார் ஜமான் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

எளிய பின்னணியில் பிறந்த ஃபகார் ஜமான்

ஃபகார் ஜமானின் மட்டைவீச்சு குறித்து ஸ்டார்ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் நேரலை வர்ணனை செய்த முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், ஜமான் தனது ஆஃப்சைட் மற்றும் ஆன்சைட் என இரு பக்கங்களிலும் நன்றாக விளையாடியதாக குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியான காட்பேர் பாக்கலில் ஃபகார் ஜமான் பிறந்தார். ஜமானின் தந்தை அரசு வனவிலங்கு பாதுகாப்பு முகமையில் பணிபுரிந்தார்.
மற்ற தந்தையர்கள் போல், ஜமானின் தந்தையும், தனது மகன் நன்கு கல்வி கற்று அரசு பணிபுரிய வேண்டும் என்று விரும்பினார்.

பாகிஸ்தான் கடற்படையில்பணிபுரிந்தஃபகார் ஜமான்

கிரிக்கெட் விளையாட்டு மீது அதீத தாகம் கொண்ட ஃபகார் ஜமான், தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் பாகிஸ்தானின் கடற்படையில் சேர்ந்தார்.

பாகிஸ்தான் கடற்படையில் கப்பலோட்டியாக பணிபுரிந்த அவர், கடற்படை கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றார். அந்த அணியின் பயிற்சியாளரான ஆஸாம் கான், ஜமானின் திறமையை கண்டறிந்து அவரை ஊக்குவித்தார்.

பின்னர், 2013-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படையை விட்டு விலகிய ஃபகார் ஜமான், கிரிக்கெட்டில் தனது முழுநேரத்தையும் செலவழித்தார். 2016-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பு ஃபகார் ஜமானுக்கு கிடைத்தது.
இதில் அதிக அளவில் ஓட்டங்கள் குவித்ததன் பலனாக அதற்கு அடுத்த ஆண்டே பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றார்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், சிறப்பாக விளையாடிய ஃபகார் ஜமான் ஆட்டநாயகன் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

(Adaderana)

LEAVE A REPLY