வாப்பா

0
191

வாப்பா

Mohamed Nizous

முள்ளு வலிக்குதென்னு
மூட்டைகள வெச்சுப் போட்டு
ஒள்ளுப்பம் உட்கார்ந்து
ஓய்வெடுக்க நினைக்கையிலே
பிள்ளைக்கு டியூஷனுக்கு
பீஸ் கட்ட வேணும்னு
உள்ளுக்கு நெனப்பு வர
உடனே வலி பொறுத்து
உழைக்கின்ற மனுசனுக்கு
உள்ள பெயர் ‘வாப்பா’

கால்கள் கடுகடுக்க
கடையில நிண்டுழைத்த
கால் வயிற்றுச் சம்பளத்தில்
காப்பியும் குடிக்க மாட்டான்.
பாலகனின் பால் முகம்
பாவி மகன் மனம் தோன்ற
ஏலுமான காசுக்கு
இனிப்பு வாங்கிக் கொண்டு
வேல விட்டு வருபவனுக்கு
வெச்ச பெயர் வாப்பா.

டை கட்டி உட்கார்ந்து
டாப் லெவலில் ஓடரிட
கைகட்டி வேலை செய்வார்
காரியாலய ஊழியர்கள்.
ஐயா ஆபிஸ் விட்டு
ஆத்துக்கு வந்த பின்னால்
பையன் பெண்ட் எடுப்பான்
பசு மாடு போகச் சொல்வான்
மெய்யாக மாடாகி
மேனியை வளைத்து நிற்க
ஐயா அவன் முன்னால்
அப்பாவி அப்பா ஆவார்.

கெம்பஸில் புரபஸர்
கேள்வி கேட்கின்ற
கொம்பனுக்கு எல்லாம்
கொடுப்பார் அவர் பதில்.
சிம்பிளாய் பிள்ளை
சேர்ட்ட புடிச்சிக்கிட்டு
ஏம்பா காகமெல்லாம்
இப்படிக் கருப்பென்று
வீம்பின்றிக் கேட்பவனுக்கு
விடை சொல்லா நிற்கையிலே
ஷேம் என்று சிரிப்பவனுக்கு
சேர்ந்து சிரிப்பவன் பெயர் டாடி.

LEAVE A REPLY