தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும்

0
94

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயகோன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகத்தில் தன்னை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இத்தகவலை கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் சங்கத் தலைவர் எம்.பௌசர் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாணத்தில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, யுத்த சூழல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் கடந்த இருபது வருட காலமாக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற எமது தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் கடந்த காலங்களில் இழுத்தடிக்கப்பட்டு வந்த போதிலும், நல்லாட்சி அரசாங்கம் இது விடயத்தில் கரிசனை செலுத்தி, நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதனை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோனை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இதன்போது அவர் சம்மந்தப்பட்ட அமைச்சர்களையும் செயலாளர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த நடவடிக்கைகளை விரைபுபடுத்தி, நிரந்தர நியமனத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதன் பிரகாரம் அடுத்த ஒரு சில வாரங்களில் இப்பணிகள் நிறைவுபெறும் என்ற நற்செய்தியை ஜனாதிபதியின் செயலாளர் எம்மிடம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் மேற்கொண்டு வந்த அயராத முயற்சிகள் காரணமாக இவ்வாறு நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண கல்வி அமைச்சர் தண்டதாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸ்ஸாக், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எம்சீ.எம்.ஷெரீப், சம்மாந்துறை தொகுதி ஐ.தே.க. அமைப்பாளர் ஹசன் அலி போன்றோருக்கு இதய சுத்தியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY