வில்பத்தும் வீதிக்கு வரவுள்ள வடக்கு முஸ்லிம்களும்

0
235

இலங்கை நாட்டில் இனவாதிகளுக்கு பேச வேறுபேசு பொருள் இல்லாவிட்டால் வில்பத்துவை கையில் எடுப்பது வழக்கமாகிவிட்டது.காலத்திற்கு காலம் இப் பிரச்சினை எழுந்து கொண்டே வருகிறது.மஹிந்த ஆட்சியில் இதனை ஊதி பெருப்பிக்கும் வேலையை இனவாத அமைப்புக்கள் சிலவும்,இனவாத ஊடகங்கள் சிலவும் செய்திருந்தன.

இவ்வாட்சியில் ஜனாதிபதி மைத்திரியே இப் பிரச்சினையை ஊதி பெருப்பிக்கும் வேலையை கனகச்சிதமாக செய்து வருகிறார் என்பதுவே கவலைக்குரிய விடயமாகும்.1990ம் ஆண்டு எந்தவித காரணங்களுமின்றி வடக்கு முஸ்லிம்கள் உடுத்த உடையோடு வெளியேற்றப்பட்டனர்.

பல வருடங்களாக பல இன்னல்களுக்கு மத்தியில்அகதி முகாம்களில் வாழ்ந்து யுத்தம் ஓய்ந்து பல வருடங்கள் கழிந்த நிலையில்தாங்கள்முன்னர்வாழ்ந்த பகுதிகளில் மீளகுடியேற்றப்பட்டனர்.இவர்களை மீண்டும்அவர்களது இடங்களில் இருந்து வெளியேற்றும் இனவாதிகளின் சதிகள் காலத்திற்கு காலம் இடம்பெற்று வருகிறன.இதற்கு தற்போதுஜனாதிபதி மைத்திரியும் பச்சை அடையாளம் காட்டியுள்ளார்.இவர்களுக்கு மீண்டும் மீண்டும் இன்னல்களை அளிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஈடாகும்.

30-12-2016ம் திகதி ஜனாதிபதி மைத்திரி சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து வனத்தை விரிவாக்கி வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.குறித்த வனத்தை அண்டிய பிரதேசத்தில் மக்கள் குடியிருக்கும் போது வனத்தை விரிவாக்குதல் குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை பாதிப்படையச் செய்யும்.இதனை அறிவதற்கு ஆராய்ச்சி அறிவுகளும் தேவையில்லை.

நிலைமை இவ்வாறிருக்கும் போது ஜனாதிபதி மைத்திரி எவ்வாறு இவ் அறிவிப்பை விடுக்க முடியும்.ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பிற்கு இனவாதிகளிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது.2017-01-03ம் திகதி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் இடம்பெற்ற அமைச்சரவை அமைச்சர் அல்லாத அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான கலந்துரையாடலின் போது அங்கிருந்தார்கள் மைத்திரியின் குறித்த ஆலோசனைக்கு மைத்திரியை பாராட்டியுள்ளனர்.

இப் பாராட்டலை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டமைத்திரி தனது ஆலோசனையால் வெளியேற்றப்பட்ட மக்களை வேறு சில இடங்களில் குடியேற்றவுள்ளதாககூறியுள்ளார். இது எந்தளவு சாத்தியமான தீர்வென கூற முடியாது.

1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்கள் 2009ம் ஆண்டே குறித்த பிரதேசங்களில் மீளகுடியேற்றப்பட்டனர்.அவர்கள்குறித்த காலப்பகுதி வரை அங்கும் இங்கும் அலைந்து திருந்தனர்.இதன் போது சிலர் தங்களுக்கென்று ஒரு அழகிய சூழலை உருவாக்கியிருந்தாலும் பலர் உருவாக்கியிருக்கவில்லை.குறித்த பிரதேசங்களில் மீள குடியேற்றப்பட்டவர்களில் அதிகாமனவர்கள் தங்களுக்கென்று ஒரு அழகிய சூழலை ஏற்படுத்த முடியாதவர்களே.

தற்போது இவர்கள் குறித்த பிரதேசங்களில் மீள குடியேற்றப்பட்டு அங்கு தங்களுக்கு ஏதுவான வகையில் ஒரு சூழலை ஏற்படுத்தி இருப்பார்கள் அல்லது பழக்கப்பட்டிருப்பார்கள்.இப்படியான நிலையில் அவர்களை மீண்டும் இன்னுமொரு இடத்தில் மீளக் குடியேற்றுவோமென மிக இலகுவாக கூறினாலும் அவர்கள் அச் சூழலை தங்களுக்கு பழக்கப்படுத்திக்கொள்ள பல வருடங்கள் எடுக்கும்.இது அம் மக்களின் வாழ்வில் விளையாடுகின்ற செயலாகும்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி அந் நாட்டு மக்களின் வாழ்வின் மீது கவனம் செலுத்த கடமைப்பட்டவர்.அன்று விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்இலங்கைநாடு எக்கேடு கெட்டு போனாலும் பறவாயில்லை தங்கள் இருப்பை பாதுகாக்க வேண்டுமென கருதி புலிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இந் நிலை அவர்களுக்கு வந்திருக்காது.இலங்கை நாட்டை பாதுகாக்கசிந்தித்தது குறித்த மக்கள் செய்த தவறா?

வனத்தை விரிவாக்கி ஐந்தறிவு கொண்ட வன ஜீவராசிகளை பாதுகாக்க சிந்திக்கும் ஜனாதிபதிக்கு ஆறறிவு கொண்ட முஸ்லிம் மக்களின் வாழ்வு விளையாட்டு பொருளாக விளங்குவது தான் வேதனைக்குரிய விடயமாகும்.ஜனாதிபதி மைத்திரி இதற்கு முன்பும் சில தடவைகள் இனவாதிகளுக்கு தீனி போடும் வகையில் இவ்விடயத்தில் செயற்பட்டுள்ளார்.வில்பத்துவில் காடுகள் அழிக்கப்பட்டமை உண்மை என பகிரங்கமாக கூறியுமுள்ளார்.இலங்கையில் இனவாதத்தை விதைத்தவர்களில் முதன்மையானவராக சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு சார்புப் போக்கை கடைப்பிடிக்கின்ற போதும் ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு எதிரான மனோ நிலையில் இருப்பது அவர் இவர்களையும் விஞ்சிய இனவாத சிந்தனையில் இருப்பதை எடுத்து காட்டுகிறது.அண்மைக் காலமாகஜனாதிபதி மைத்திரி இனவாதிகளின் மகுடிக்கு அழகாக படமெடுத்தாடுகிறார்.

இந்த வகையில் இதனையும் நோக்கலாம்.வில்பத்து விடயம் மிகவும் காரசாரமான தேசிய ரீதியிலான விவாதப் பொருளாக சென்று கொண்டிருக்கின்ற போதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கும் அதற்கும் சம்மதமில்லாதது போன்றே செயற்படுகிறார்.இதனை ஜனாதிபதி மைத்திரியிடம் ஒப்படைத்து விட்டு இருபக்கமும் (இனவாதிகள் மற்றும் முஸ்லிம்கள்) தன் தலையை காப்பாற்றியுள்ளார்.

தற்போது அவர் பூனை வாண்டால் தான் என்ன? நாய் கண் பொஞ்சாதியானால் தான் என்ன? தனது இருப்பை காப்பாற்றுவதே முக்கியமானதென்ற நிலைப்பாட்டில் உள்ளார்.சரியோ பிழையோ ஒரு நிலைபாட்டை வெளிப்படுத்துபவரை நம்பலாம். ஒன்றும் கூறாமல் மௌனியாக இருப்பவரை ஒரு போதும் நம்ப முடியாது.

மரிச்சுக்கட்டி,கரடிக்குழி,காயாக்குழி,பாலக்குழி,கொண்டச்சி மற்றும் வேப்பங்குளம் ஆகிய பிரதேசங்கள் வில்பத்து வனத்திலிருந்து தொலைவில் காணப்பட்டிருந்த போதும் 2012ம் ஆண்டு மஹிந்த ராஜ பக்ஸ அரசாங்கத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வில்பத்து வனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.குறித்த பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான பலசான்றுகள் உள்ளன.இதனை அமைச்சர் றிஷாத் ஹிரு தொலைக்காட்சியில் ஆனந்த சாகர தேரருடன் இடம்பெற்ற விவாதத்தில் மிகத் தெளிவாக கூறியிருந்தார்.இந்த வர்த்தமானி அறிவித்தலே இன்றுள்ள பல பிரச்சினைகளுக்கான அடிப்படையாகும்.இவ் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறும் வரை இப் பிரச்சினை எழுந்து கொண்டு தான் இருக்கும்.

இதன் போது எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் மிக கரிசனையுடன் செயற்பட்டிருக்க வேண்டும்.இதனை தடுக்கும் கடமை அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளின் மீதுள்ள போதும் இதனை அமைச்சர் றிஷாத் ஏன் தடுக்கவில்லை என்ற வினாவே பெரிதும் மக்களிடமிருந்து கேட்கப்படுகிறது.இவ்வினாவை எழுப்புபவர்கள் மு.காவிற்கும் குறித்த வில்பத்து பிரச்சினையால் பாதிக்கப்படப் போகும் முஸ்லிம்களுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லையென ஏற்றுக்கொல்வார்களாக இருந்தால் அவர்களது வினாக்கள் நியாயமானவை.

குறித்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலமிக்க அமைச்சராக இருந்தவர்என்ற வகையில் அமைச்சர் றிஷாத் மீதும் இதனை தடுக்காததன் குற்றக் கறைபடிந்துள்ளது.இருந்தாலும்குறித்த பகுதிகள் வார்த்தமானிப்படுத்தப்பட்டமையானதுதனக்கு தெரியாமல் இரவோடு இரவாக குறித்த அமைச்சர் கொழும்பில் இருந்து கொண்டு செய்ததாக அமைச்சர் றிஷாத் குற்றம் சுமத்துகிறார்.

மஹிந்த ராஜ பக்ஸவின் ஆட்சிக் காலம் பற்றி யாவரும் அறிந்தது தான்.அவரது ஆட்சி சர்வதிகாரப் போக்கிலேயே அமைந்திருந்தது.குறித்த முஸ்லிம் பகுதிகளை வனப் பிரதேசமாக வர்த்தமானிப்படுத்த குறித்த பிரதேசத்துஅரசியல் வாதிகள் ஒத்துழைக்க வேண்டுமென்ற அவசியமில்லை.குறித்த அமைச்சர் நினைத்தால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியும்.

இதன் காரணமாக அமைச்சர் றிஷாதின் குற்றச் சாட்டில் உண்மையில்லையென பூரணமாக மறுத்துவிட முடியாது.இக் குற்றச்சாட்டை அவர் பகிரங்கமாக கூறி வருகின்ற போதும்சம்பந்தப்பட்டவர்கள்யாருமே இது வரையில் மறுப்பு தெரிவிக்கவில்லை.அன்றுகுறித்த பகுதிகள் வில்பத்து வனமாக பிரகடனப்படுத்தப்பட்ட போதும் அது முஸ்லிம்களிடையே பெரிய பேசு பொருளாக உருவெடுத்திருக்கவில்லை.இதிலிருந்து அன்று இவ் வர்த்தமானி அறிவித்தல் பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை என்பதை நாம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

வர்த்தமானி வெளியிடுவதன் நோக்கமே குறித்த செய்தியை பகிரங்கப்படுத்துவதாகும்.அதனை மக்களிடையே வெளிப்படாமல் மறைப்பதென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியவிடயமல்ல.தற்போதுஅமைச்சர் றிஷாத்நீதி மன்றத்தை நாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.குறித்த பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று தடயங்கள் இருக்கின்றமையால் இவ்விடயம் நீதி மன்றம் செல்கின்ற போது முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பு வருவதற்கான சாதகத் தன்மை அதிகமாகும்.இதனைஅமைச்சர் றிஷாத்,தான் அறிந்தவுடனேயே வழக்குத் தாக்கல் செய்திருந்தால் இன்னும்சிறப்பாக அமைந்திருக்கும்.

மக்கள் வாழ்ந்த வில்பத்து வனமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்து மக்கள் அங்கு குடியேறச் சென்ற போது அப் பிரதேசங்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.இதன் போது அன்றுமஹிந்த ராஜ பக்ஸ அரசாங்கத்தில் அம் மக்களில் சிலருக்கு குடியிருப்பதற்கு அரை ஏக்கர் காணியும் விவாசாயம் செய்வதற்கு ஒரு ஏக்கர் காணியும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவிடமிருந்து அமைச்சர் றிஷாதினால் காணிச் கச்சேரிகள் வைக்கப்பட்டு உரிய முறைப்பிரகாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

அவர் அவ்வாறு வழங்கியிருந்தாலும் விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட்ட காணிகள் அம் மக்களுக்கு இன்றுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை.குறித்த வர்த்தமானி மூலம் 2800 ஏக்கர்முஸ்லிம் மக்களின் காணிகள் பிடிக்கப்பட்டிருந்தாலும்208ஏக்கர் அளவிலான காணிகளே மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்ட காலப்பகுதி மஹிந்த அரசாங்கம் மூன்றின் இரண்டு பெரும் பான்பான்மை பலத்தை சாதாரணமாக வைத்திருந்த காலமாகும்.இக் காலப்பகுதியில் அமைச்சர் றிஷாத் மஹிந்த ராஜ பக்சவை எதிர்த்திருந்தால் அது அவரது ஆட்சிக்கு எதுவித பாதகமாக விளைவையும் கொண்டுவரப்போவதில்லை.இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவே விரிசலடைந்திருக்கும்.

அதற்கான இதனை அமைச்சர் றிஷாத் அறிந்து கொண்டுஇதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் அதனை சரியென இங்கு நான் கூற வரவில்லை.இவ்விடயத்தில்தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசனை செயற்படுத்தப்படுமாக இருந்தால் அன்று முன்னாள் ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு வழங்கிய சிறிதளவான காணிகளும் பறி போய்விடும்.இது மஹிந்தவை விடவும் மைத்திரி இனவாத சிந்தனையில் முற்றியவர் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அமைச்சர் றிஷாதை பொறுத்தமட்டில் இப் பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவர பல வழிகளில் முயற்சித்து வருகிறார்.இரு தடவைகள் சிங்கள தொலைக் காட்சிக்கு சென்று இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.ஒரு தடவை பௌத்த தேரருடன் விவாதத்திற்கும்சென்றிருந்தார்.

பௌத்ததேரருடன் விவாதத்திற்கு செல்வது மிகவும் ஆபத்தான விடயம்.அதற்கு அலாதித் துணிவும் வேண்டும்.இதற்குள் அமைச்சர் றிஷாதிற்கு சிங்கள மொழியில் அவ்வளவு பரீட்சயமும் இல்லை.தற்போது மீண்டும் இது தொடர்பில் இன்னுமொரு சிங்கள தொலைக்காட்சிக்கு விளக்கமளிக்கச் செல்லவும் தயாராகவுள்ளார்.இது அமைச்சர் றிஷாதின் சமூகப் பற்றை எடுத்துக் காட்டுகின்றது.

அமைச்சர் ஹக்கீமின் அரசியல் வளர்ச்சிக்கு மாவனல்லை கலவரம் பிரதான காரணமாக அமைந்திருந்தது.அது போன்று இனவாதிகளின் இச் செயற்பாடானது அவரது அரசியல் வளர்ச்சிக்கு காரணமாகும் என்பதில் ஐயமில்லை.ஒருவரது போராட்டக் குணத்தை போராடக் கூடிய ஒரு விடயம் வரும் போது தான் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.அமைச்சர் றிஷாதின் போராட்டக் குணத்தை வில்பத்து பிரச்சினைஎடுத்துக் காட்டுகிறது.

இது அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட பிரச்சினையல்ல.ஒரு சமூகத்தின் இருப்பிற்கான பிரச்சினையாகும்.இதனை சிலர்அமைச்சர் றிஷாதின் தனிப்பட்ட பிரச்சினை போன்று காட்ட முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.இத்தனைநாளும் அமைச்சர் றிஷாத் தன்னந் தனியே நின்று இப் பிரச்சினையை முகம் கொடுத்திருந்தாலும் இன்று அவருக்கு சார்பாக மு.கா தவிர்ந்து அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கை கோர்த்து செயற்பட உறுதி பூண்டுள்ளனர்.

அந்த வகையில் ஐ.தே.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹலீம்,முஜீபுர் ரஹ்மான் சு.காவின் நியமன பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்,தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் ஒன்றிணைத்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்ததோடு ஒரு ஊடகவியலாளர் மாநாட்டையும் நடாத்தியிருந்தனர்.இவர்களோடு முஸ்லிம் மீடியா போரம்,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம்கள் புத்தி ஜீவிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது மு.கா தவிர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள் என்ற செய்தியை இவ்விடயம் கூறுகிறது.இலங்கையில்ஒரு முஸ்லிம் கூட்டு உருவாவதற்கான சமிஞ்சையும் இதன் போது வெளிப்படுகிறது.இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் பலம் பொருந்திய கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் இதனை புறக்கணித்துள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.குறித்த ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீனிடம் அமைச்சர் ஹக்கீம் குறித்த நிகழ்விற்கு வருவதாக உறுதியளித்திருந்தும் சமூகம் அளித்திருக்கவில்லை.

இதற்கு மு.காவின் ஆதரவு இருந்ததோ இல்லையோ இக் கூட்டு கண்டு இவ்வரசு கலங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.குறித்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு சமூகம் அளித்திருந்த ஊடகவியலாளர்கள் மிகவும் அமைதியாக அங்கு கூறப்பட்ட விளக்கங்களை செவிமடுத்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.இது வில்பத்து பற்றிய தெளிவுகள் அவர்களை சென்றடைந்து விட்டதை அறியச் செய்கிறது.

மு.காவானது இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக வேண்டி உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும்.மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் பலவாறான முயற்சிகளை செய்துள்ளார்.

இதன் காரணமாக மு.கா வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் கரிசனை கொண்டிருக்க வேண்டும்.மு.காவைப் பொறுத்தமட்டில் இது தொடர்பாக பெரிதும் அக்கறை கொள்ளவில்லை என்பது தான் உண்மை.ஒரு முறை மாத்திரம் மு.கா வடக்கு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான ஒரு கலந்துரையாடலை கொழும்பில் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பல கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் பா.உ ஊடகவியலாளர் மாநாடு நடாத்திய குறித்த தினம் அமைச்சர் ஹக்கீம் சிலரை வில்பத்து தொடர்பில் அழைத்து கதைத்திருந்தார்.இதன் மூலம் அமைச்சர் தன்னால் இவ்விடயத்தை தனித்து நின்று சாதிக்க முடியும் என கூற வருகிறாரா? அப்படிஎன்றால் இவ்வளவு நாளும் அமைச்சர் ஹக்கீம் எங்கிருந்தார்?எதிர்வரும்மு.காவின் 26வதுபேராளர் மாநாட்டில் மு.கா தங்களது இலக்குகளில் ஒன்றாக இதனை அறிவிக்க வேண்டும்.

இன்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கையாள வேண்டுமென்பது இலங்கை முஸ்லிம்களின் பல நாள் அவா.அந்த கனவு நிறைவேற கூடிய சாதகமான நிலை தோற்றம் பெறுகின்ற போது அதற்கு மு.கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அமைச்சர் றிஷாத் சிங்கள மொழியில் பரீட்சயம் குறைந்தவர் என்ற குறையை கடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பா.உ முஜீபுர் ரஹ்மான் ஈடு செய்திருந்தார்.

அமைச்சர் ஹக்கீமும் இக் கூட்டோடு இணைந்தால் பல வழிகளிலும் இக் கூட்டு பலமாகும்.இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் போது அது அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு ஆபத்தானது.அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான புறக்கணிப்புக்கள் அக் கூட்டு உருவாகாமல் தடுப்பதற்கான உத்தியாக இருக்கலாம்.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் இவ்விடயம் பற்றி வாய் திறக்கின்றாரில்லை என்ற விடயம் முஸ்லிம்களிடையே பலத்த விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

இவ்விடயத்தில் அமைச்சர் ஹக்கீமிற்கு போதிய தெளிவு இருப்பதாக கூற முடியாது.இது பற்றி அவர் வாய் திறக்கின்ற போது இனவாதிகளின் தாக்குதல் அவரை நோக்கி வரும்.இன்று இது தொடர்பில் அவரும் இனவாதத் தாக்குதல்களை அமைச்சர் றிஷாத் தைரியமாக இனவாதிகளிடம் நெஞ்சை நிமிர்த்தி முன் சென்று முகங் கொடுக்குமளவு அமைச்சர் ஹக்கீமிடம் தெளிவிருக்காது.இவ்விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் அனைவருடனும் ஒன்றிணைந்து சென்றாலும் அமைச்சர் றிஷாதின் கீழ் செயற்பட நிர்ப்பந்திக்கப்படுவார்.இது அவரது தன் மானப் பிரச்சினையாகும்.

அமைச்சர் ஹக்கீமை பொறுத்தமட்டில் இனவாதம் தோன்றக்கூடிய விடயங்களில் மௌனம் சாதிப்பது வழமை.யாராவது கேட்டால் நான் இதில் தலையிட்டால் இனவாத இன்னும் மேல் கிளம்பும் என்பதே அவருடைய பதில்.அமைச்சர் ஹக்கீம் இனவாத விடயங்களை கையில் எடுத்தால் அவரது அரசியல் வாழ்வு பாழாகிவிடும் என்பதே உண்மை.அமைச்சர் ஹக்கீம் இப்படி பேசி பேசி எத்தனைக்கு நாளைக்கு இருப்பது?இதற்கான தீர்வு தான் என்ன? இன்று இலங்கையில் உள்ள கட்சிகளில் மு.காவே மிகவும் பலமிக்கது.

இது பலருக்கு கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மை.எனவே,அமைச்சர் ஹக்கீம் அனைத்தையும் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு இவ்விடயத்தில் அனைவருடனும் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.ஜனாதிபதி தனது ஆலோசனையை மீளப்பெறுவதோடு முன்னாள்ஜனாதிபதிமஹிந்த காலத்தில் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட வில்பத்து தொடர்பான வர்த்தமானியையும் வாபஸ் பெற வேண்டும்.இதுவே இதற்கான நிரந்தரத் தீர்வாதளால் அது வரை அனைவரும் ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.துள்ளிக்குதித்துவிட்டு அமருவதில் எந்தப் பயனுமில்லை.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 09-01-2017ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.comஎனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 77வது கட்டுரையாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

LEAVE A REPLY