பொத்துவில் வாஸீதை வெளியேற்றும் முயற்சியா?

0
394

கலைக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாஸீதை மு.காவிலிருந்து வெளியேற்ற மு.காவின் தலைமைத்துவம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. இச் சந்தேகத்தை அண்மைக் காலமாக நடைபெறும் சில விடயங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

2016-12-18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் பொத்துவில் அமைப்பாளர் தன்னிடமுள்ள நிதியை பொத்துவிலுக்கு கொண்டு சேர்க்க போதியளவு உற்சாகமாக செயற்படவில்லை என்ற குற்றச் சாட்டை பகிரங்கமாகவே கூறி இருந்தார்.

இவர் இக் குற்றச் சாட்டை பொத்துவில் என்ற ஊரை சுட்டிக் காட்டி ஊடகவியலாளர் எதுவுமே கேட்காத நிலையில் அவராகவே எடுத்து கலைக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாஸீத் மீது குற்றச் சாட்டை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மு.காவின் தலைவர் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று பார்த்தால் அண்மைக்காலமாக மு.காவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரை புறக்கணித்து செயற்படுவதாக அறிய முடிகிறது.

இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மூன்று நிகழ்வுகளுக்காக பொத்துவில் வந்துள்ளார்.இதன் போது அப்துல் வாஸீதுக்கு எதுவித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை. அப்துல் வாஸீத் பிரதி அமைச்சர் ஹரீசின் தனிப்பட்ட பாராளுமன்ற செயலாளர் (Parliament Private Secretary) என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில் இவருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படாமை பலத்தை சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. இன்றைய விடயங்கள் தொடர்பில் கலைக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாஸீதின் நெருங்கிய நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் இவரது அழைப்புக்களுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் அவரது செயலாளர் பதில் கூட அளித்திருக்கவில்லையென மிகவும் கவலையாக கூறினார்.

சில நாட்கள் முன்பு பா.உ பைசால் காசீமும் பொத்துவில் வந்துள்ளார்.அதன் போதும் இவருக்கு அறிவிக்கப்படவில்லை. இன்று பா.உ மன்சூரும் பொத்துவிலுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது பிரதேச சபைத் தேர்தல் நெருங்கிய காலப்பகுதி என்பதால் இவ்வாறான நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது கலைக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் வாஸீதிற்கு மு.காவின் உயர்மட்டத்திலிருந்து ஆப்பு சீவப்படுவதை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

ஒரு இடத்திற்கு முக்கியஸ்தர்கள் செல்லும் போது அங்குள்ள அமைப்பாளரையும் அழைத்து செல்வது வழமை. இந்த சாதாரண வழமை இங்கு மீறப்பட்டுள்ளது.இதனை ஒரு கோணத்தில் பார்க்கும் போது இது பொத்துவில் வாஸீத் என்ற தனி மனிதனுக்கு ஏற்பட்ட அவமானமாக இருந்தாலும் இன்னுமொரு கோணத்தில் நோக்கும் போது பொத்துவில் மகனை அவமானப்படுத்தி தனது தேவைகளை மு.காவினர் அடைந்துகொள்ள முயற்சிக்கின்றார்களா என்றும் சிந்திக்கலாம்.

அண்மைக் காலமாக பொத்துவிலிற்கு அரசியல் அதிகாரங்கள் வேண்டுமென்ற கோசங்கள் எழுந்துள்ள நிலையில் அங்கு யாராவது பெயர் சொல்லும் வகையில் இருப்பது எதிர்காலத்தில் மு.காவிற்கு சவாலாக அமையலாம்.

எது எவ்வாறு இருந்தாலும் ஒரு ஊர் மக்கள் தங்களது தேவைகளை தனதூரைச் சேர்ந்தவரினூடாக அணுகுவதே பொருத்தமான வழிமுறையாகும். இவர்கள் ஓரிரு முறை வந்துவிட்டு சென்று விடுவார்கள். ஊரோடு எப்போதும் இருப்பவர் அவ் ஊரைச் சேர்ந்தவரே. இதன் மூலம் குறித்த ஊரின் அமைப்பாளர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அமைச்சர் ஹக்கீம் கூட பொத்துவிலிற்கு சேவைகள் இடம்பெறவில்லை என்றதற்கு அவ் ஊரின் அமைப்பாளரையே குற்றம் சாட்டி இருந்தமை இதனை தெளிவாக கூறுகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY