தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயம்

0
236

-எம்.ரீ. ஹைதர் அலி=

மட்டு மாவட்டத்தின், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு அதிபரின் அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் 2016.10.18ஆந்திகதி செவ்வாயக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் கஸ்ஸாலி மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் றிஸ்வான் ஆகியோர் பாடசாலையின் தற்போதைய நிலைமையினை மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் தெளிவுபடுத்தினர்.

இப்பாடசாலையானது 1930ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தரம் 1-11 வரையான வகுப்புக்களை கொண்டுள்ளதோடு, 300 மாணவர்கள் கல்வி கற்றும் வருகின்றனர். இப்பாடசாலையின் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் 23 ஆக காணப்பட்டாலும் தற்பொழுது 13 ஆசிரியர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டு முதன்முதலாக இப்பாடசாலையிலிருந்து மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், அத்தோடு தற்போது உள்ள நிலையில் வரலாறு, சுகாதாரமும், உடற்கல்வியும் மற்றும் ஆரம்பப்பிரிவுக்கான ஆசிரியர் ஆளணிகள் உடனடித்தேவைப்பாடாகக் காணப்படுவதாகவும், வளப்பற்றாக்குறையை பார்க்கின்றபோது தளபாடம் மற்றும் கட்டட தேவைப்பாடுகளும் காணப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

இவை அனைத்தையும் கேல்வியுற்ற மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தளபாட தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து தருவதற்கு மாகாண கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தி அதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும், கட்டட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதற்கு முதலமைச்சருடன் இது விடயமாக தெரியப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இப்பாடசாலையில் மாணவர்களின் கற்றல் அறிவு விருத்திக்கு தேவைப்பாடாகக் காணப்பட்ட வாசிகசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாஜ். நஸீர் அஹமட் அவர்களினால் 2015ஆம் ஆண்டு இருபது இலட்சம் ரூபா நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு கட்டடம் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் கொந்தராத்துகாரரால் பாடசாலைக்கு கையளிக்கப்படாமல் காணப்பட்ட கட்டிடத்தினை வலயக்கல்வி அலுவலகங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர் ஹக்கீம் அவர்களை நேரில் அழைத்து தெரியப்படுத்தியதோடு, உடனடியாக பாடசாலையின் அதிபரின் பொறுப்பில் வாசிகசாலையைினை கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அத்தோடு, இம்முறை முதற்தடவையாக இப்பாடசாலையிலிருந்து க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை சந்தித்த மாகாண சபை உறுப்பினர் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து புலமைப்பரிசில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுடன், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY