2 ஏக்கர் கண்ணாக் காடுகள் எரிந்து நாசம் தீயணைக்க உதவாத மட்டக்களப்பு மாநகர தீயணைப்புப் படை

0
191

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் செவ்வாய்க் கிழமை (18) மாலை வேளையில் கண்ணா பற்றைகளில் தீ பற்றிக் கொண்டு விட்டது.

உடன் இத்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் கட்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் பற்றிமேலும் தெரியவருவதாவது;

செவ்வாய்க்கிழமை (18) மாலை வேளை பழுகாமம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கண்ணாப் பற்றைகாட்டில் திடீரென தீபரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டும் அவை பயனளிக்கவில்லை. இதனால் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கண்ணாக் காடுகள் எரிந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தினை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு தொலைபேசி; (0652222275) மூலம் பிரதேச மக்கள் தொடர்பு கொண்டபோது அவர்களால் வரமுடியாது என கூறப்பட்டுள்ளது.

மீண்டும் தொடர்பு கொண்டபோது மட்டு தீயணைப்பு அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு 0652222222 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கததோடு தொடர்பு கொண்டபோது அதனூடாகப் பேசிய அலுவலர்களும் பழுகாமம் மட்டக்களப்பில் இருந்து தூரமாகவுள்ளதால் தாங்களும் வரமுடியாது என மறுத்துள்ளனர்.

எனினும், தங்களுக்குப் பதிலாக கல்முனை நகரிலுள்ள தீயணைப்புப் பிரிவுடன் டன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்த போதிலும் கல்முனை தீயணைப்புப் பிரிவு தொலைபேசி இலக்கம் தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

மீண்டும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரிடம் இது தொடர்பாக அறிவித்தபோது அவரும் பலமுயற்சிகளை மேற்கொண்டதன் பிரதிபலனாக களுவாஞ்சிகுடி பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து தீயினைகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரித்தான தீயணைப்புப் பிரிவினர் மாவட்டத்திற்குள் நிகழும் தீ பற்றிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் தீயை அணைப்பதற்கு வரமறுத்தால் அவர்களின் கடமை என்ன என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

LEAVE A REPLY