ஜனாதிபதியின் கூற்றுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாது – தற்கொலை செய்துகொண்ட இராணுவ அதிகாரி தொடர்பிலும் விசாரணை

0
177

-எம்.ஐ.அப்துல் நஸார்-

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவு சம்பந்தமாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், கடற்படைத் தளபதிகள் ஆகியோரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துதல் சம்பந்தமாகவும் அண்மையில் ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட கூற்றுக்கள் தொடர்பில் கருத்து வெளியிட முடியாதெனவும் லஸந்த விக்ரமதுங்க கொலையில் சம்பந்தப்பட்டதாகத் தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட இராணுவ அதிகாரியின் மரணம் தொடர்பில் சி.ஐ.டி யினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈச்சன்குளம், போகஸ்வௌ ஆகிய இ;டங்களில் பொலிஸ் நிலையங்கள் இரண்டைத் திறந்து வைக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி : ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களுடன் அரசியல் தலையீடு எவையும் உள்ளனவா ?

பதில் : என்னால் அது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாது.

கேள்வி : லஸந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கேகாலை முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியின் மரணம் தொடர்பில் தற்போதைய நிலை என்ன?

பதில் : அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன அதேபோல தற்கொலை செய்துகொண்ட நபரின் மரணம் தொடர்பிலும் தனியாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இது வரை மரணமானவரின் கூற்று தொடர்பில் உறுதியாக எதனையும் கூற முடியாதுள்ளது. அந்த விடயம் சம்பந்தமாக நாம் பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.

அதேபோன்று அவர் ஏன் அவ்வாறு கூறியிருக்கின்றார் என்பது தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளது. அந்தப் பகுதியில் அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா, கடமை ரீதியான காரணங்கள் ஏதும் உள்ளனவா அல்லது அவருக்கு ஏதேனும் மன அழுத்தங்கள் உள்ளனவா அல்லது அச்சுறுத்தல்கள் ஏதேனும் உள்ளனவா என்பன தொடர்பில் ஆராய வேண்டும். உடனடியாக எம்மால் தீர்மானமொன்றிற்கு வந்துவிட முடியாது. எனவே இந்த விடயம் சம்பந்தமாக கேகாலையில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினாலும் தனியான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சந்தேக நபரொருவர் மரணமடைந்தமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் குற்றமொன்று தொடர்பில் கைது செய்யப்படும் நபரை விட குற்றத்தின் தன்மையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தார்.

எந்தவொரு குற்றம் தொடர்பிலும் நபரொருவருக்கு எதிராக சாட்சிகள் இருப்பின் அவரைக் கைது செய்வது பொலிஸாரின் கடமையாகும் எனவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

LEAVE A REPLY