அரசியலமைப்பு மாற்றம் மற்றும் புதிய தேர்தல் முறை குறித்து மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடராக நடத்த (NFGG) நடவடிக்கை.

0
124

தற்போது நாட்டில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற விடயமாக இருப்பது அரசியலமைப்பு மாற்றமும் தேர்தல் சீர்திருத்தமும் ஆகும். இது குறித்து அரசியற் கட்சிகளும் அரசியல் ஆய்வாளர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் மக்கள் இவ்விடயம் குறித்து ஆழமாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ஆனால் தேசிய முக்கியத்துவமிக்க இவ்விடயம் குறித்து போதியளவு விழிப்புணர்வோ விளக்கங்களோ பொது மக்களுக்கு கிடைக்காமல் இருப்பது துரதிஷ்டமாகும் அத்துடன் வெளிப்படைத்தன்மையில்லாமல் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் நல்லாட்சி விழுமியங்களுக்கும் முரனானதாகும்.

எனவே மேற்படி விடயங்களைக் கருத்திற் கொண்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தொடராக நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் கடந்த 16.10.16 ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டையில் ந.தே.மு மக்கள் சந்திப்பொன்றை நடத்தியது. ந.தே.மு யின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தலைமைத்துவ சபை உறுப்பினருமான டாக்டர் ஸாஹிர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு அஷ்ஷெய்கு ஸாலிஹீன் ( நழீமி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

வளவாளராக பங்கேற்ற ந.தே.மு யின் பொதுச் செயலாளர் நஜா மொஹமட் அவர்கள் புதிய அரசியலமைப்பொன்றிற்க்கான தேவை அதற்கான பின்னணி தற்போதய அரசியல் சூழ்நிலையில் எவ்வாறான அரசயலமைப்பொன்று உருவாக்கப்படலாம் அதற்கான சாதக பாதகங்கள் குறித்து கருத்துக்களை முன்வைத்தார் .

மேலும் உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தின் பிரதான அம்சங்கள் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் அவற்றின் சாதக பாதகங்கள் குறித்தும். குறிப்பாக சிதறி வாழும் சிறுபான்மை மக்களான கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் , இந்திய வம்சாவளி தமிழர்கள் போன்றோரின் பிரதிநிதித்துவத்தில் ஏற்படவுள்ள தாக்கங்கள் குறித்தும் இங்கு விரிவக விளக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் திறந்த கலந்துரையாடலும் இடம் பெற்றது. இதன்போது பல்வேறு காத்திரமான கருத்தக்கள் சபையோரிடமிருந்து முன்வைக்கப்பட்டன.

மேலும் இவ்வாறான கருத்தரங்கொன்றை கடந்த 7 ஆகஸ்ட் 2016 இல் ந.தே.மு மூதுரில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் ந. தே.மு யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மானும் பொதுச் செயலாளர் நஜா மொஹமதும் வளவாளரகளாக கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY