பைத்துல் முகத்தஸ் விவகாரம்: இலங்கையின் மௌனம் அணிசேராமைக்கு ஆபத்து

0
178

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் தொடர்பாக யுனெஷ்கோவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை வாக்களிப்பில் பங்குபற்றாமை இலங்கையின் அணிசேராக் கொள்கையை சிதறடிக்கும் செயல் என இலங்கை முஸ்லிம் முற்போக்கு முன்னணி தெரிவிக்கின்றது.

பைத்துல் முகத்தஸ் உரிமைப்பிரேரணையில் இலங்கை வாக்களிப்பில் கலந்து கொள்ளாமையை கண்டித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள முஸ்லிம் முற்போக்கு முன்னணயின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர், இலங்கை அரசின் இச் செயற்பாடு திகைப்புக்கும், வெட்கத்துக்குமுரிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அல் – அக்ஸா, அல் – குத்ஸ் முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமாகும். இங்கிருந்துதான் இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) விண்ணுலக மிஃறாஜ் யாத்திரையை மேற்கொண்டார்கள். அல் – குர்ஆனின் அல் – பகரா (சூரா15) இதனை நன்கு விளக்குகிறது. முஸ்லிம்களுடைய முதல் கிப்லா இதுவாகும்.

அல் – குத்ஸ் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பகுதி. ஸியோனிச இஸ்ரேலுக்கு இங்கு கால் வைப்பதற்கு அருகதையில்லை. இப்பிரதேசத்தில் இஸ்ரவேல் செய்துவரும் அட்டூழியங்களை நாம் எதிர்க்கிறோம். அவர்கள் புரிந்து வரும் வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று பாரிஸ் நகரில் யுனெஸ்கோ – ஐக்கிய நாடுகள் சபை கல்வி கலாசார ஸ்தாபனம் – கொண்டு வந்த பிரேரணை மீது வாக்களிக்காமல் இலங்கை நடுநிலை வகித்துள்ளதை எண்ணி முஸ்லிம்கள் மிகவும் ஆத்திரப்படுகிறார்கள்.

“ஒன்றோ நீ நண்பனாக இரு அல்லது எதிரியாக இரு – நடுநிலை வகிக்க முடியாது” என்று ஜனாதிபதி பராக் ஒபாமா கூறி இருப்பது போல், இலங்கை “மதில் மேல் பூனை வேஷம்” பூண்டுள்ளது. இது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆரம்பித்து இன்று வரை அரசாங்கங்கள் பின்பற்றிய அணி சேரா கொள்கைக்கு விழுந்த பாரியதொரு அடியாகும்.

ஆச்சிரியமென்னவென்றால், அமரிக்க – பிரிட்டன் மற்றும் அதன் நேச நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன. அவர்களுடன் தோழமை பூண்ட ஒரு நாடாக நடுநிலைக் கொள்கைளை கடைப்பிடித்தது மூலம் இதன் போது தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. வெட்கக் கேடான விடயமாகும். வேரறுத்து கண்டிக்கத்தக்கது.

அண்மைக்காலங்களின் நடுநிலை நாடுகள் – அணி சேரா – கூட்டணி, இஸ்லாமபாத்தில் நடைபெறவிருந்த சார்க் நாடுகள் சம்மேளனம் விடயங்களிலும் இலங்கை இந்த ஏகாதிபத்திய வாதிகள் பக்கம் திசை திரும்பியுள்ளதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.

அணி சேரா நாடுகளின் கொள்கையிலிருந்து இலங்கை விலகி வெட்கக்கேடான முறையில் தனது பிறந்த மேனியின் அவலட்சணத்தைக் உலகறிய வெளிக்காட்டியுள்ளது. அபாண்டம் அபாண்டம்.

மேலும், இன்றைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அன்று ஐக்கிய நாடுகள் சபைமுன் வைக்கப்பட்ட பலஸ்தீன ஆதரவுப் பிரேரணைமீது வாக்களிக்காமல் சபையை விட்டு வெளியேறி நிற்குமாறு எமது பிரதிநிதிக்கு உத்தரவிட்டார்.

இந்த “பாவச்” செயலுக்காக அன்று பதவியிலிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன் இவரை பதவி நீக்கம் செய்தார். இதே சமரவீர இன்று யுனெஷ்கோவிலும் தனது முஸ்லிம் விரோத கொள்கைளை அவிழ்த்து விட்டுள்ளார். புலி புள்ளியை நீக்குமா என்ன?

அது மட்டுமா, பலஸ்தீனத்திற்கு சார்பாக அன்று எமது பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்ட போது இன்று பதவியிலிருக்கும் இதே பிரதமர் என்னையும் சகோதர அமைச்சர் இம்தியாஸையும் பேசுவதற்கு தடைவிதித்தார் என்பதையும் முஸ்லிம்களுக்கு சுட்டிக் காட்டுவது தகும்.

இந்த மைத்திரி – ரணில் அரசின் சர்வதேச முஸ்லிம் விரோத கொள்கைளை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டுவது மிக அவசியமானது என்றும் அஸ்வர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன ஜெரூஸலம் – அல் – அக்ஸாவுக்காக அனைத்து முஸ்லிம் ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்களும் துஆப் பிரார்த்தனை புரியுமாறு வேண்டிக்கொள்கிறார்.

LEAVE A REPLY