ஆசனத்துக்காக கிலாஃபாவை விற்ற இப்னு சவூத் பரம்பரை: சவூத் பரம்பரையில் விடிவை எதிர்பார்க்கிற அறியாமை

0
614

-முஹம்மது ராஜி-

அது 1902.. தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளால் தளர்ந்து கொண்டிருந்தது உஷ்மானிய  கிலாஃபா.

இப்னு சவூத், ரியாத்தில் இருந்து உஷ்மானிய கிலாஃபாவின் அரேபிய அமீரான இப்னு ரஷீத் கோத்திரத்தின் அப்துல் அஸீஸுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்த காலம் .

இப்னு சவூத் தனக்கு சார்பாக ஆதரவு தேடுவதற்காக கையாண்ட தந்திரம் தேசியவாதம் . “நாமெல்லாம் அரேபியர் . நம்மை துருக்கியர் ஆள்வதா ..” இதுதான் முஸ்லீம் உம்மாவின் பிற்கால கண்ணீருக்கு காரணமாக இருந்த ஆட்சியை கைப்பற்றுவதற்கான அப்போதைய வாசகம் .

உஸ்மானிய கிலாஃபா அப்துல் அஸீசின் வேண்டுகோளுக்கு அமைய இப்னு சவூதின் கிளர்ச்சியை அடக்க துருக்கியில் இருந்து படை அனுப்புகிறது .

ஏற்கனவே பிரிட்டனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இப்னு சவூத் பிரிட்டனின் உதவிக்கு பகரமாக பிரிட்டனின் கோரிக்கைகளுக்கு தலையாட்டுகிறார் .

உஷ்மானிய கிலாஃபாவை துண்டு துண்டாக தகர்த்து எறிய வேண்டும் என்பதில் பிரிட்டன் உறுதியாக இருந்தது .இதற்காக அவர்கள் கையாண்ட யுக்தி தேசியவாதம் என்கிற நச்சு விதையே .

1904 ஜூன் 15 இல் கடும் யுத்தத்தில் படுதோல்வியை சந்தித்த இப்னு சவூத் படைகள், கெரில்லா பாணியிலான யுத்தத்தை தொடர்ந்தன . உஷ்மானிய கிலாஃபா படைகளின் விநியோக பாதைகளை தாக்குவது தொடர்ந்தது . 1906 அக்டொபரில் ராவ்தாத் முஹன்னா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் அப்துல் அசீஸ் கொல்லப்படுகிறார் .
நஜ்த் மற்றும் காஸீம் ஆகிய நகரங்கள் இப்னு சவூத் வசமாகிறது .பின்னர் அரேபிய கிழக்கு கரையோரம் இப்னு சவூத் படைகள் வசமாகியது.

1915 இல் பிரிட்டனோடு இப்னு சவூத் ‘டாரின் ஒப்பந்தம்’ என்கிற ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறார் .

இதன்படி இப்னு சவூதின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரிட்டன், அதற்கு பதிலாக பரம விரோதியான உஷ்மானிய கிலாஃபாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்னு ரஷீத் குலத்துக்கு எதிராக தொடர்நது போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறது ..

1925 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடைபெறுகிறது . தொண்டு தொட்டே செல்வாக்குடன் இருந்து வந்த ஹாஷிம் குடும்பத்தில் இருந்து புனித மக்கா நகரம் இப்னு சவூத் படைகளால் பிரிட்டிஷ் உதவியுடன் கைப்பற்றப்படுகிறது . ஹாஷிம் கோத்திரம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் கோத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது .

இருந்த பகுதிகளை விடவும் அதிகமான பகுதிகளை இப்னு சவூத் படைகள் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளை இரட்டிப்பாக்கின .பிடித்த பகுதிகளை பிரிட்டன் மூலம் அங்கீகரிக்க வைக்க ஜித்தா உடன்படிக்கை 20 மே 1927 இல் கைச்சாத்தாகிறது.

1930 களில் பிரிட்டன் செய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாக பிரிட்டனின் ஒரு பகுதியாக தனது நாட்டை தாரை வாக்கிறார் இப்னு சவூத். இதற்கு கூலியாக இப்னு சவூதுக்கு சேர் பட்டம் அளித்து கௌரவித்த பிரிட்டன் நன்றிக்கடனாக மாதத்துக்கு 5000 பவுண்ஸை வழங்கி வந்தது.

ஹிஜாஸ், நஜ்த் பிராந்தியமாக அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த பகுதி 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி குடும்பத்தின் பேர் கொண்ட சவூதி அரேபியாவாக மாற்றப்பட்டது .

இப்போது சர்வதேச அரங்கில் காட்சி அளிக்கிற நவீன சவூதி அரேபியாவின் சரிதம் அது .

ஆட்சியை பிடிப்பதற்கும் கிலாஃபாவை உடைப்பதற்கும் பிரிட்டனை அன்று பயன்படுத்திய இப்னு சவூத் பரம்பரை, இன்று அமெரிக்காவுக்கு இராணுவ தளம் அமைப்பதற்கும், மன்னர் ஆட்சியை பாதுகாப்பதற்கும், தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ,பெட்ரோலை மலிவு விலையில் அமெரிக்காவுக்கு வழங்கி வருகின்றது.

தமது பரம்பரை மன்னர் ஆட்சியை பாதுகாக்க அவர்கள் கிலாஃபாவையே பலி கொடுத்தவர்கள் . அவர்களிடம் இருந்தது பலஸ்தீனத்துக்கோ அல்லது சிரியாவுக்கோ தீர்வு வரும் என எண்ணுவது முட்டாள்தளமான எண்ணமாகும் .

ஓவ்வொரு மன்னர் ஆட்சி மாறுகிற போதும் இலவு காத்த கிளி போல ‘அவர் இவரை போல இல்லை ‘என்று உம்மாவின் விடிவை எதிர்பார்த்து இருக்கும் உலக முஸ்லிம்கள் நினைப்பது அறிவீனத்திலும் அறிவீனமே .

ஊரை இரண்டாக பிரித்தால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல மன்னர் ஆட்சி நீடிக்க வேண்டுமானால் மத்திய கிழக்கில் பிரச்சினை இருந்து கொண்டே இருக்க வேண்டும் .அப்போதுதான் மன்னர் ஆட்சி வாழையடி வாழையாக செல்ல முடியும் .மன்னர் பரம்பரை செல்வச்செழிப்போடு சீராக வாழ முடியும்

எனவே இஸ்லாத்தில் என்றுமே கூறப்படாத இந்த மன்னர் ஆட்சிக்கு மத்திய கிழக்கில் முடிவு கட்டப்படுகிற வரை உம்மா எங்கேயோ ஓரு மூலையில் அழுது கொண்டேதான் இருக்கும் .

அரேபிய மக்கள் வறுமைக்கு மீண்டும் போகிற நிலை ஏற்படும் போது வயிற்றுக்கு செல்லுகிற இரத்தம் மூளைக்கு செல்லுகின்ற நிலை மாறும் அப்போது அவர்கள் சிந்திக்கத்தொடங்குவார்கள். இன்ஷா அல்லாஹ் அதற்கான தூரம் தொலைவில் இல்லை..

யா அல்லாஹ்.. எம்மிடையே மாற்றத்தை ஏற்படுத்தி எமது சகோதர சகோதரிகளின் இரத்தத்தையும் கண்ணீரையும் நிறுத்த வழி ஏற்படுத்தி தருவாயாக..

LEAVE A REPLY