நாய் கடித்து 23 வயது இளைஞர் மரணம்

0
153

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஆலய முன்றலில் தூங்கிய போது நாயின் நகத்தினால் கீறப்பட்ட இளைஞன் ரேபிஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி மரணமானதாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு- செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த டேவிட் இன்பராஜா (வயது 23) என்பவரே இவ்வாறு ரேபிஸ் நோய்க்குப் பலியானவராகும்.

இவரும் இவருடைய நண்பர்களான மற்றைய இருவரும் களுவன்கேணி நாக தம்பிரான் ஆலயத்தில் பணி செய்துவிட்டு கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலை நேரம் நண்பர்கள் இருவரும் நாய்க் கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இவருக்கு நாய் அதன் பற்களால் கடிக்கவில்லையாயினும், நாயின் நகக் கீறலுக்கு உள்ளாகியுள்ளார். நாய்க்கடிக்கு உள்ளான நண்பர்களை இவரே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்து தடுப்பூசிகள் ஏற்றுவதற்கு உதவியுள்ளார். எனினும், அவருக்கு தனக்கு ஏற்பட்ட நாயின் நகக் கீறலுக்கு தடுப்பூசி ஏற்ற அவர் நினைக்கவில்லை.

இவ்வாறிருக்கும்போது கடந்த 12-10-2016 அன்று திடீர் தலை வலிக்கு உள்ளாகிய இவர், மறுநாள் 13-10-2016 அன்று காலை குளிப்பதற்காக தயாரான போது, மூச்சுத் திணறலுக்குள்ளாகி அவசரமாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி வெள்ளிக்கிழமை மரணித்துள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவில் “ரேபிஸ்” எனப்படும் நீர் வெறுப்பு நோயினால் மரணித்திருப்பது கண்டறியப்பட்டது. பூனை, நாய், கீரிப்பிள்ளை, நரி, காட்டு எலிகள், குரங்கு, முள்ளம்பன்றி மற்றும் விசர் பிடித்த வளர்ப்புப் பிராணிகள் போன்றவற்றினால் மனிதர்களது உடம்பில் சிறிய கீறல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சென்று அதற்கான தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ரேபிஸ் நோயின் நோயரும்பு காலம் 3 மாதங்களாகும்.

LEAVE A REPLY