முறையான திட்டமிடலுடன் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: உதுமாலெப்பை

0
265

(எம்.ஜே.எம்.சஜீத்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முறையான திட்டமிடலுடன் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லாவினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இப்பிரதேசத்தில் மீதமாகவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முறையான திட்டமிடலுடன் மேற்கொள்வதற்கு அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவும், திணைக்களத் தலைவர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் (12) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராகவும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவராகவும் ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார். தேசிய காங்கிரசின் தலைவரும், மு்ன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லாவின் சிபாரிசின் பேரிலே இந்நியமனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நியமனத்தினை வழங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும், தேசிய காங்கிரசின் தலைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் முறையான திட்டமிடலுடன் செயற்படுத்தப்பட்டது. அக்கரைப்பற்று மக்களின் அதிகப்படியான ஆதரவுடன் அரசியல் அதிகாரத்தினைப் பெற்று அப்பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் நானும் ஒன்றிணைந்து மிகவும் கரிசனையுடன் செயற்படுத்தியுள்ளோம். சிலர் தங்களது அரசியல் இலாபத்திற்காக பிரதேச வாத உணர்வுகளைத் தூண்டி வருகின்றனர்.

அண்மையில் சுகாதார அமைச்சின் 10மில்லியன் ரூபா நிதியில் அக்கரைப்பற்று பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அக்காரியாலய கட்டுமான வேலைகள் இன்னும் இடம்பெறவில்லை இதுதொடர்பில் ஆராய்ந்த போது அக்கட்டிடம் அமைப்பதற்கான காணி இதுவரை ஒதுக்கப்படவில்லை என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. எனவே ஒரு கட்டிடத்தை அமைப்பதற்கு முன்னதாக அதற்கான அனுமதிகளையும், காணிகளையும் சட்டரீதியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பிற்பாடே நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் எதுவித தடைகளுமின்றி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்.

அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதான அபிவிருத்தித் திட்டத்திற்கு மதிப்பீட்டறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ்வபிவிருத்தித் திட்டத்தின் மதிப்பீட்டறிக்கை மாற்றப்பட்டு உரிய முறையில் அனுமதி பெறப்படாது புதிய வேலைத்திட்டத்திற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இந்தவிடயத்தில் அதிகாரிகளை சிலர் தவறுதலாக வழிநடாத்தியுள்ளனர். நமது அதிகாரிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.அக்கரைப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்தியில் திணைக்களத் தலைவர்கள் கடந்தகாலங்களில் அரும்பங்காற்றியுள்ளனர். எதிர்காலத்திலும் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கும் அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

மேலும் அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிகரிகள் மக்கள் பிரதிநிதிகளினால் மதிக்கப்பட வேண்டும் மாறாக அதிகாரிகளின் அந்தஸ்துக்கு மதிப்பளிக்காமல் அரசியல் வாதிகள் நடந்துகொள்வது நிறுத்தப்பட வேண்டுமெனவும், இப்பிரதேசத்தில் மத்திய அரசாங்கம் மாகாண சபை மற்றும் பொது நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விபரங்களை பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY