ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது

0
202

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா, தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் புதன்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் 12, ஆம்லா 25 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

கேப்டன் டு பிளெஸ்ஸிஸும் 11 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த ரிலீ ரஸ்úஸாவ் விக்கெட் சரிவை தடுத்து, நிலைத்து, அதிரடியாக ஆடினார். அவருக்கு அடுத்தபடியாக டுமினி அரைசதம் கடந்து 73 ரன்கள் எடுத்தார்.

சதம் கடந்த ரஸ்úஸாவ், 118 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 122 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். டேவிட் மில்லர் 39, அன்டிலே 11 ரன்கள் எடுத்தும், கைல் அப்பாட் ரன்கள் ஏதும் இன்றியும் ஆட்டமிழந்தனர்.

50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்க அணி. ரபாடா 9, ஸ்டெய்ன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், அதிகபட்சமாக கிறிஸ் ட்ரெமெய்ன், ஜோ மென்னி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மட்டும் நிலைத்து ஆடி அதிகபட்சமாக 136 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் தலா 35 ரன்கள் எடுத்தனர்.

எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஜோ மென்னி, கிறிஸ் ட்ரெமெய்ன் ஆகியோர் டக் அவுட் ஆகினர். இதனால் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலிய அணி.

தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அப்போட், ரபாடா, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 173 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் ரஸ்úஸாவ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY