பொதுசிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது:முஸ்லிம் தனியார் சட்டவாரியம் எதிர்ப்பு.!

0
424

(நதீம்)

பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இது மோடி அரசின் தோல்விகளை மறைப்பதற்கான திசைதிருப்பும் யுக்தி என்று அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் மற்றும் பல முஸ்லிம் அமைப்புகளும் இந்திய அரசிற்காக சட்டக் கமிஷன் தயார் செய்த கேள்விகளை நிராகரித்துள்ளது. மேலும் இதனை முஸ்லிம் சமூகமும் பிற மத சிறுபான்மையினரும் நிராகரிக்கக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மெளலானா முஹம்மத் வலி ரஹ்மானி, மோடி அரசு பதவி ஏற்றத்தில் இருந்து அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றதால் இது போன்று மக்களை திசைதிருப்பும் யுக்திகளை கையில் எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

“மத்திய அரசும் அதன் தலைவர் மோடியும் மக்களின் கவனத்தை அதன் தோல்விகளில் இருந்து திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இது பல முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு அரசியல் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. சட்டக் கமிஷன் இத்தகைய அரசின் ஒரு கிளை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சிறுபான்மை சமூகத்தின் மீது அரசு போர் தொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுசிவில் சட்டம் என்பது பிரிவினையை தூண்டி சமூக அமைதியை கெடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

“இது இந்திய குடிமகனின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு உரிமை பாதுகாக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொது சிவில் சட்டம் இந்த நாட்டிற்கு நல்லதல்ல. இந்நாட்டில் பல கலாச்சாரங்கள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

முத்தலாக் மற்றும் பலதாரமணம் குறித்த மோடி அரசின் நிலையை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அரசு நல்லறிவு கிடைத்து உச்சநீதிமன்றத்தில் அது சமர்பித்த ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி அது செய்யவில்லை என்றால் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கபப்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது முஸ்லிம் சமூகத்தினரிடையே தாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மற்ற முஸ்லிம் தலைவர்கள், பொது சிவில் சட்டம் அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக கருதும் என்றும் இது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும் என்றும் கூறினர். “பொது சிவில் சட்டத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாடு ஏற்ப்படும் என்பது ஒரு மாயை. ஒரே மதத்தையும் தனியார் சட்டத்தையும் பின்பற்றும் இரு பிரிவினர்களிடையே இது குறித்து பல சண்டைகள் நடந்துள்ளன.

பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவது பிரிவினையை ஏற்ப்படுத்தும். இது சிறுபான்மையினர் மனதில் தங்களின் உரிமைகளை இழந்த உணர்வை ஏற்படுத்தும், அது நாட்டில் சீரழிவுகளை ஏற்படுத்தும். இந்நாட்டு மக்களில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம், சீக்கியம், தலித்தியம், மற்றும் ஆதிவாசி பழக்கங்கள் என பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றகூடியவர்கள் ஒன்றுபட்டு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்து நாட்டை விடுவித்தனர்.” என்று கூறியுள்ளனர்.

பிற மதங்களை பின்பற்றும் சமூகங்களில் விவாகரத்துகள் முஸ்லிம் சமூகத்தினரவிட அதிகமாக இருக்கும் வேலையில் முஸ்லிம்களின் முத்தலாக்கை தடை செய்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஜமாத்தே உலமா ஹிந்த் அமைப்பின் தலைவர் மெளலானா அர்ஷத் மதானி, “முஸ்லிம் தனியார் சட்டவாரியம் குரான் மற்றும் ஹதீஸ்களை (நபிகளாரின் நடைமுறைகளை) அடிப்படையாக கொண்டது என்றும் அதனை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகம் என்கிற பெயரில் சர்வாதிகாரத்தை மோடி புகுத்த முயல்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் தனியார் சட்டவாரியம் தாக்கல் செய்த ஆவணங்களை நீதிமன்றம் ஆராயுமானால் இதன் முடிவு தங்களுக்கு ஆதரவாகவே அமையும் என்று இந்த அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களின் இந்த முயற்சிக்கு முஸ்லிம் சமுதாயம் தங்களது பூரண ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY