நுரைச்­சோலை வீட்டுத்திட்டம்: தீராத அவலம்

0
276

(றிசாத் ஏ. காதர்)

மனி­தர்கள் தங்கள் கன­வு­க­ளையும், வரு­மா­னங்­க­ளையும் கொட்டி நிர்­மா­ணிக்­கின்ற வீடுகள் ஒரே நொடியில் இயற்­கைக்கு இரை­யா­கின்ற போது ஏற்­படும் வலி சாதா­ர­ண­மா­ன­வை­யல்ல.

சுனாமி அனர்த்தம் கார­ண­மாக அந்த வலியை உணர்ந்த மக்கள், இன்னும் குடி­யி­ருப்­ப­தற்­கான வீடுகள் இல்­லாமல் அல்லல் படு­வது வேத­னை­யான விட­யமாகும்.

இலங்­கையில் 2004 ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனாமி அனர்­தத்­தினால் கரை­யோ­ரப்­பி­ர­தே­சங்கள் பாதிக்­கப்­பட்­டன. அதிலும் வடக்கு – கிழக்கு மக்கள் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டனர். குறிப்­பாக அம்­பாறை மாவட்டம் கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டனர். பல ஆயிரம் உயிர்­களை இம்­மக்கள் சுனா­மிக்குப் பலி கொடுத்­தனர்.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஓர­ள­வான நிவா­ர­ணங்கள் அரசு, அர­சுசார்­பற்ற நிறு­வ­னங்­க­ளினால் வழங்­கப்­பட்­டன. இருந்­த­போ­திலும் உயிர், உட­மைகள் மற்றும் வாழ்­வி­டங்­களை பறி­கொ­டுத்த மக்­களில் ஒரு தொகை­யினர் இன்னும் அந்த நிலை­யி­லி­ருந்து மீள முடி­யாத நிலையில் வாழ்­கின்­றார்கள் என்­பது ஜீர­ணிக்­க­மு­டி­யாத உண்­மை­யாகும்.

அவர்­களில் ஒரு பகு­தி­யி­ன­ருக்­காகவே, நுரைச்­சோலை வீட்டுத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட நுரைச்­சோலை என்னும் பிர­தேசம் புதி­ய­தொரு பெய­ரல்ல. ஊடகங்கள் வாயி­லாக திரும்பத் திரும்ப உச்­ச­ரிக்­கப்­பட்டு வரும் ஒரு பெய­ராக அது உள்­ளது.

அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­தியில் சுனா­மி­யினால் வீடு­களை இழந்த மக்­க­ளுக்கு, புதி­தாக வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்­காக நுரைச்­சோலைப் பிர­தேசம் தெரிவு செய்­யப்­பட்­டது. அக்­க­ரைப்­பற்றில் இருந்து அம்­பாறை செல்­வ­தற்­கான வழியில் அமைந்­துள்­ளது நுரைச்­சோலை பிர­தேசம்.

சுனாமிப் பேர­வ­லத்தின் பின்னர் இங்­குள்ள அர­சியல் வாதிகள் பலரும் மக்­க­ளுக்கு பல­வ­கை­யான உத­வி­களை மேற்­கொண்­டனர். அத­ன­டிப்­ப­டையில் அப்­போது வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை அமைச்­ச­ரா­க­வி­ருந்த பேரியல் அஷ்ரப், சவூதி அர­சாங்­கத்­திடம் விடுத்த வேண்­டு­கோளின் பிர­தி­ப­ல­னாக நுரைச்­சோலை வீட்டுத் திட்டம் கிடைத்­தது.

இதற்­கி­ணங்க, அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­துக்குச் சொந்­த­மான 50 ஏக்கர் பரப்­ப­ளவு கொண்ட காணியில், கிங் ஹு­சைன் மாதி­ரிக் ­கி­ராமம் என்ற பெயரில் 500 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன.

இந்த வீடுகள் முற்­றிலும் வித்­தி­யா­ச­மான முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. அது மாத்­தி­ர­மன்றி பாட­சாலை, பள்­ளி­வாசல், சந்தைச் சதுக்கம் மற்றும் விளை­யாட்டு மைதானம் என ஒரு கிரா­மத்­துக்குத் தேவை­யான அத்­தனை வச­தி­களும் இந்த வீட்­டுத்­திட்­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றாக, நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை உரி­ய­வர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் சுனா­மி­யினால் வீடு­களை இழந்­த­வர்­களில், புதி­தாக வீடுகள் கிடைக்­காமல் முஸ்லிம் மக்கள் மட்­டுமே உள்­ளனர். அவர்­க­ளுக்கு நுரைச்­சோலை வீடு­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆனால், அதனைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­த­வர்கள், அந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக வழக்குத் தொடுத்­தனர். அதன் விளை­வாக நுரைச்­சோலை வீடு­களை பகிர்ந்­த­ளிப்­பதில் கால­தா­மதம் ஏற்­பட்­டது.

ஆனாலும், பின்னர் நீதி­மன்றத் தீர்ப்புக் கிடைத்­தது. அனைத்து இன மக்­க­ளுக்கும் நுரைச்­சோலை வீடு­களைப் பகிர்ந்­த­ளிக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. ஆனால், அந்தத் தீர்ப்­புக்­கூட அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. காலம் வீணாக இழுத்­த­டிக்­கப்­பட்­டது. இன்னும் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது.

சுனா­மி­யினால் சொந்த வாழ்­வி­டங்­களை இழந்து தவிக்கும் மக்­க­ளு­டைய உணர்­வு­களை ஆட்­சி­யா­ளர்கள் புரிந்­து­கொள்­ளாமல் இருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

இந்த நிலையில், தற்­போது இந்த வீடு­களை பகிர்ந்­த­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது ஆனால் இங்கு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வீடுகள், மக்கள் பாவ­னைக்­கு­ரிய நிலையில் இல்லை.

நுரைச்­சோலை வீட்டுத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு 10 வரு­டங்கள் தாண்­டிய நிலையில் காடு வளர்ந்து காணப்­ப­டு­கி­றது. மட்­டு­மன்றி, அங்­கி­ருந்த பெறு­ம­தி­யான பல பொருட்கள் கள­வா­டப்­பட்­டுள்­ளன. வீடு­களும், ஏனைய கட்­டி­டங்­களும் சேத­ம­டைந்து காணப்­ப­டு­கின்­றன.

எனவே, அங்­குள்ள வீடுகள் மீளத் திருத்­தப்­படல் வேண்டும். திருத்த வேலை­க­ளுக்கும் கணி­ச­மான காலம் எடுக்கும். அதற்­காக பெருந்­தொகைப் பணத்­தி­னையும் செல­விட வேண்­டி­யுள்­ளது.

ஆக மொத்­தத்தில் இன்னும் சில ஆண்­டுகள் இந்த மக்கள் துய­ருடன் வாழ வேண்­டி­ய­தொரு நிலை உள்­ளது.

இங்கு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள 500 வீடு­களில் 303 வீடு­களை ஜனா­தி­பதி செய­லகம் பகிர்ந்­த­ளிக்­க­வுள்­ளது. இவை முஸ்லிம் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் எனத் தெரியவரு­கி­றது. மீத­முள்ள 197 வீடு­க­ளையும் அம்­பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பகிர்ந்­த­ளிப்பார் என அறிய முடி­கி­றது. இவை இங்­குள்ள சிங்­கள, தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

எவ்­வா­றா­யினும், சுனா­மி­யினால் வாழ்­வி­டங்­களை இழந்த முஸ்லிம் மக்­க­ளுக்­காக முஸ்லிம் நாடொன்றின் உத­வி­யுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மேற்­படி வீட்டுத் திட்­டத்­தினை, அந்த மக்­க­ளுக்கு முழு­மை­யாக வழங்­காமல், சுனா­மி­யினால் பாதிக்­கப்­ப­டாத மாற்று இன மக்­க­ளுக்கும் வழங்­கு­வ­தற்கு எடுக்­கப்­படும் தற்­போ­தைய முயற்சி குறித்து பல்­வேறு விமர்­ச­னங்­களும், அதி­ருப்­தி­களும் உள்­ளன.

எது எவ்­வாறு இருப்­பினும், ஒரு சமூகம் தொடர்ச்­சி­யாக அவ­லங்­களை அனுபவிப்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.

சுனாமியினால் வீடுகளை இழந்து 10 வருடங்களுக்கு மேலாக இங்குள்ள முஸ்லிம் மக்கள் அல்லலுறுகின்றனர். அரசாங்கம் அவர்கள் விடயத்தில் இரக்கம் காட்டவேண்டும். அகதி வாழ்வு என்பது முகாம்களில் வாழ்தல் மாத்திரமல்ல. இந்த மக்கள் அதைவிட துயரங்களைச் சுமந்து கொண்டு வாழ்கின்றனர்.

எனவே, நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் அரசியலுக்கு அப்பால் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமையளிக்கப்படுதல் வேண்டும். அந்த வீடுகளை பயன்தரும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.

அதையும் துரிதமாகச் செய்து மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதுதான் கருணையுள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY