எங்கிருந்தோ வந்த ஒருவருக்காக இன்று ஒரு ஊரே அழுகின்றது

0
923

(முஹம்மது மஸாஹிம்)

எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் பல்வேறுபட்ட ஆளுமைகளை கடந்து வந்துள்ளேன். ஆனாலும், ஒரு சிலருடன் நான் நெருங்கிப் பழகியது ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே என்றாலும், பசுமரத்து ஆணிபோல அவர்களது வார்த்தைகளும் நடத்தைகளும் மனதிலே பதிந்துவிடும்.

அத்தகைய ஒரு ஆளுமை கொண்ட மாபெரும் மனிதரைத்தான் இன்று காத்தான்குடி மண்ணும் மக்களும் இழந்து கவலையில் தவிக்கின்றனர்.

“உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்..” என்ற டாக்டர் அப்துல் கலாம் கனவு கண்ட பெருமகனாக மக்களுடன் மக்களாக வாழ்ந்து மறைந்த அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள், எப்படி இந்தியாவுக்கு இலங்கை கொடுத்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரோ, அதேபோன்றே இலங்கைக்கு இந்தியா அளித்த மாபெரும் மக்கள் மனம்வென்ற தலைவராகவே வாழ்ந்து வந்தார் என்பதற்கு என் சிறுவயது சம்பவம் ஒன்றை இங்கே நினைவு கூறுகின்றேன்.

ஆம். காத்தான்குடி மக்கள் சேவைக்காக உயிரைக் கொடுத்த மற்றுமொரு ஆளுமை சேர்மன் அஹமது லெப்பை அவர்களை, எதிர்பாராதவிதமாக மர்ம நபர்கள் சுட்டுவிட்டார்கள் என்ற தகவல் மக்களை வந்தடைந்தபோது, கூடவே சேர்ந்து அதனைக் கேள்விப்பட்ட “பெரிய ஹஸ்ரத்” அவர்களும் மயங்கி விழுந்துவிட்டாராம் என்ற செய்தியும் வர, “அவருக்கும் ஏதாவது துக்கத்தில் ஆகிவிடுமோ..?“ என்று மக்கள் பரிதவித்தது இன்றும் என் மனதில் ஆழமான வடுவாக உள்ளது.

ஆம். எனக்கும் அவருக்கும் எவ்வாறு மானசீக தொடர்பு ஏற்பட்டது..?

காத்தான்குடியில் ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது. பிள்ளைகளின் இயல்புகளை அவதானிக்கும் பெற்றோர், பாடசாலைக் கல்வியில் பெருமளவு ஆர்வமில்லாதவர்களை மார்க்க கல்வியிலாவது பிரகாசிக்கட்டும் என்ற ஒரு நன்நோக்கத்திலும், குறைந்தது குடும்பத்தில் ஒரு “ஆலிம்” ஆவது இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், அப்துல்லாஹ் ஹஸ்ரத் அதிபராக கடமை புரிந்த ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியில் சேர்ப்பது வழமை.

அவ்வாரே எனது இரண்டாவது சகோதரரையும் – பலாஹ் அரபுக் கல்லூரியில், சேர்கப்பட்டு சில காலங்கள் கழிந்த நிலையில், அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி போன்று ஏற்பட்டதால் அவரது வரவு ஒழுங்கில்லை என்றும் அதனால் பாடத்தில் போதிய தேர்ச்சியில்லை என்றும் நிர்வாகத்தினால் பலதடவை மன்னிப்பளிக்கப்பட்டு அவரை அங்கிருந்து நிறுத்தவேண்டிய ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அப்போது பெருங் கவலையில் ஆழ்ந்திருந்த எனது தாயாருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில், நான் – “அவருக்கு பதிலாக அந்த அரபுக் கல்லூரியில் இணைந்து உங்கள் கவலையைப் போக்குகின்றேன் உம்மா..” என்று அடிக்கடி கூறும்போதே என் மனதில், அந்த அரபுக் கல்லூரியும், அதனது அதிபர் பெரிய ஹஸ்ரத் அவர்களும் பால்ய பருவத்திலேயே வந்தமர்ந்து விட்டார்கள்.

இருப்பினும், என் “ஆலிம்” கனவு பலிக்கவில்லை. காரணம் நான் “ஸ்கொலர்சிப்” யில் பாஸ் பண்ணியதுதான். ஆம்.. “இளமையில் புலமையை வெளிப்படுத்தியுள்ள இவர் பாடசாலைக் கல்வியில் சாதிக்க வாய்புள்ளதால் – இவரது பாதையை மாற்றவேண்டாம்..” என எனது ஆரம்ப பாடசாலை அல்ஹிறாவின் அப்போதைய அதிபரும் எனது சொந்தமுமான ஸைலத்து டீச்சர் என்றழைக்கப்படும் மர்ஹூம் முர்ஸலிமா அவர்கள் – எனது தாயாரிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, எனது தாயாரும் தொடர்ந்து படிக்கட்டும் என விட்டுவிட்டார்.

ஆனாலும், இறைவன் உதவியால் – காலம் என் வாழ்க்கையை வித்தியாசமாக திருப்பிப் போட்டு, எந்தக் கல்லூரிக்கு மாணவனாக செல்ல ஆசைப்பட்டேனோ அதே அரபிக் கல்லூரிக்கு, ஆசானாகச் சென்று அந்த மாமனிதரின் கையால் பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிடுமளவிற்கு என் எண்ணங்களை நிஜமாக்கியது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆம், நானும் என் பாடசாலைக் கல்வியை முடித்து தொழில்நுட்பக் கல்வியைத் தொடர்ந்து, மைசொப்ட் என்ற ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்து நண்பர் ஒருவருடன் இணைந்து நடாத்தி வந்தபோது, அங்கு பகுதிநேரமாக பயிலவந்த அரபிக் கல்லூரி மாணவன் ஒருவரின் வேண்டுகோளிற்கு இணங்க நிர்வாகத்துடன் கலந்துபேசி, பலாஹ் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை ஆசிரியராக இணைந்து கொண்டேன்.

அப்போதுதான் என்னுடைய இந்த வித்தியாசமான வாழ்க்கைப் பயணம் அந்த மாணவர்களை எவ்வாறு சந்திக்கவைத்தது என்ற ஆச்சரியமான உண்மையை அவர்களது மாணவர் மன்ற நிகழ்வில் தன்னம்பிக்கை உரை ஒன்றை ஒரு ஆசானாக ஆற்றும்போது பகிர்ந்து கொள்ள முடிந்தது.

அத்துடன் இன்று எமது ஊரே இழந்து தவிக்கும் அந்த மாமனிதர், அல்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுடன் நேரடியாக ஒரு சில வார்த்தைகள் உரையாடவும் அது ஒரு சந்தர்ப்பமாய் அமைந்தது.

என்னைக் காணுகின்ற போதெல்லாம், என்றுமே இன்முகத்துடன் நான் கூறும் ஸலாத்திற்கு பதில் கூறியவராக வரவேற்கும் அவர் – ஒருநாள் ஒரு சில பேரீச்சம் பழங்களை என் கையில் தந்து, “இது மக்காவில் இருந்து கொண்டுவந்தது..” என்று மிக சந்தோஷமாக தனது அன்பை ஒரு குழந்தையைப் போல என்னிடம் வெளிப்படுத்தினார்.

அத்துடன் இன்னொரு சமயம் சந்தித்தபோது கூறினார் “நாங்கதான் சூரியனையும், சந்திரனையும் பார்த்துக் கொண்டே வாழ்ந்துவிட்டோம்.. இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாமே படிக்கிறாங்க..” என்ற அர்த்தம்பட அவர் கூறிய வசனத்தில், அவர் மக்கள் மத்தியில் எவ்வளவுதான் பெரிய செல்வாக்கு உள்ளவராக இருந்தபோதிலும் – எந்தவித அகங்காரங்களும் இன்றி, அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அவரிடம் வளர்ந்திருந்ததை என்னால் உணர முடிந்தது.

அவர், இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடமையாற்றி பல்வேறு மக்களது மனங்களையும் வென்றிருந்தபோதிலும் காத்தான்குடி மண்ணுக்கான அவரது தன்னலமற்ற பணி பிரமாண்டமானது. அதனால்தான் எங்கிருந்தோ வந்த அந்த ஒருவரின் இழப்பிற்காக இன்று காத்தான்குடி என்ற ஒரு ஊரே அழுகின்றது.

அந்த மன்னின் மைந்தன் என்ற வகையில், அவருடனான எனது நினைவுகளையும் இங்கே மீட்டி, அவரது அற்புதமான சேவைகளைப் பாராட்டி, நன்றிகளுடன் இதைப் பதிவுசெய்கின்றேன்.

அவரது உள்ளத்தை அறிந்த அல்லாஹ், எமது மன்னுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பொருந்திக் கொண்டு – அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்கவேண்டும் என்றும் அவர்மீது கொண்ட அளவுகடந்த அன்பு எம்மை இணைவைப்பில் தள்ளிவிடாதிருக்கவும் அனைவரும் பிரார்த்திப்போமாக.. ஆமீன்.

LEAVE A REPLY