அப்துல்லாஹ் மௌலவி அவர்களின் இழப்பு இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகக் கருதுகிறேன் -கிழக்கு முதல்வர்

0
274

காத்தான்குடி ஜாமிய்யதுல் பலாஹ்வின் அரபுக் கலாசாலையின் அதிபர் அப்துல்லாஹ் மௌலவி அவர்களின் இழப்பு இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாக கருதுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

தற்போது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளமையினால் அன்னாரின் ஜனாஸாவின் பங்கேற்க முடியாமல் உள்ளமை வருத்தமளிப்பதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

இன்று தன் மனம் இறை மறையின் வாசகங்களை சுமந்திருப்பதற்கு முக்கிய காரணமாய் அமைந்தவர் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் இறுதி வரை தன்னை தன் சொந்த மகன் போலவே பார்த்துக் கொண்டதை எண்ணும் போது கண்களில் கண்ணீர் வருவதாகவும், காத்தான்குடியில் இறை மணம் கமழ ஹிப்ழ் மத்ரஸா ஒன்று வேண்டும் என விடாப்பிடியாக நின்று அதனை உருவாக்குவதில் வெற்றி கண்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜம்மிய்யதுல் பலாஹ் அரபுக்கலாசாலையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஹாபிழ்களை உருவாக்கி நாடெங்கும் சன்மார்க்கத்தின் நறுமணம் வீசும் உன்னத பணி செய்த அப்துல்லாஹ் மௌலவி அவர்களின் நாமம் இம்மையிலும் மறுமையிலும் புகழ் பெற்றதாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை.

காத்தான்குடி நகரையே மார்க்க நெறிமுறைக்குள் வழிநடத்திய ஆசானாக மட்டுமல்லாமல் சமூக ரீதியான பிரச்சினைகள் எழுந்த போதெல்லாம் நல்லெண்ணத் தூதுவராக செயற்பட்டு அப்துல்லாஹ் மெளலவி மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

புதிய தொழுகை நேரம் அமைப்பது தொடர்பில் நாட்டில் பிரச்சினைகள் எழுந்த போதுகூட இவரின் தலையீட்டினாலேயே அது தீர்க்கப்பட்டது என்பதுடன், ஆளுமை மிக்க அப்துல்லாஹ் மௌலவி அவர்களின் இடத்தை மீள் நிரப்புவது இயலாத காரியமாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்னாரை எல்லாம் வல்ல அல்லாஹு சுப்னால்லாஹுத் தஆலா பொருந்திக் கொண்டு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக….

LEAVE A REPLY