அப்துல்லாஹ் ஹஸரத்தின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் இழப்பு: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
533

hizbullah-abdullah-hasarath-2காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர், அதிபர் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அஷ்ஷைக் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் வபாத்தான செய்தி கேட்டு நாங்கள் ஆழ்ந்த கவலை அடைகின்றோம். அன்னாரின் மறைவு இலங்கை முஸ்லிம்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மௌலானா மௌலவி அஷ்ஷைக் அப்துல்லாஹ் ஹஸரத் மறைவையொட்டி இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியை நிறுவி ஆயிரக் கணக்கான உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தூய முறையில் கற்றுக் கொடுத்து, முஸ்லிம் சமூகம் சிறப்பானதொரு வாழ்க்கை வாழ்வதற்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர்கள்.

அவர்கள் தன்னுடைய இந்தியத் திரு நாட்டிலே இருந்து இலங்கைக்கு வந்து இந்த மண்ணிலே தன்னுடைய வாழ் நாள் முழுவதும் தனது குடும்பம் உறவினர்கள் என சகலவற்றையும் துறந்து முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காவும் வளர்ச்சிக்காவும் அயராதுபாடுபட்ட ஒருவர்.

கொழும்பு சம்மான்கோட்டு பள்ளிவாசல் தலைவர் என்ற அடிப்படையில் புதியதொரு பள்ளிவாயலாக அவர்களுடைய காலத்திலே மிகச் சிறப்பாக அப்பள்ளியை கட்டுவதிளும் நிதியை பெற்றுக் கொள்வதிலும் அங்கிருந்த நம்பிக்கையாளர்களோடு சேர்ந்து செயற்பட்டவர்கள்.

இந்த நாடு மட்டுமன்றி இந்தியாவில் கூட எல்லோராலும் கண்ணியமாக மதிக்கப்படுகின்ற அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுக்கு அல்லாஹுத்தாலா பாவங்களை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனத்தை வழங்க வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

அதே போன்று அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கத்திலும் எல்லோரும் கலந்து கொண்டு அவர்களுக்காக பிரார்த்திப்போமாக.

அவர்கள் தமது இறுதி மூச்சு வரை தொழுகையைக் கடைப்பிடிப்பதிலும் மார்க்க விடயங்களிலும் தன்னை மாத்திரமின்றி ஏனையோரையும் ஈடுபடுத்துவதிலே கரிசனையோடு செயற்பட்டவர்கள்.

பிழையைப் பிழை என்று சொல்வதிலே எவ்வித தயக்கமும் காட்டாதவர்கள்.

அத்தகைய பெருந்தலைவரை மார்க்க அறிஞரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்குமான இழப்பாக அவர்களின் இழப்பு அமைந்திருக்கின்றது.

இம்மண்ணிலே தனது இறுதி முடிவு அமைய வேண்டும் என்ற அவர்களது எண்ணப்படியே அதை அல்லாஹ் நாடியுள்ளான். அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவனத்தை வழங்க வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம். என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY