கிழக்கு மாகாணத்தில் சர்வதேச விமான நிலையம் வேண்டும்: முதலமைச்சர்

0
346

“கிழக்கு மாகாணத்தில், சர்வதேச விமான நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளோம்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்தார்.

“இந்த விமான நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைக்கும் புணானைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைய வேண்டும் என்ற சாத்தியவள அறிக்கையையும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண உற்பத்தித் தொழிற்துறை பற்றி வினவியபோதே, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர்,

“கிழக்கு மாகாணத்தில் செயலற்றுக் கிடக்கும் 105 கைத்தறி விற்பனை நிலையங்கள், உற்பத்தித் திறன் உள்ள விற்பனை நிலையங்களாக மறுசீரமைக்கப்படும்.

சுமார் 4,000 தொழிலாளர்கள் பணிபுரிந்த வாழைச்சேனை காகித ஆலை, தற்போது தூர்ந்துபோய்க் கிடக்கிறது. இதனை அப்படியே பாழடைந்து போகும் இடமாக விட்டு விடாமல் மறுசீரமைக்கப்பட்ட கைத்தொழில் உற்பத்தி வலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாரிய, நடுத்தர மற்றும் சிறிய கைத்தொழில் புரட்சி வலயமாக கிழக்கை மாற்றுவதற்குரிய திட்டங்களைப் பற்றி நாங்கள், அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறோம். அத்தகையதொரு கைத்தொழில் புரட்சி ஏற்படும்போது, கிழக்கு மாகாணம், ஓர் உற்பத்தி ஏற்றுமதி வலயமாக மாறும்” எனக் கூறினார்.

சர்வதேச விமான நிலையம் தொடர்பில் தெரிவித்த அவர், “கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத்துறை மூலம் அபிவிருத்தி செய்வதற்கு இந்த சர்வதேச விமானப் போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும் எனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் ஜனாதிபதியும் பிரதமரும் அக்கறையோடு இருப்பதை அறிய முடிகிறது” எனக் குறிப்பிட்டார்.

“இது ஒரு நல்ல சகுனம். அதனை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தி இந்த மாகாணத்தை வளங்கொழிக்கும் பிரதேசமாக மாற்ற அனைவரும் இன மத கட்சி பேதங்கள் மறந்து ஒன்றிணைய வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY