நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்; அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது: மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி

0
364

mahinda-in-batti(விஷேட நிருபர்)

”இன்று நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் பிரித்து நாட்டை சீரழிக்க முற்படுகின்றனர்“ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில்,

”நாட்டில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த மிகவும் பயங்கரமான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

காத்தான்குடி பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதே போன்று ஆலயங்களிலும் பௌத்த விகாரைகளிலும் தாக்குதல்கள் இடம் பெற்றதுடன் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியிருக்கவில்லை. ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்வதவதற்கு அச்சப்பட்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் வருவதற்கு அச்சப்பட்டனர்.

இந்த நிலையை மாற்றி அனைவரும் சுதந்திரமாக இருக்கக் கூடிய நிலைமையை மாற்றியமைத்தேன்.

வடக்கு கிழக்கில் சரியான வீதிப் போக்குவரத்து இருக்கவில்லை. அவற்றினை செப்பணிட்டு புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்தேன். யுத்தத்தினால் சிதைந்து போன பாலங்களை குறுகிய காலத்தினுள் புனரமைத்துக் கொடுத்தேன்.

மிகக்குறுகிய காலத்தினுள் நாட்டை அபிவிருத்தி செய்தேன். எனது அபிவிருத்தியைப் பார்த்து ஆச்சரியமைடைந்தனர். ஆனால் இன்றுள்ள நிலைமையை பாருங்கள்.

இன்று நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் பிரித்து நாட்டை சீரழிப்பதற்கு திட்டமிடுகின்றனர்.

வடக்கு கிழக்கு இணைப்புக்கு மக்களின் ஆணையைக் கோருவதற்காக தேர்தலை நடாத்துவோம் என்றவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இது மக்களுக்கு செய்யும் இவர்கள் செய்யும் பெரிய அநியாயமாகும்.

தற்போதுள்ள அரசியல் யாப்பில் எந்த மாற்றத்தினையும் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை.

அரசாங்க தரப்புச் செய்திகள் ஊடகங்களில் வருகின்றது. ஆனால் எங்களது செய்திகள் எங்களது கருத்துக்கள் ஊடகங்களில் தணிக்கை செய்யப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக எழுதினால் அதை எடுத்து விடுங்கள் என கூறுகின்றனர்.

அவர்களின் தேவைகளுக்கு ஊடகவியலாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.

எங்களிடம் 51 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியிடம் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் எதிர்க் கட்சி யாரிடம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பாராளுமன்றத்தில் எங்களுக்கு பேசுவதற்கு சரியான நேரம் கூட தரப்படுவதில்லை.

பாராளுமன்றத்தில் இருக்கும் சபாயநாயகரும் கூட அரச தரப்பானவராகும். இந்த நிலையில் பாராளுமன்றத்திலும் உன்மையான ஜனநாயம் இல்லை. எதிர்க்கட்சி தலைவரும் அரசாங்க தரப்புக்கே ஆதராவாக செயற்படுகின்றார்.

இன்று பாராளுமன்றத்திலுள்ள நிலைமை ஜனநாயகமானதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை பாரிய இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவை காட்டி அச்சுறுத்துகின்றனர்.

12,000 பயங்கரவாதிகளை புனர்வாழ்வளித்து அவர்களை விடுவித்துள்ளேன். ஆயுதங்களுடன் சயனைட் குப்பிகளுடன் நடமாடிய தமிழ் இளைர்களை இன்று பேணாவுடன் நடமாட வைத்துள்ளேன்.

இன்று பாதுகாப்பு படை வீரர்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கின்றனர்.

ஜனாநாயகத்திற்கு திரும்பி கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அடைத்து வைத்துள்ளனர். ஆனால் பயங்கரவாதிகளை வெளியே சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர்.

பயங்கரவாதம் என்பது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாகும். இது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கான பிரச்சினையல்ல நாட்டுக்கான பிரச்சினையாகும்.

நாங்கள் அனைவரையும் ஒன்றிணைத்துத்தான் பங்கராவதத்திற்கு எதிராக போராடி வெற்றியடைந்தோம். நாட்டை துண்டாடி எவ்வாறு ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகின்றனர்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளர் அருண்தம்பி முத்து உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY