சந்தாங்கேணி மைதான அபிவிருத்திக்கு: அஸ்வர் பாராட்டு

0
178

ahm-azwer-(எம்.எஸ்.எம். ஸாகிர்)

கிழக்கு மாகாணத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடைய கரங்களினால் ஆரம்பிக்கப்பட்டதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளருமான ஏ. எச்.எம். அஸ்வர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

கல்முனையை மையமாகக் கொண்டுள்ள சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வுகளை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மைதானம் சர்வதேச மட்டத்துக்கு உயர்த்தப்பட வேண்டுமென பாராளுமன்றத்திலே ஒரு தனிப்பட்ட பிரேரணையைக் கொண்டு வந்தேன். அப்பொழுது பாராளுமன்றத்திலிருந்த மயோன் முஸ்தபாவும், எஸ்.எஸ்.பி. மஜீதும் அதற்கு ஆதரவாகப் பேசினார்கள் என்பதையும் நினைவு கூற விரும்புகின்றேன்.

தற்பொழுது விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருக்கின்ற எனது அன்பர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்திலே எனது பிரேரணைக்கு ஆதரவாக தன் கருத்துக்களைச் சமர்ப்பித்தார்.

நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த நல்ல அனுபவம் எனக்குண்டு. குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக. எனினும், கிழக்கு மாகாண வாலிபர்களுடைய வளர்ந்து வருகின்ற விளையாட்டுத் திறமைகளுக்கு முக்கியமாக ஒரு மைதானம் வேண்டும் என்பதை அன்றே உணர்ந்தேன்.

கல்முனையில் பிரசித்தி பெற்ற ஹொலிபீல்ட் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விழாக்களில் கலந்து கொண்ட போது இதனை வலியுறுத்தி இருக்கின்றேன். கிழக்கு மாகாணத்தின் கடலோர பிரதேசத்தை மையமாகக் கொண்டுள்ளது இந்த கல்முனை நகரம்.

கல்முனை நகர் பல அபிவிருத்தித்திட்டங்களைக் காலாகாலம் கண்டு வருகிறது. ஆனால் இந்த விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டால், கிழக்கு மாகாணத்தில் உள்ள வாலிபர்களுக்கு ஒரு நல்ல விளையாட்டு மைதானம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கான காலம் இப்போது கணிந்துள்ளது.

எனவே, எம்மோடு பாராளுமன்றத்தில் பல வழிகளிலும் தர்க்கம் புரிந்த ஆனால் மிகவும் தோழமை போன்று இருக்கின்ற விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடைய கரங்களினால் இந்த சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திபணிகள் ஆரம்பமாவதையிட்டு எனது மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

LEAVE A REPLY