திருகோணமலை மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் பதவி உயர்வு

0
221

(அப்துல்சலாம் யாசீம்)

தனக்குரிய உரிமையை உறுதிப்படுத்த இருமுறை உயர்நீதிமன்றம் சென்றதன் மூலம் திருகோணமலை மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் இலங்கை திட்டமிடல் சேவையின் முதலாம் வகுப்புக்கு பதவி உயர்வு பெற்றார்.

கிழக்குப் பல்கலக்கழக கலைமாணிப்பட்டதாரியான இவர் தேசியக் கல்வி நிறுவகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா தகைமையும் பெற்றிருந்தார். இதனால் 2000ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்ட இலங்கை திட்டமிடல் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சையும் எழுதினார்.

இந்தப் பரீட்சை பெறுபேற்றின்படி தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தையும், தமிழ்மொழி மூலப் பரீட்சார்த்திகளுள் முதலிடத்தையும் பெற்றார். பெறுபேற்று அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றியோருக்கு 2002.01.02ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்ட போதும் இவருக்கு நியமனம் கிடைக்கவில்லை. காரணம் கேட்ட போது தேசிய கல்வி நிறுவகத்தின் சான்றிதழை அங்கீகரிக்க முடியாது என்று கூறப்பட்டது.

இதனை உறுதிப்படுத்த அப்போது உயர் நீதிமன்றம் சென்றார். இவரது உரிமை பாதிக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியதால் 2002.01.02ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் 2004 இல் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதன்படி மொறவெவ மற்றும் கிண்ணியா பிரதேச செயலகங்களில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக இவர் கடமையாற்றினார். தற்போது திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.

10 வருட முடிவில் அதாவது 2012இல் 2ஆம் வகுப்பு பதவி உயர்வுக்காக விண்ணப்பித்தார். 2 வருடம் பிந்தி திட்டமிடல் சேவையில் இணைந்ததால் 10வருட சேவை பூரத்தியாக வில்லை என்று கூறி இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நியமனம் பிந்திக் கிடைத்தமைக்கு தான் காரணமல்லவென்றும், உயர்நீதிமன்ற முடிவின் பிரகாரமே தனக்கு நியமனம் கிடைத்தது என்று கூறிய போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்தனர்.

எனவே, தனது உரிமையை உறுதிப்படுத்த மீண்டும் 2012 இல் உயர்நீதிமன்றம் சென்றார். தொடர்ச்சியாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவரது சேவைக்காலத்தை முதல் நியமனத் திகதியிலிருந்து கருத்தில் கொள்வதாக பொதுச்சேவை ஆணைக்குழு கடந்த 2015 பிற்பகுதியில் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த அடிப்படையிலேயே இவருக்கு வகுப்பு 2 பதவி உயர்வு வழங்கப்பட்டு தற்போது வகுப்பு 1 க்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் உரிமை மறுக்கப்படும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு இவரது போராட்டம் நல்லதொரு வழிகாட்டலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவரைப்போல் பாதிக்கப்பட்ட பீ.சிவானந்தன், எஸ்.சிவபாலா ஆகியோரும் உயர்நீதிமன்றத்திற்கு சென்றே தற்போது இந்தப் பதவி உயர்வைப் பெற்றுள்ளனர். சிரேஷ;ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரே இந்த இரு வழக்குகளிலும் இவர்கள் சார்பாக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Attachments area

LEAVE A REPLY