தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா வழங்க வேண்டும் – முஸ்லிம் முற்போக்கு முன்னணி செயலாளர் அஸ்வர்

0
198

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இருதயமுள்ள ஒரு அரசாங்கம் என்றால் ஜீவனோபாயத்துக்காக வீதியில் இறங்கிப் போராடும் தோட்டத் தொழிலாளர்களின் துயரைத் துடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளரும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ. எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி நடாத்துகின்ற வீர மரண போராட்டத்தைப் போன்ற உத்வேகத்தை, ஒரு தசாப்தத்தை நாம் மலைநாட்டு வரலாற்றில் எப்பொழுதும் கண்டதில்லை. இந்த அரசாங்கத்தை அவ்வளவு வெறுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் ஜீவாதார உரிமையைத்தான். இந்தப் பொருளாதார சிக்கலுக்கிடையில் 1000 ரூபா சம்பளத்தை மட்டும்தான் அவர்கள் வேண்டுகிறார்கள். அதையும் கூட எழுப்பி மழுப்பி அரசாங்கம் கைநழுவுகிறது.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு மலைநாட்டுத் தமிழர்களும் பெருவாரியாக வாக்களித்தார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு பாண் விலை மாவிலை குறைக்கப்படும் என்று கூறி இந்த அரசாங்கத்திலுள்ள தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் படிதான் இவர்கள் இப்படி ஜீவமரணப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.

இதில் மிகவும் உருக்கமான நிகழ்வு என்னவென்றால், கருத்தரித்த தாய்மார்கள் தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது வீதியில் இறங்கிப் போராடுவதுதான். எனவே இருதயமுள்ள ஒரு அரசாங்கம் என்றால் இவர்கள் துயரைத் துடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனிமேலும் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதற்கு இடமளிக்க முடியாது. எனவே முஸ்லிம் முற்போக்கு முன்னணி இந்தத் தோட்டத் தொழிலாளர்களுடைய நியாயப்பூர்வமான கோரிக்கையை ஏக மனதாக ஆதரிக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்று நாட்டின் ஏனைய மக்களைப் போன்று நிம்மதியாக வாழ்வதற்கு அவர்களுக்கும் உரிமை இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களைப் போன்று பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டும், அவர்களுடைய வைத்திய செலவுகளைப் பார்க்க வேண்டும் மற்றும் இதர செலவுகளையும் பார்க்க வேண்டும்.

எனவே அவர்களை நிம்மதியாக தங்களுடைய தோட்டத்து இல்லங்களுக்கு திருப்பி அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித் தந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு செவி சாய்த்து நிச்சயமாக அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY