வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் யுத்தத்தின் பங்காளிகளல்லர் ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் – பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்

0
247

-எம்.ஐ.அப்துல் நஸார்-

வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் யுத்தத்தின் பங்காளிகளல்லர் ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என தேசிய சூறா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கும்இ தேசிய சூறா சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று சம்மேளனத் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.தௌபீக் தலைமையில் கடந்த சனிக்கிழமை (08) சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் அல்ஹாஜ் ஏ.அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இரவு எட்டு மணியளவில் நடைபெற்றபோது சிறப்புரையாற்றுகையிலேயே பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்குக் கிழக்கு சார்ந்த முஸ்லிம்கள் யுத்தத்தின் பங்காளிகளல்லர் ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் அவற்றை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நாங்கள் பாதிக்கப்பட்டதை நாங்கள் உணர்கின்றோம்.

இந்த யுத்தத்தால் சாதாரணமான மக்கள் சிங்களவர்களாக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி அவர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள தயாரா? அவர்களது உணர்வுகளும் உணர்ச்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன, உங்களுடைய உறவுகளும் இழக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோமா?

தமிழ் தரப்பில் மிக ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் சொல்லப்படுகின்ற விடயம் என்னவென்றால், முஸ்லீம்கள் சார்ந்த ரீதியாக எமக்கு ஏற்பட்ட வடு இன்னும் எங்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பதாகும். இதனை நான் சரி என்று சொல்ல முற்படவில்லை. இந்த வடுவை நோக்கி இரு சமூகமும் செல்லுமாக இருந்தால் நாங்கள் வாழ்கின்ற இந்தப் பிரதேசத்தில் இன்னும் பல நூறு வருடங்களுக்கு சமாதானமாக வாழ முடியாது.

எனவே தற்போது எமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் இருக்கின்ற ஒரே வழி இரு சாராரும் மறுசாராருக்கு ஏற்பட்ட துன்பத்தை, துயரத்தை, துரதிஷ்டவசமாக முப்பது வருடங்களாக ஏற்பட்ட பாதிப்புக்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அங்கீகரிக்கவும் வேண்டும். அதன் மூலமாக ஒரு சமாதான உறவை கட்டியெழுப்ப முற்பட வேண்டும் என பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்ற பள்ளிவாயல்களின் நம்பிக்iயாளர்களும் நிறுனங்களின் பிரதிநிதிகளும் தேசிய சூறா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஃமூத், பிரதித் தலைவரும் ஜாமிஆ நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் நளீமி, முன்னாள் பிரதித் தலைவர் அல்ஹாஜ் றஷீட் எம்.இம்தியாஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம் மற்றும் எம்.அஜ்வதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY