நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டொனால்ட் டிரம்ப்

0
80

அமெரிக்காவின் அதிபராக நான் பொறுப்பேற்றால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை சிறையில் தள்ளுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

2005-இல் தனிப்பட்ட உரையாடலில் பெண்களைக் குறித்துப் பாலியல் ரீதியான பல கருத்துகளை டிரம்ப் பேசினார். இதன் ஒலிப்பதிவு இணையதளத்தில் வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தான் முன்பு வெளியிட்ட கருத்துக்கு டிரம்ப் வருத்தம் தெரிவித்தார். அவருடைய மனைவி மெலானியா, குடியரசுக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் ஆகியோரும் அந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் பல மூத்த தலைவர்கள் அதிபர் தேர்தலிலிருந்து டொனால்ட் டிரம்ப் விலக வேண்டும் என நெருக்கடி தரத் தொடங்கியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியுடனான இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் இருவரும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

விவாதத்தின் போது கொள்கைகள் தொடர்பான அம்சங்களைவிட ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டுவதிலேயே பெரும்பகுதி நேரம் கழிந்தது. பெண்களைத் தரக்குறைவாகப் பேசியவர், வரிகட்டாமல் ஏமாற்றியவர் என டொனால்ட் மீது ஹிலாரி கிளிண்டன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த டிரம்ப், அது, நடந்து முடிந்த பழைய கதை. நான் வெள்ளை மாளிகையில் அதிபராகும் வாய்ப்பைப்பெற்றால், ஹிலாரி கிளிண்டனைச் சிறையில் அடைப்பேன். அரசு அலுவல்களுக்காக தனிப்பட்ட இமெயில் சர்வரை பயன்படுத்தி, அதன்வழியாக நாட்டின் முக்கிய ரகசியங்கள் கொண்ட சுமார் 30 ஆயிரம் முக்கிய கடிதங்களை கசியவிட்டு, நாட்டின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி ஹிலாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதை விசாரிக்கத் தனிப்பட்ட வழக்குரைஞரையும் நியமிப்பேன் என்றார் டிரம்ப். தேசிய பாதுகாப்புக்குத் ஹிலாரி பங்கம் விளைவித்துவிட்டதாக அவர் சாடினார். தமது செயல்களுக்காக ஹிலாரி வெட்கப்படவேண்டும் என்றார் டிரம்ப்.

இதற்கு பதில் அளித்த ஹிலாரி, இவ்வளவு ஆவேசம் கொண்ட நபரை இந்த நாட்டின் சட்டத்தை பாதுகாப்பவராக வெள்ளை மாளிகைக்கு நீங்கள் (வாக்காளர்கள்) அனுப்பாமல் இருப்பது நல்லது என்றார்.

இதற்கு நெற்றியடியாக தனது கருத்தை பதிவு செய்த டிரம்ப், (நான் வெள்ளை மாளிகையில் சட்டத்தை பாதுகாக்கும் அதிபர் பொறுப்புக்கு வந்து விட்டால்) ஏனென்றால், நீங்கள் சிறைக்கு போக வேண்டியதாகிவிடும் என்று கூறினார்.

சிரியா விவகாரம், லிபியாவில் நடந்த யுத்தம், அகதிகள் பிரச்னை போன்றவை குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேட்பாளர்களுக்கு 2 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

வரும் 19-ஆம் தேதியும் டிரம்ப் – ஹிலாரி ஆகியோருக்கு இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது.

LEAVE A REPLY