இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தேசிய சூறா சபையின் கிளைகள் நிறுவப்பட்டு சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்

0
336

-எம்.ஐ.அப்துல் நஸார்-

இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தேசிய சூறா சபையின் கிளைகள் நிறுவப்பட்டு சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என தேசிய சூறா சபை பிரதிநிதிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கும், தேசிய சூறா சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று சம்மேளனத் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.தௌபீக் தலைமையில் கடந்த சனிக்கிழமை (08) சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் அல்ஹாஜ் ஏ.அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இரவு எட்டு மணியளவில் நடைபெற்றபோது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனியினால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவர் தனது கோரிக்கையில் தெரிவித்ததாவது, இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தேசிய சூறா சபையின் கிளைகள் நிறுவப்பட்டு சமூகப் பிரச்சினைகள் உள்வாங்கப்பட்டு துறைசார்ந்த அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஊடாக அவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும். சிறய பிரச்சினைகளும் தற்போது பெரிய விடயங்களாக பார்க்கப்பட்டு விமர்சிக்கப்படுகின்றது. நாம் எதிர்நோகுகின்ற பிரச்சினைகள் சிறியவையாயினும் மிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறிய சம்பவங்களாயினும் எமது இருப்பை உறுதிப்படுத்தும் விடயங்களாக நாம் அவற்றை நோக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்

இக் கலந்துரையாடலில் சம்மேளப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்று, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படக் கூடாது, போதைப் பொருள் பாவனைக்கு அடிப்படையாக இருகின்ற புகைபிடித்தலை ஹாராம் என பிரகனப்படுத்தும் மார்க்கத் தீர்ப்பினை வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைக் கல்வியில் வகுப்பேற்றம் என்பது பரீட்சையில் சித்திபெறுவதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டும், முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் அதிக பிரச்சினைகள் காணப்படுகின்ற அவற்றிற்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

மாடறுப்பது தொடர்பில் இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் தெடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தொடர்பில் அறிவூட்டுவதற்கும் அவற்றிற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும், இலங்கை நிருவாக சேவை மற்றும் கல்வி நிருவாக சேவையில் முஸ்லிம்கள் சித்தி பெறும் வீதத்தினை அதிகரிக்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.

முஸ்லிம் சமய விவகாரங்களை கையாளும் உயர் நிருவாக அதிகாரிகளாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் நியமிக்கப்பட்டுள்ளதால் குறித்த சமய விவகாரங்களை அவர்களால் மிகச் சரியாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கு சமமான தகுதியுடைய முஸ்லிம் அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெரும்பான்மை இன அதிகாரிகளின் நிருவாக ரீதியான நெருக்கடிகளைத் தணிப்பதற்கு இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு முஸ்லிம் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆன்மீக ரீதியான கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும், முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களை ஒன்றிணைத்து முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும், இலங்கையிலுள்ள அனைத்து அரபு மதரஸாக்களிலும் ஒரே விதமான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் போன்ற ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இதன்போது தேசிய சூறா சபை பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெற்றதோடு கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்­புக்களின் சம்­மே­ளனம் சார்பான கோரிக்கையொன்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ஸபீல் நளீமியினால் சட்டத்தரணி அல்ஹாஜ் றஷீட் எம்.இம்தியாஸிடம் கைளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்ற பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்களும் நிறுனங்களின் பிரதிநிதிகளும் தேசிய சூறா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஃமூத், பிரதித் தலைவரும் ஜாமிஆ நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் நளீமி, முன்னாள் பிரதித் தலைவர் அல்ஹாஜ் றஷீட் எம்.இம்தியாஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான மௌலவி எம்.எஸ்.எம்.தஸ்லீம், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மற்றும் எம்.அஜ்வதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY