காத்தான்குடியின் சம்மேளனம் இலங்கை மக்களுக்கு முன்மாதிரியான தலைமைத்துவத்தை வழங்கி வந்துள்ளது: பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்

0
277

-எம்.ஐ.அப்துல் நஸார்-

காத்தான்குடியின் சம்மேளனம் கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு முன்மாதிரியான தலைமைத்துவத்தை வழங்கி வந்துள்ளது என தேசிய சூறா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கும், தேசிய சூறா சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று சம்மேளனத் தலைவர் பொறியியலாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.தௌபீக் தலைமையில் கடந்த சனிக்கிழமை (08) சம்மேளனத்தின் அஷ்ஷஹீட் அல்ஹாஜ் ஏ.அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இரவு எட்டு மணியளவில் நடைபெற்றபோது சிறப்புரையாற்றுகையிலேயே பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், காத்தான்குடி இலங்கையின் முன்மாதிரியான நகரமாகவும் சம்மேளனம் சிறந்த தலைமைத்துவமாகவும் இலங்கை முஸ்லிம்களை வழிகாட்டுகின்ற ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது. இது முகஸ்துதிக்காகவோ உங்களை பெருமைப்பபடுத்துவதற்காகவோ நான் சொல்லுகின்ற விடயமல்ல. அதற்கான நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.

யுத்த காலத்திலும், பேச்சுவார்த்தை காலத்திலும் சம்மேளனம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. உங்களுடைய மக்களும், உங்கள் தலைமைத்துவமும் அந்த விடயங்களைக் கையாண்ட விதம் சர்வதேச ரீதியில் புகழப்பட்டிருக்கின்றது, எழுதப்பட்டிருக்கின்றது. அதற்குரிய ஆதாரங்கள் கடந்த கலந்துரையாடல்களின்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்மேளனம் தனது எல்லைக்கு அப்பால் எங்கெல்லாம் பிரச்சினைகள், அனர்த்தங்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் சென்று உதவியிருக்கின்றது. மூதூர் வெளியேற்றம் இடம்பெற்றபோது காத்தான்குடியின் தலைமைத்துவம் அங்கு இருந்தது. யாராலும் வெளிப்படுத்தப்படாத உண்மை என்னவென்றால் மெனிக்பாம் பிரச்சினையின்போது, இலட்சக்கணக்கான அகதிகள் வன்னியில் இருந்து வந்தபோது காத்தான்குடி தலைமைத்துவமும் சம்மேளனமும் அங்கு சென்று பல காத்திரமான உதவிகளை செய்ததை நாம் அறிவோம், பலருக்கு இந்த விடயங்கள் தெரியாது.

நாம் எதிர்கொள்ள இருக்கின்ற காலம் சமாதான காலமாக மாறவேண்டும் என நாம் பிரார்த்திக்க வேண்டும். முப்பது வருட யுத்தம் முடிந்து ஒரு சமாதான சூழல் உருவாக வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். சமாதான சூழ்நிலை இல்லாத ஒரு கட்டத்தில் இந்தக் காத்தான்குடி மக்கள் தொழில்வாய்ப்புகள், நிலம், கல்வி எல்லாமே அடிபட்டு சிதைவுபட்டமை நம் அனைவருக்கும் தெரியும். எத்தனை கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் தமது தொழில்களை விட்டுவிட்டு வந்தார்கள், எத்தனை ஆயிரம் நிலங்களை இழந்திருக்கின்றார்கள்.

சமாதான காலத்தில் நாடு நாடுழுவதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காத்தான்குடி வர்த்தக நிறுவனங்களும், காத்தான்குடி சார்ந்த சேவை நிலையங்களும் காணப்படுகின்றன. சமாதான சூழல் முஸ்லிம்களுக்கு சாதகமானதாகும்

என்றாலும் இன்று சமாதானம் என்பது வெறும் வார்த்தையில் இருக்கிறதே தவிர யதார்த்தத்தில் இல்லை. எங்கெல்லாம் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அதுருகருகே இருக்கிறார்களோ அங்கெல்லாம் சமாதானம் என்பது யதார்த்தத்தில் இல்லை என்பதைப் பார்க்கிறோம். முன்பு ஆயுதம் இருந்தது, இப்போது பேனா இருக்கிறது. இவ்வாறு நான் கூறுவதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY