இனிமேலும் இன முரண்பாடுகள் கூர்மையடைந்து செல்லாதவாறு எல்லோரும் அடுத்தவரின் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்

0
189

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

இனிமேலும் இன முரண்பாடுகள் கூர்மையடைந்து செல்லாதவாறு இந்த நாட்டில் வாழும் அனைவரும் அடுத்தவரின் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

மாவட்ட சர்வ மதப் பேரவையின் மாதாந்த ஒன்று கூடலும் செயலமர்வும் கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிறன்று (ஒக்ரோபெர் 09, 2016) இடம்பெற்றது.

சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த ஒன்று கூடல் செயலமர்வில் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன்;

எல்லோருக்கும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதையும், சட்டவாட்சியை முன்னேற்றுவதையும், அதனைப் பாதுகாப்பதையும் நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தங்களது முழுமுதற் கடமையாகக் கொள்ள வேண்டும்.

எனக்குள்ள பசி, தாகம், களைப்பு, மகிழ்ச்சி, இது போன்று ஓய்வு, நிம்மதி, தூக்கம் ஆகிய இன்னும் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளும் அடுத்தவருக்கும் உண்டு. அடிப்படையில் இவற்றை மனிதாபிமானத்தோடு மதிக்கப்பழக வேண்டும்.

சமத்துவம் மற்றும் பாராபட்சமின்மைக்கான உரிமை, பேச்சு, மற்றும் ஒன்று கூடுவதற்கான உரிமை, சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் எல்லாமே அடுத்தவருக்கும் உண்டு.

அமைதிக்கான ஆத்ம ஈடேற்றமுள்ள வாழ்வுக்கு வழிகாட்டவே மதங்கள் உள்ளன. மத உணர்வுகள் மற்றவர்களைக் கொடுமைப்படுத்தக் கூடாது.

அதேவேளை, மற்ற மத அடிப்படை நம்பிக்கைகளிலும் சுதந்திரத்திலும் அடுத்தவர் அராஜகம் புரியக் கூடாது. மத சுதந்திரம் என்பது ஒரு உரிமை. அதனை மதிக்க வேண்டும்.

அடுத்தவரை அவமதிக்காமல் மதிக்கத் துவங்கினால் அழிவுகளுக்குப் பதிலாக ஆக்கபூர்வமும் ஆனந்தமும் அபிவிருத்தியும் ஏற்படும். மனித முரண்பாடுகளால் சிறைச்சாலைகளுக்கும் காயம்பட்டு வைத்தியசாலைகளுக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

நமது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதன் மூலம் வெற்றி வெற்றி என்ற தீர்வே கிட்டும்.
பிணக்குகளாலும் தொடரான முரண்பாடுகளினாலும் ஒரு நீதிமன்ற வழக்கு முடிவில் இன்னுமொரு வழக்கு ஆரம்பிக்க வாய்ப்புண்டு. இதனை வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான் என்ற கதை நமக்கு நினைவூட்டும்” என்றார்.

LEAVE A REPLY