ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி மாணவர்கள் இருவர் மாவட்ட மட்டத்தில் முதலிடம்

0
314

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்–

இம்முறை வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டம் அறபா வித்தியாலய மாணவி அப்துல் றஹீம் பாத்திமா றிஷ்னா மற்றும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரன் அபிட்சன் ஆகியோர் இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் எனும் சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பாத்திமா றிஷ்னாவின் தாய் சுலைஹா உம்மா ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற அதேவேளை அவரது தந்தை அப்துல் றஹீம் ஏறாவூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியராவார்.

களுவாஞ்சிக்குடியை சேர்ந்த அபிட்சனின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்களாவர். தான் வைத்தியத்துறையில் கற்று மருத்துவ சேவை புரிவதே தனது இலக்காகும் என அபிட்சன் தெரிவித்தார்.

இதேவேளை, இறைவனின் நாட்டப்படி தனக்கு எதிர்காலத்தில் எந்தத் துறை பொருத்தமாக இருக்குமோ அதனைத் தான் தெரிவு செய்து முழுமையாக தனது சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக பாத்திமா றிஷ்னா தெரிவித்தார்.

LEAVE A REPLY