திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருான மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் சிகிச்சைபெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து அமைச்சர்களிடம் விசாரித்தார்.
நேற்று (08) மாலை 7.15 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த மு.க. ஸ்டாலின், அங்கிருந்த நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் ஓரிரு நாட்கள் மட்டுமே முதல்வர் மருத்துவமனையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பதால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பில் முதல்வரது நலன் குறித்து விசாரிக்கவும் அவர் குணம்பெற்று பணிகளைத் தொடர வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் வந்ததாகக் கூறினார்.
முதல்வரது உடல்நலம் தேறிவருவதாக தனக்கு கூறப்பட்டதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மு.க. ஸ்டாலினுடன், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துவதாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
Source: BBC