இன்னோர் ஒக்டோபர் மாதம்: இன்னுமே விடியாத ஓலங்கள்

0
309

-முஹம்மது ராஜி-

இன்னொரு அக்டோபர் இது . இன்னுமே தீர்க்கப்படாத ஒரு சமூகத்தின் அவலம் பற்றி அடிக்கடி பேசப்படுகிற மாதம் இது .

சர்வதேச பிரச்சினைகள் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ள நம்மில் பலருக்கு நமது நாட்டுக்குள் இடம்பெற்ற வரலாற்றில் கறை படிந்த அத்தியாயம் தெரியாமல் இருக்கலாம் . அந்த கறைகள் இன்னமும் காயாமல் இருப்பது இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் .

1990 இல் விடுதலை என்ற பேரில் விரித்தாடிய கொடூரம் , பரம்பரைகளின் எண்ணிக்கை தெரியாமல் வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லீம்களை வேரோடு வெட்டிச்சாய்த்திருந்தது .

மானம் , உயிர் தவிர மற்றவை அனைத்தும் துப்பாக்கி முனையில் பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலையில் இரு மணி நேர அவகாசத்தில் பல்லாயிரம் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை, சர்வதேசத்துக்கு சரியான நேரத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை . அவர்கள் விட்ட கண்ணீரின் ஈரமும் கவலையின் ஓலமும் இலங்கையின் தெற்கு வரைக்கு கூட கொண்டு செல்லப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன. கலீமா சொன்ன ஒரே காரணத்துக்காகவே அவர்கள், வெறிகொண்ட மிருகங்களால் யாழ்ப்பணத்தில் இருந்தது வேட்டையாடப்பட்டு துடைத்து எறியப்பட்டிருந்தார்கள் .

90 க்கு பின்னரான இரு தசாப்தங்கள், யாழ்ப்பாண முஸ்லிம்களை கடுமையான இன்னல்களுக்கு உள்ளாக்கி இருந்ததன . உடுத்த ஆடைகளுடன் எந்த பொருள் வசதியும் இல்லாத நிலையில் பூச்சியத்தில் இருந்து தமது வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள் அவர்கள் .

தெற்கில் இடம்பெயர்ந்த அவர்கள் கஷ்டமான சூழ்நிலைகளில் தமது வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்சி செய்தார்கள் .கடந்த முப்பது ஆண்டுகளில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் வெறும் வார்த்தைகளால் வருணிக்க முடியாதவை .

பிரதேசவாத நோய் பீடித்திருந்த சொந்த முஸ்லிம் அரசியல் வாதிகளாலேயே கைவிடப்பட்டது மாத்திரமன்றி அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு சோகம் நிறைந்தது.

அல்லாஹ்வின் அருளால் அநேகர் தமது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றினர் . சிலர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர் . ஆனாலும் பலர் அகதி முகாம்களில் தமது வாழ்க்கையை கழித்தனர் . அங்கேயே அவர்கள் முடங்கப்பட்டனர் .

கடந்த 30 வருடங்களாக அரசியல் அநாதைகளாக வாழ்ந்துவந்த யாழ்ப்பாண முஸ்லீம்களை அரசியல் வாதிகளோ அல்லது உதவி வழங்கும் வெளிநாடுகளோ அல்லது வெளிநாட்டு அமைப்புகளோ கண்டு கொண்டதாக இல்லை .

2009 இல் புலிகள் இயக்கம் பூண்டோடு அழிக்கப்பட்ட பின்னர் அகதி முகாம்களிலும் ,வாடகை வீடுகளிலும் வாழ்ந்து அவதிப்படுவதை விட சொந்த ஊருக்கு சென்று குடித்தனம் நடத்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தீர்மானித்தன .

தொடர்ச்சியான யுத்தம் காரணமாகவும் யுத்தத்தின் நடுவே வியாபாரம் நடத்திய கள்ளர் கூட்டத்தினாலும் யாழ்ப்பாண முஸ்லீம்களின் சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டிருந்தன . வீடுகளின் கூரைகள் ,கதவுகள் ஜன்னல்கள் ஏன் செங்கற்கள் கூட பிரித்தெடுக்கப்பட்டு
சூறையாடப்பட்டிருந்தன.

தொண்டு தொட்டே அரசியல் ரீதியாக அநாதைகளாக இருந்து வந்த யாழ் முஸ்லிம்கள் இப்போதும் அதில் விதிவிலக்கு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வரும் போதும் வாக்குறுதிகளை வரையறை இன்றி வழங்குவதும் அதன் பின் ஆட்சிகள் மாறுவதும் பின்னர் கை விடப்பட்டு கை விரிக்கப்படுவதும் இப்போது யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு பழகிப்போய் விட்டது .

வானம் தெரியும் கூறையுடன் ,மானம் பேணும் வயதுக்கு வந்த பெண்கள், ஓட்டை ஒடிசல் கொண்ட தென்னை ஓலை வேலிகளால் தம்மை மறைத்துக்கொள்ள போராடும்
நிலையில் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மலசல வசதிகள் ,குடிநீர், வடிகால் அமைப்புகள், தொழில் வாய்ப்புக்கள் ,அறவே அற்ற நிலையில் அன்றாட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாக்க தினம் தினம் திண்டாடுகிற நிலையில் யாழ்ப்பாண முஸ்லீம் குடும்பங்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன .

கல்வி ,மதரஸா ,மருத்துவம் ,சுகாதாரம் மற்றும் அன்றாட தேவைகள் ஆகியவை பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக வீடமைப்பு வசதிகள் அவசியமான நிலையில அவர்கள் உள்ளார்கள்.அடிப்படையான பிரச்சினையும் இதுவாக இருந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹு தஆலாவின் பெயர் சொல்லி அழைக்கும் 16 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றை மீள புனரமைக்கும் நிர்மாணப்பணிகள் அங்காங்கே அறையும் குறையுமாக நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன .

எந்த ஆக்கபூர்வமான உதவிகளும் நிவாரணங்களும் இல்லாமல் தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்னமும் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள்

சர்வதேச சமுகம் உரிய நேரத்தில் உரிய உதவிகளை செய்ய தவறி விட்ட நிலையில யாழ் முஸ்லிம்களின் பிரச்சனை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்கிற நிலைக்கு ஆளாகி விட்டது .

உலகின் முன்னணி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கின்ற சரவதேச அமைப்புகள் யாழ் முஸ்லிம் பிரச்சினைகளில் தலையீடு செய்து தீர்ப்பார்கள் எண்பது நமக்குள்ளே காணும் பகல் கனவை விட அதிகமானதாக இருக்க முடியாது .

முறிந்த மரம்தான் முறிந்த மரத்துக்கு முட்டு என்பது போல் தொடர்ச்சியான யுத்தத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படடுள்ள இலங்கை முஸ்லீம்களாகிய நாம், அல்லது உலக முஸ்லீம்கள், முறிந்து போயுள்ள நம் சகோதர்களுக்கு உதவ முன் வர வேண்டும் .

சமூகத்தில், நமக்குள் ஊடுருவிப்போயுள்ள ஈகோ பிரச்சினை அல்லாஹுவுக்காக என்கிற நோக்கத்தில் களைந்து எடுக்கப்பட வேண்டும்.

உங்களால் ஆன காத்திரமான உதவிகளை அல்லாஹுக்காக அள்ளி வழங்குங்கள். வீடுகள் இழந்துள்ள சகோதர, சகோதரிகளின் முகங்களில் புன்னகைகளை பூக்க வையுங்கள்.

மானத்தை மறைக்க தினந்தோறும் வறுமையுடன் போராட்டம் நடத்தும் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளின் வாழ்க்கையில் வறுமையைப்போக்கி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். .

இன்ஷா அல்லாஹ் உங்களதும் உங்கள் குடும்பங்கள் மற்றும் உங்கள் பரம்பரைகளின் வழிகளில் அல்லாஹ் வெளிச்சத்தை ஏற்படுத்துவான்.

LEAVE A REPLY