ஆளுங்கட்சியினரின் கவனயீனமே கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் வெளிமாகாணங்களில் நியமனம் பெறக்காரணமாகும்

0
201

–எம்.ஜே.எம்.சஜீத்-

மத்திய மற்றும் மாகாண அரசியல் பலத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்களை முன்கூட்டியே கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமிக்க கிடைத்த சந்தர்ப்பத்தினை கிழக்கு மாகாண சபையின் ஆளும்கட்சியினர் இழந்துவிட்டனர் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 64ஆவது சபை அமர்வு இன்று (6) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி புதிய ஆசிரியர்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்கக் கோரும் அவசரப் பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் அன்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் 5028 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், இறக்காமம், கல்குடா போன்ற பல பிரதேசங்களில் நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக தங்களின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுகின்ற இக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண கல்விக் கல்லூரி ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு நியமிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு கிழக்கு மாகாண சபையில் அவசரப்பிரேரணை சமர்ப்பித்துள்ளீர்கள்.

தேசியக் கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவது குறித்து சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர்; எல்லோருக்கும் தெரியும் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த வெற்றிடங்கள் உண்மைக்குண்மையாக இருக்குமானால் கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அரசின் கல்வி அமைச்சருடன் கிழக்கு மாகாண முதலமைச்சரும், மாகாண கல்வி அமைச்சரும் கலந்துரையாடி எமது மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பியிருக்க வேண்டும்.

நமது நாட்டின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும், மத்திய கல்வி அமைச்சரும் நமக்குரியவர்கள் ஏன் நாங்கள் கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் இவர்களுடன் பேசவில்லை மாகாண சபையிலே ஆளுங்கட்சி என்றால் எமது முழு அதிகாரத்தினையும் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து நமது கிழக்கு மாகாகண மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.

ஆசிரியர் தொழில் என்பது ஒரு கொளரவமான தொழிலாகும் ஒரு காலத்தில் குறைந்தளவு சம்பளத்தைப் பெற்று கற்பித்த காலமிருந்ததது அப்போது மக்கள் ஆசிரியர்களுக்கு பெரும் கௌரவத்தை வழங்கினர். வாழ்க்கைச் செலவும் குறைவாக இருந்தன. ஆனால் இன்று ஆசிரியர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக ஆசிரியர் ஒருவர் வேறொரு மாகாணத்தில் கடமையாற்றும் போது போக்குவரத்து, தங்குமிடம் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

குறைந்த சம்பளத்தில் தனது வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க வேண்டிய பாரிய சவால்களுக்கு மத்தியில் ஆசிரியர் சமூகம் உள்ளது. திருமணமாகாத ஆசிரியைகள்தான் கல்விக் கல்லூரி ஆசிரியைகளாக நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமையினால் வெளிமாகாணங்களுக்கு சென்று தங்களின் கடமையை பாரம் எடுப்பதா? இல்லையா? ஆசிரியர் பதவியை இராஜினமா செய்வதா என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எனவே கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எமது ஜனாதிபதி, பிரதமர், மாகாண கல்வி அமைச்சரைச் சந்தித்து ஒரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்பதுடன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிமாகாணங்களில் நியமனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண புதிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு நியமிக்க வேண்டும்.

மேலும் கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கௌரவ உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்ட ஒரு விடயத்தினை சபையிலே சமர்ப்பித்தேன் அப்போது முதலமைச்சர் சபைக்கு வருகை தந்தவுடன் சமர்ப்பிக்குமாறு தவிசாளராகிய நீங்கள் கூறினீர்கள் இன்று காலையின் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இதற்கான அனுமதியினை வழங்கிவிட்டு இறுதி நேரத்தில் அதனை மறுத்துள்ளீர்கள். இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நீங்கள் இன்று தவிசாளர் ஆசனத்தில் இருக்கலாம் இது ஒரு முக்கியமான ஆசனமாகும் சாபநாயகர் ஆசனம் என்பது இறைவன் தந்த சொத்து இதில் நீங்கள் நீதியாக செயற்பட வேண்டும் மக்கள் பிரதிநிதிகள் யாருக்காவது சிறப்புரிமை மீறப்படுகின்ற போது நீங்கள் நீதியாக செயற்பட்டு கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுடைய கௌரவத்தைப் பாதுகாக்க உங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY