குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனை அவசியம்!

0
328

அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சருக்கு ஹிஸ்புல்லாஹ் ஆலோசனை

Hizbullahநாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் கடத்தல் போன்ற மோசமான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் – தடுப்பதற்கும் மரண தண்டனைச் சட்டத்தை அமுல்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

நீதிமன்ற குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களும், அதனோடு இணைந்த தண்டனைகளுமே இலங்கை நீதித்துறை சட்டவாக்கத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளன. நீதித்துறை சட்டத்தில் இருக்கின்ற ஓட்டை – உடைசல்களை பயன்படுத்தி நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதுடன், சில சந்தர்பங்களில் அதனை எம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையும் உருவாகியுள்ளன.

நாட்டிலே குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் நீதித்துறையை நாம் இருக்கமாக வைத்திருக்க வேண்டும். தண்டனைகளை நாங்கள் அதிகரிக்க வேண்டும். மீண்டும் இந்த நாட்டிலே மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும். அதை சட்டமாக்க வேண்டும்.

பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் கடத்தல் போன்ற மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் சட்டத்தை பிரயோகித்து தண்டனை வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு மிகமோசமாக படுகொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அச்சந்தர்பங்களில் நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பலைகள் கிழம்பியிருந்ததுடன், மீண்டும் மரண தண்டனைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அந்த சட்டத்தின் ஊடாக இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என்று கோஷம் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனால், மரண தண்டனை சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளும் – கோரிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

ஆகவே, நீதி அமைச்சரே! சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும். மக்கள் நீதிமன்றங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை படிப்படியாக இழந்து வருகின்றது. 15 – 20 வருடங்களாக சில காணிப் பிரச்சினைகளுக்கான அலைந்து திரிகிறார்கள்.

இவ்வாறான பிரச்சினைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற எவ்வித சட்டங்களும் கிடையாது. எனவே, இந்த ஆட்சிக் காலத்தில் நீதித்துறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். நீதியமைச்சருக்கு சட்டத்திலுள்ள பிரச்சினைகள் – குறைபாடுகள் என்ன என்பது நன்றாகத் தெரியும். எனவே, மக்களுக்கு நிவாரம் பெற்றுக் கொடுக்கும் வகையில் சட்டதிட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். – என்றார்.

LEAVE A REPLY