இறக்காம கோட்டத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

0
196

கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனம் பெறும் இறக்காம பிரதேச ஆசிரியர்களை இறக்காம கோட்ட பாடசாலைகளுக்கு நியமித்து அக்கோட்டத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், பொறியியலாளருமான எஸ்.ஐ மன்சூர் கோரிக்கை விடுத்தார்.

அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று (3) அம்பாரை கச்சேரியில் அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், கோடிஸ்வரன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இறக்காம பிரதேச பாடசாலைகளில் நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவருகிறது இதனால் அப்பிரதேச மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்விடயமாக இன்று இறக்காம பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுக்கும் நிலைமை தோன்றியுள்ளது. எனவே எதிர்வரும் தினங்களில் நியமனம் செய்யப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர்களை இறக்காம கோட்டத்திற்கும் நியமித்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பாக இறக்காமப் பிரதேசத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மாதாந்த கிளினிக் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு செல்வதாகவும், இலவச மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்ள கூடுதலான பணங்களை போக்குவரத்துக்காக செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இதனால் பல இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்கான காரணம் இறக்காம வைத்தியசாலையில் போதிய மருந்துகள் இல்லையெனவும், அதனாலே சம்மாந்துறை வைத்தியசாலைக்கு செல்லுமாறு தாங்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசல் காசீம் அவர்கள் விரும்பியே சம்மாந்துறை வைத்தியசாலைக்கு செல்வதாக குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சருக்கு பொறியியலாளர் மன்சூர் விளக்கமளிக்கையில் அது தொடர்பில் உங்களுக்கு சரியாக தெரியாது. இறக்காமம், குடுவில், நியுகுண போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் சம்மாந்துறைக்கு செல்வதற்கு எந்தத் தேவையுமில்லை இறக்காம வைத்தியசாலையில் போதிய மருந்துகளின்மையினாலே மக்கள் சம்மாந்துறைக்கு செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக அன்றாடம் கூலித்தொழில் செய்து மிகவும் கஷ்டத்துடன் வாழும் மக்கள் அரசாங்கத்தின் இலவச சுகாதார சேவையைப் பெறுவதற்கு கூடுதலான பணங்களை செலவிடுகின்றனர்.

எனவே மாதாந்த கிளினிக் சிகிச்சைக்காக மக்கள் சம்மாந்துறைக்கு செல்வதனை நிறுத்தி அசரமாக இறக்காமத்தில் அச்சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY