கடற்கரை பூங்கா அபிவிருத்தி தொடர்பாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீனின் பகிரங்க கடிதம்

0
867

கடந்த 2/10/2016 அன்று தாங்கள் கடற்கரை பூங்கா அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைப்பதாகக் கூறி ஊடகங்களுக்கு ஒரு பேட்டியும் அளித்தீர்கள். இவ் அபிவிருத்தி தொடர்பில் இது தங்களுடைய அபிவிருத்தி அல்ல என்று ஏற்கனவே அறிக்கை விட்டிருந்தேன். இருந்தாலும் வழமை போன்று தங்கள் பாணியில் பொய் சொல்லி ஊடக அறிக்கை விட்டிருந்தீர்கள்.

மதிப்புக்குரிய நண்பர் அவர்களே இந்த வேலையை ரூபா 50 இலட்சம் செலவில் 2014இல் காத்தான்குடி நகர சபை ஆரம்பித்து வைத்தது என்பது எல்லோருக்கும் தெரியும். 2015 ஜனவரி 08இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின் நகர அபிவிருத்தி அமைச்சு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ றவூப்  ஹக்கீமுக்கு கிடைத்தது.

நகர அபிவிருத்தி அமைச்சே காத்தான்குடி கடற்கரை பூங்கா அபிவிருத்திக்கு பொறுப்பாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் அமைந்த போது தங்களது பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவி பறிபோய் நீங்கள் பாராளுமன்றத்தில் மஹிந்த ஆதரவாளராக எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்ந்தீர்கள். அப்பொழுது நீங்கள் மட்டுமல்ல மஹிந்த ஆதரவு MP க்கள் அனைவரும் அதிகாரமற்றே இருந்தனர்.

இவ்வேளையில் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட றவூப் ஹக்கீம் வீரியத்துடன் பணியாற்றத் தொடங்கினார். இதன்போது காத்தான்குடி கடற்கரைப் பூங்கா அபிவிருத்தி தொடர்பில் பலமுறை அமைச்சர் றவூப் ஹக்கீமை சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டேன்.

unnamed-2இத்திட்டத்திற்கு பொறுப்பான திட்டப்பணிப்பாளர் மஹிந்த விதானாரச்சி, பிரதி பணிப்பாளர் ரஞ்சித், பிரதி பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஜயசுந்தர மற்றும் அதிகாரிகளை காத்தான்குடிக்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் குறைபாடுகளை விளக்கி 2ஆம் கட்ட வேலைகளை விரைவில் ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இவ் 2ஆம் கட்ட வேலை ஆரம்பிக்கப்பட்டது. (பார்க்க இணைப்பு 3 ) இதனிடையே என்னை சந்தித்த உங்களது தளபதி அப்போதைய நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்வர்  இவ் 2ஆம் கட்ட Beach park க்கு நிதி ஒதுக்கித் தருமாறு கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எழுத்து மூலமான கோரிக்கை கடிதம் தந்தார். கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. (பார்க்க இணைப்பு 1)

அத்துடன், தலைவருக்கு வாழ்த்துச் சொல்லி சந்திப்புக்கு நேரம் கேட்டு கோரிக்கை கடிதம் தந்தார் (பார்க்க இணைப்பு 2) அப்பொழுது நீங்கள் எந்த அதிகாரமும் இன்றி தீவிர மஹிந்த ஆதரவாளராக இருந்தீர்கள். பின்னர் கௌரவ அமைச்சர் றவூப் ஹக்கீம் தனது அமைச்சின் கீழான சகல வேலைத்திட்டங்களும் சட்டப்படி திறந்த கேள்வியைக் கோரி எந்த அரசியல் செல்வாக்குக்கும் உட்படாமல் வேலைகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணித்ததன் பேரில் Open tender மூலம் 2ஆம் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதிகாரம் இல்லாமல் மஹிந்தவின் ஆதரவாளரானாக இருந்த உங்களால் எப்படி 2ஆம் கட்டத்திற்கு மைத்திரி அரசில் நிதி பெற்றுக்கொள்ள முடியும்?

unnamed-3தொடர்ந்து 2 ஆம் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்ற போது குறைபாடுகள் காணப்பட்டன. இவ் வேலைகள் தொடர்பில் ஒப்பந்தக்காரரை சந்தித்து அறிவுறுத்தியதோடு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளை சந்தித்து இக் குறைபாடுகளை விளக்கி குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கோரியதுடன் மேலதிக நிதி ஒதுக்கீட்டையும் கோரியிருந்தேன்.

இது தொடர்பில் கௌரவ தலைவர் ஹக்கீம் அவர்களுக்கும் தெரியப்படுத்தி மேலதிக நிதியை பெற்றுத்தருமாறு கோரினேன். இதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து திட்ட முன்மொழிவை சமர்ப்பித்து மேலதிக நிதியை கோரிய போது அவர்கள் மேலதிக நிதியை ஒதுக்க சம்மதித்தனர். இது தொடர்பில் ஊடகங்களில் நான்கு மாதத்திற்கு முன்பு செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன். இச் செய்தியை  சிரேஷ்ட ஊடகவியலாளரும் உங்கள் நெருங்கிய ஆதரவாளருமான கவிஞர் டி.எல். ஜவ்பர்கான் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

unnamed-4இவ்வேளையில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று நீங்கள் தோல்வியடைந்தீர்கள். கண்டியில் வெற்றி பெற்ற தலைவருக்கு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு வழங்கப்பட்டது. நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு வழங்கப்பட்டாலும் நகர அபிவிருத்தி அதிகார சபையினரை அமைச்சர் ஹக்கீமோடு இணைந்து செயற்படுமாறு கௌரவ பிரதம மந்திரியால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

எனவே எமது தீவிர முயற்சியின் பேரிலேயே 3ஆம் கட்ட அபிவிருத்திக்கு 1 கோடி 30 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியில் பொறுத்தவரை சோலாபவர் சூரிய சக்தி மின்சாரம் இத்திட்டத்தின் மூலமே முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் இத்திட்டம் பிழைத்துவிடக் கூடாது என்பதில் மிகக் கரிசனையாக ஈடுபட்டு வருகிறேன்.

இத்திட்டத்தை 2.10.2016 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்தி வந்த போது அதற்கு முன்பே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. உங்கள் செய்தியை பார்த்த நான் கொந்தராத்துகாரரை அழைத்து இது தொடர்பில் வினவினேன். இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது. “ஹிஸ்புல்லாஹ்ட டைப் உங்களுக்கு தெரியும்தானே?” என்று சொல்லியதுடன் “நாங்கள் அந்தப் பக்கமும் போக மாட்டோம்” என்று சொன்னார்.

பின்னர் இத் திட்டத்திற்கு பொறுப்பான நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் ரஞ்சித் மற்றும் திட்ட மேலாளர் பந்துல இருவரையும் 29.09.2016 அன்று தொடர்புகொண்டு வினவினேன். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எந்த சம்பந்தமுமில்லை.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளை திரும்ப எப்படி ஆரம்பிக்க முடியும்? என்று கேட்டதுடன் தாங்கள் 30.09.2016 ஆம் திகதி அம்பாறைக்கு வருவதாகவும் அமைச்சர் தயாகமகேவின் வேலைத்திட்டம் தொடர்பில் அம்பாறைக்கு வருவதாகவும் காத்தான்குடிக்கு வந்து என்னை சந்திப்பதாகவும் தெரிவித்தனர்.

30.09.2016 திகதியன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடிக்கு வந்த மேற்படி அதிகாரிகளை அழைத்துக்கொண்டு குறித்த கடற்கரைக்குச் சென்று திட்டத்தில் நிலவும் சகல குறைபாடுகளையும் விளக்கி தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 1 கோடி 30 இலட்சத்தில் எந்தக் குறைபாடும் இல்லாமல் வேலையை முடிக்க வேண்டுமென்று கோரினேன். கொந்தராத்துக்காரரை அவ்விடத்துக்கு அழைத்த அவ் அதிகாரிகள் எனக்கு முன்பாக அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நான் செய்த முறைப்பாட்டின் பேரில் கொந்தராத்துகாரருக்குரிய 2ஆம் கட்ட கொடுப்பனவில் ரூபா 30 இலட்சம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் எனக்குத் தெரியப்படுத்தினார். கொந்தராத்துகாரரிடம் “முபீன் சேர் சொல்லும் அமைப்பில் வேலைகளை முடியுங்கள்” அதிகாரிகள் வந்து வேலைகளை பரிசீலித்து உங்களது கொடுப்பனவை விடுவிப்போம் என்றனர்.

எனவே மதிப்புக்குரிய இரஜாங்க அமைச்சர் அவர்களே நீங்கள் இந்த ஊருக்கு நல்ல பல சேவைகளை செய்துள்ளீர்கள், செய்து வருகின்றீர்கள். உங்களை நாங்கள் மதிக்கின்றோம். நான் எப்போதும் உங்களை தேர்தல் காலங்களில் மாத்திரமே விமர்சிப்பேன். உங்கள் வேலைகளை நாங்கள் செய்வதாக எப்போதும் சொல்வதில்லை.

நாம் எல்லோரும் ஆட்சியின் பங்காளிகள். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். எங்களுக்கும் இந்த ஊரைப் பற்றிய கனவு உள்ளது. பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளேன். தயவு செய்து கடந்த காலங்களில் எங்கள் வேலைகளை குழப்பி தடுத்தது போல் செய்யாதீர்கள்.

அன்புடன்
யு.எல்.எம்.என். முபீன்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்,
இணைப்புச் செயலாளர்
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு

LEAVE A REPLY