SLMC உடன் சேர்ந்து போட்டியிட்டவர்கள் தற்போது SLMCயினை விமர்சிக்கின்றார்கள்: ஷிப்லி பாறுக்

0
415

(எம்.ரீ. ஹைதர் அலி)

Shibly Farook“தமக்கான அரசியல் முகவரியினை பெற்றுக்கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் SLMC உடன் சேர்ந்து போட்டியிட்டவர்கள் தற்போது SLMCயினை விமர்சிக்கின்றார்கள்” என்று கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தனிப்பட்ட முயற்சியினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் Z.A. நஸீர் அஹமட்டின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட காங்கேயனோடை கிராமத்தில் பாரிய அபிவிருத்திகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அன்மையில் இடம்பெற்றது.

மண்முனைப்பற்று முன்னால் பிரதேச சபை உறுப்பினர் AAM. மதீன் JP தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் Z.A. நஸீர் அஹமட், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், சிறப்பு அதிதிகளாக நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சின் இணைப்பாளர் ULMN. முபீன் BA, முன்னால் காத்தான்குடி நகரசபை தலைவர் மர்சூக் அஹமட் லெவ்வை மற்றும் முக்கிய ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காங்கேயனோடை மையவாடி வீதியில் அமைந்துள்ள சதுர கல்வெட்டினை உடைத்து மீண்டும் புதிதாக அமைப்பதற்காக 1.8 மில்லியன் ரூபாயும், மீனவர்களுக்கான தங்குமிட கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக 3.5 மில்லியன் ரூபாயும், பள்ளிவாயல் மையவாடி சுற்றுமதில் அமைப்பதற்காக 1.5 மில்லியன் ரூபாயும், விளையாட்டு மைதானத்திற்கு செல்லுவதற்கான பாதையினை கொங்கரீட் மேற்பரப்பிட்டு அமைப்பதற்காக 0.70 மில்லியன் ரூபாயும் மற்றும் விளையாட்டு மைதானத்தினை மேம்படுத்துவதற்காக 1.0 மில்லியன் ரூபாயினையும் மொத்தமாக 8.5 மில்லியன் ரூபாய் செலவிலான வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் இதன்போது நாட்டிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

”தனித்து நின்று தங்களால் எதனையும் சாதிக்க முடியாது என்று தெரிந்துகொண்டு கடந்த பாராளுமன்ற தேர்தலிலே SLMC யுடன் இணைந்து போட்டியிட்டவர்கள் அவர்களுக்கு அரசியல் அடைக்கலம் வழங்கிய SLMCயினை தற்போது விமர்சிக்கின்றனர்.

இதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து அவர்கள் இனாமாக கொடுத்த சீட்டுக்களை தக்க வைத்துக்கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக சொன்ன கருத்துக்களுக்குகூட எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்கள்.

ஆனால் நாங்கள் ஒருபோதும் அவ்வாறு இருக்க மாட்டோம்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர்களோடு எல்லாம் எமக்கு தொடர்புள்ளது, அவர்களோடு நாம் பேச்சு வார்த்தைகளை நடத்துகின்றோம் என்று ஊடகங்களில் விளம்பரம்காட்டும் மேற்கூறிய தரப்பினரால் முஸ்லிம்களின் பாரிய பிரச்சனையான காணிப்பிரச்சினைக்கு என்ன தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது? வடக்கிலோ அல்லது மண்முனை பற்றிலோ ஒரு அங்குல அளவு காணியைகூட அவர்கள் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இவ்வாறன பிரச்சினைகளை பற்றி அவர்களை பேசவிடாமல் மௌனமாக வைத்திருப்பதற்காகவே அவர்களுக்கு இனாமாக ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று SLMC யுடன் இணைந்து தோற்றதற்கு பிறகு தேசிய பட்டியல் கிடைக்கும் என்ற நப்பாசையில் இருந்தார்கள். யார் இணைந்திருந்தாலும் இணையாவிட்டாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலே SLMC ஒரு ஆசனத்தை பெற்றிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

குறிப்பாக பாராளுமன்ற தேர்தலிலே எம்மோடு சேர்ந்து போட்டியிட்ட சகோதரர் 1100 வாக்குகளை மாத்திரமே மேலதிகமாக பெற்றிருந்தார். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே SLMC 38000 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.

அந்த ஆசனத்தை SLMC இழந்திருக்க வேண்டுமானால் அது 6500ற்கு மேற்பட்ட வாக்குகளை இழந்திருக்க வேண்டும். எனவே நாங்கள் இணையாது இருந்திருந்தால் SLMC க்கு ஆசனம் எதுவும் கிடைத்திருக்காது, SLMC தேசியப்பட்டியல் கொடுக்காமல் எங்களை ஏமாற்றி விட்டது என்பது போன்ற வெக்கக் கேடான கருத்துக்களை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் தற்போது நாங்கள் அதிகாரத்திற்கு வந்து மிகக்குறுகிய காலத்திற்குள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னேடுத்திருக்கின்றோம்.

காங்கேயனோடை பிரதான வீதி அபிவிருத்திக்கு மாத்திரம் 60 இலட்சம் ரூபாயினை ஒதுக்கியிருக்கின்றோம். அதற்கு பின்னர் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய அவ்வீதிக்கான வடிகான் அமைப்பதற்காக மேலதிகமாக 48 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் 7.5 கோடி ரூபாய் செலவில் காங்கேயனோடை பிரதான வீதி தொடக்கம் மண்முனை பாலம் வரையுள்ள 2.5 கிலோ மீற்றர் வீதியினை கபெட் வீதியாக அபிவிருத்தி செய்யவுள்ளோம்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் பெப்ருவரி மாதத்திற்குள் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் காங்கேயனோடை பை.மு. வீதியினை கபெட் வீதியாக புனரமைக்கவுள்ளோம். இன்று 85 இலட்சம் ரூபா செலவிலான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

அபிவிருத்திகளில் மாத்திரமல்லாது எமது உரிமைகளை பற்றி பேசுவதிலும் நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த நல்லாட்சியில் கூட இனவாதம் தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றது.

வட மாகாண முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் அவர்கள் அண்மையில் கூறிய கருத்து முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடத்தில் பிரிவினையினை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக அமைந்திருந்தது. இலங்கை முஸ்லிம்கள் என்பவர்கள் ஒரு தேசிய இனம் அவர்களை இன்னுமொரு தேசிய இனமான தமிழ் இனத்திற்குள் அடக்குகின்ற விடயத்தினை நாம் ஒரு போதும் அனுமத்திக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY