முஸ்லிம் சகோதரர்களின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு, எரிக்கப்பட்டபொழுது களத்திலே இறங்கி முஸ்லிம் சமூகத்துக்காக குரல்கொடுத்த முதல் மனிதன் நான்தான்

0
211

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

காலம் ஒரு நாள் மாறி நாங்கள் ஆளுவோம் அப்பொழுது நம் கவலைகள் எல்லாம் தீரும் என மட்டக்களப்பு வாழைச்சேனைக்கு வருகை தந்திருந்த தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் ஆரூடம் கூறினார்.

வாழைச்சேனை, மிறாவோடை சக்தி வித்தியாலயத்தின் 125 ஆண்டு நிறைவு விழாவும் விருட்சம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு நிகழ்வும் இந்த வித்தியாலயத்தில் திங்களன்று மாலை (ஓக்ரோபெர் 03, 2016) இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகணேசன்; தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியைப் பெறுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் அழைக்கவில்லை.

ஆனால், காலம் நிச்சமாக மாறும் போது இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர்களாக அமரும் காலம் வரும்.

காலங்காலமாக நாங்கள் ஆளப்படுபவர்களாக மாத்திரம் இருந்து விட்டுப் போய்விட முடியாது. எனது 15 வருட அரசியல் போராட்டத்திலே என்னோடு கூட இருந்த 15 பேரில் 13 பேர் சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள்.

காணாமல் போதல், கடத்தல், படுகொலைகளுக்கெதிராக நாங்கள் துணிச்சலுடன் குரல் கொடுத்தோம். என்னுடன் சேர்ந்து களமிறங்கிய இரண்டு நண்பர்கள் அன்றைய ஆட்சியார்களால் கொல்லப்பட்டு விட்டார்கள்.

என் நண்பர் லசந்த விக்கிரமதுங்க நடுத்தெருவிலே சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் கொல்வதற்குப் பலமுறை முயற்சி செய்தார்கள். ஆனால், நான் பலே கில்லாடி என்ற காரணத்தினாலே தெய்வாதீனமாக என்னைக் கொல்ல அவர்களால் முடியவில்லை. மூன்று முறை அவர்களது திட்டம் தோல்வியடைந்தது.

அதேவேளை, என் இடது கரமாகவும் வலது கரமாகவும் இருந்த ரவிராஜையும், லசந்தவையும் கொன்றொழித்து விட்டார்கள். அப்படிப்பட்ட கொலைக் கலாசாரத்துக்கு இனி இடமில்லை. இப்பொழுது அந்த யுகம் மலையேறிவிட்டது.

கொலைக் கலாசாரத்துக்கெதிராக மனோகணேசன் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவர்கள் கொல்லப்பட்ட பின்பும் நான் அவர்களுக்குத் துரோகியாக இருக்காமல் மரணித்த பின்பும் நண்பனாக இருந்து கொண்டிருக்கின்றேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நமது கனவு ஓரளவு நனவாகியிருக்கின்றது. நல்லாட்சியிலே முன்னோக்கிய நகர்வு இருக்கின்றது. அது ஸ்தம்பித்து நிற்கவில்லை. அதுதான் நல்ல விடயமாகத் தெரிகின்றது.

இந்த நல்லாட்சி நல்லதை நோக்கி நகரவில்லை என்றால் மனோகணேசனுக்கு இதில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய எந்தவித தேவைப்பாடுகளும் இல்லை. பதவிக்காக அலைய வேண்டியதுமில்லை. கொள்கை என்பது உயிரோடும் உணர்வோடும் கலந்திருக்க வேண்டும்.

எங்கள் இனத்தின், மொழியின், கலை கலாசாரத்தின் கொள்கைப் பற்றோடு நாமிருக்கின்றோம். தடைகளைத் தகர்த் தெறிவோம். அதேவேளை, சகோதர இனங்களையும் அரவணைத்துச் செல்வோம். அவர்களுக்காகவும் குரல் கொடுப்போம்.

முஸ்லிம் சமூகத்திற்கு விளங்கும்படியாக நான் இதனை உரத்துச் சொல்கின்றேன், பேருவளை, களுத்துறை, கொழும்பிலே முஸ்லிம் சகோதரர்களின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு, எரிக்கப்பட்டபொழுது களத்திலே இறங்கி முஸ்லிம் சமூகத்துக்காக குரல்கொடுத்த முதல் மனிதன் நான்தான்.

அன்றும் இன்றும் நான் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மட்டும் போராடவில்லை அடக்கி ஒடுக்கப்பட்ட சிங்கள சகோதரர்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழர் முஸ்லிம்களுக்கிடையில் காணப்படும் எல்லைப் பிரச்சினையை இங்கிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மிக கண்ணியமாக நாகரீகமாக கையாண்டு அதனைத் தீர்த்துக் கொள்ளுமாறு நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

இனி எல்லைப் பிரச்சினை காரணமாக யுத்தம், அடிப்படை வாதம், மதவாதம், பிரிவினை வாதம், அரச பயங்கரவாதம், சமூகப் பயங்கரவாதம் எதுவும் வேண்டாம். அழித்தது, அழிந்தது போதும்.

சகோதரர்களாக, வாழக் கற்றுக் கொள்வோம். அதற்கு மற்றவர்களை சமத்துவமாக நடத்தும் பண்பு தேவை.

சிறுபான்மை இனங்களுக்குள்ளேயே ஒரு சமூகம் அடுத்த சமூகத்தை அடக்கியாள முயற்சிக்கக் கூடாது. தமிழ் பேசும் சமூகம் தங்களுக்குள் சகோதர வாஞ்சையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பேரினவாதத்தை முறியடிக்க தமிழரும் முஸ்லிமும் இணந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு நான் ஒரு பணிப்புரையை இந்த இடத்திலே விடுக்கி;ன்றேன். வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேச செயலக எல்லைகளை பாதுகாக்கும்படி நான் கேட்டுக் கொள்கின்றேன். இத்தகைய எல்லைப் பிரச்சினைகள் இனி எழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அரச உயர் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.” என்றார்.

LEAVE A REPLY