கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கைது

0
249

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 6 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதில் 3 பேரின் சென்னை, கோவை, நெல்லை வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

கேரள மாநிலத்தில் இருந்து 21 பேர் ரகசியமாக சிரியா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐ.எஸ். இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மூலம் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை திரட்டுவதாக தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கனகமலை குன்றில் ரகசிய கூட்டம் நடத்திய அவர்களை முற்றுகையிட்ட தேசிய புலனாய்வு அதிகாரிகள் மன்சீத் என்ற உமர்அலி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். மேலும் ஒருவர் கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடியில் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து சில ஆவணங்களும், மின்னணு கருவிகளும் கைப்பற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் சோதனை
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை கடையநல்லூர், கேரளாவில் உள்ள கண்ணனூர், கோழிக்கோடு, மலப்புறம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு, கேரளா போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர் சுபான்(வயது 30) நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தங்கி இருப்பது தெரியவந்தது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிகாலை கடையநல்லூர் வந்து துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் சுபான் வீட்டை முற்றுகையிட்டனர். துப்பாக்கி முனையில் சுபானை பிடித்து கைது செய்தனர். அவரது வீட்டை சோதனை செய்து ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றினர். பின்னர் அவரை கேரள மாநிலம் கொச்சினுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

கேரளாவுக்கு குடியேறியவர்
சுபானின் மனைவி ஆயிஷா வீட்டை பூட்டிவிட்டு கேரள மாநிலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. சுபானின் பூர்வீகம் கடையநல்லூராக இருந்தாலும், அவரது தந்தை காஜாமுகைதீன் பல ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலம் சென்று விட்டார். அங்கு தந்தையின் ஜவுளிக்கடையில் இருந்து வந்த சுபானுக்கு ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் ஆள்சேர்க்கும் பணிக்காக 4 மாதங்களுக்கு முன்பு கடையநல்லூருக்கு மனைவியுடன் வந்து தங்கியுள்ளார். அங்கு நகைக்கடை ஒன்றில் அவர் வேலைபார்த்து வந்தார்.

கைதான 6 பேர்
அவரையும் சேர்த்து தேசிய புலனாய்வு அமைப்பினர் 6 பேரை கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:–

கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த மன்சீத் (வயது 30), கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த அபுபஷீர் (29), கேரளா திருச்சூரை சேர்ந்த சுவாலி முகமது (26), இவர் சென்னையில் தங்கியிருந்தவர், கேரளா மலப்புறத்தை சேர்ந்த சுபான் (30, கடையநல்லூரில் கைதானவர்), கோழிக்கோடு குட்டியாடியை சேர்ந்த என்.ஜசிம் (25), அதேபகுதியை சேர்ந்த ரம்ஷத் நஹீலன் கண்டியில் (24) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் சோதனை
கைதானவர்களில் ஒருவரான சுவாலி முகமது சென்னையை அடுத்த கொட்டிவாக்கம், எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 5 மாதங்களாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.

அங்கு இருந்த முகமதுவின் மனைவி மற்றும் மகனிடம் அவர்கள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சுவாலி முகமது ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தது பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் முகமது திருமணத்திற்கு முன்னதாக இங்கு தங்கியிருந்து வேலை தேடி வந்ததையும் கண்டுபிடித்தனர். வீட்டில் இருந்த லேப்–டாப், செல்போன் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

ஆவணங்கள் சிக்கியது
கடந்த 2 மாதங்களாக அவர் அந்த செல்போனில் இருந்து யாருடைய எண்களுக்கு பேசினார் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். சென்னையில் ஏதாவது நாசவேலை செய்ய திட்டமிட்டு இருந்தார்களா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர், சுவாலி முகமதுவின் நண்பர்களிடமும் அதிகாரிகள் விசாரித்தனர்.

வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இங்கு சுமார் 3 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.

கோவையில் 4 பேரிடம் விசாரணை
கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த அபுபஷீரிடம் விசாரணை நடத்தியதில், கோவையை சேர்ந்த 4 பேர் இந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். உடனே அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கோவை உக்கடம் சென்று சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்களின் வீடுகளில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது.

6 மாதங்களுக்கு முன்பு அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரே நாளில் பாஸ்போட் வாங்கியதும், ஒருவர் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மயக்கவியல் 3–ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

சிரியாவுக்கு டிக்கெட்
கேரளாவில் கைதான அபுபஷீர் கொடுத்த தகவலின்படி கோவை உக்கடத்தை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். நேற்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தினோம். கேரளாவில் கைதானவர்கள் கூறிய தகவலும், இவர்கள் 4 பேரும் கூறும் தகவலும் ஒன்றாக இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கோவையில் பிடிபட்ட ஒருவர் சிரியாவில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்துக்கு வேலைக்கு செல்ல விசா, விமான டிக்கெட் எடுத்து உள்ளதால், அவர் சிரியாவுக்கு எதற்காக செல்கிறார்? அங்கு என்ன வேலை செய்யப்போகிறார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தாக்குதல் நடத்த திட்டம்
இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் மேலும் சிலரிடம் விசாரணை நடந்துவருகிறது. இதில் உண்மையான தகவலை தெரிவிக்காத ஒருவர் கைது செய்யப்படலாம் என தெரிவித்தனர்.

அதிகாரிகள் விசாரணையில் கேரளா, தமிழ்நாட்டில் கைதான சிலர் தென் இந்திய மாநிலங்களில் சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய இடங்களை தாக்குவதற்கு குறிவைத்திருந்ததாகவும், அதற்காக வெடிபொருட்கள், இதர ஆயுதங்களை சேகரிக்க திட்டமிட்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.

காவலில் எடுக்க முடிவு
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சதித்திட்டத்தில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

-Daily Thanthi-

LEAVE A REPLY