இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி; இந்தியா மீண்டும் ‘நம்பர்–1’

0
277

CRICKET-IND-NZLகோல்கட்டா டெஸ்டில் 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2–0 என கைப்பற்றியது. டெஸ்ட் ‘ரேங்கிங்’ பட்டியலில் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறி அசத்தியது. நியூசிலாந்து பரிதாபமாக வீழ்ந்தது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என, தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இது, இந்திய அணி சொந்தமண்ணில் பங்கேற்ற 250 வது டெஸ்ட்.

இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 316, நியூசிலாந்து 204 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. சகா (37), புவனேஷ்வர் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

சகா அரைசதம்

நேற்று நான்காவது நாள் ஆட்டம், 15 நிமிடம் முன்னதாக துவங்கியது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் (23), வாக்னரில் ‘பவுன்சரில்’ சிக்கினார். சகா, டெஸ்ட் அரங்கில் 4வது அரைசதம் அடித்தார். அடுத்து ஷமி (1) அவுட்டாக, இந்திய அணி 2வது இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சகா (58) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பவுல்ட், சான்ட்னர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

அஷ்வின் அசத்தல்

பின் 376 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. கப்டில் (24), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார். ஜடேஜா, தன் பங்கிற்கு நிகோல்சை (24) அவுட்டாக்கினார். ராஸ் டெய்லர் (4) ஏமாற்றினார்.

ஷமி அபாரம்

‘வேகத்தில்’ மிரட்டிய முகமது ஷமி, சான்ட்னர் (9), வாட்லிங்கை (1) அவுட்டாக்கினார். ரான்கி (32) இத்தொடரில் தொடர்ந்து 4வது முறையாக, ஜடேஜாவிடம் அவுட்டானார்.

புவனேஷ்வர் ‘வேகத்தில்’ ஜீதன் படேல் (1) போல்டானார். ஹென்றி (18) ஜடேஜா ‘சுழல்’ வலையில் விழுந்தார். கடைசியில் பவுல்ட் (4) அவுட்டாக, நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 197 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

இந்திய தரப்பில் அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின்மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2–0 என முன்னிலை வகிக்கிறது. தவிர, ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

இரு இன்னிங்சிலும் அரைசதம் கடந்த இந்தியாவின் சகா, ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், வரும் 8ம் தேதி இந்துாரில் துவங்குகிறது.

14
கோல்கட்டா டெஸ்டில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய மண்ணில் இது இவர்களது மூன்றாவது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன் 1969ல் ஐதராபாத் (16 விக்.,), மும்பை டெஸ்டில் (15 விக்.,) அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

*இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில் எல்.பி.டபிள்யு., முறையில் வீரர்கள் அதிகமாக அவுட்டானது கோல்கட்டா டெஸ்டில் தான். இதில் இதுவரை மொத்தம் 14 எல்.பி.டபிள்யு., அவுட் தரப்பட்டன. இதற்கு முன் 1996, ஆமதாபாத் டெஸ்டில் (எதிர்– தெ.ஆப்.,) 13 எல்.பி.டபிள்யு., அவுட் வழங்கப்பட்டன.

26

கோல்கட்டா, ஈடன் கார்டன் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் என்ற கருத்து தவறாகிப் போனது. இம்முறை மொத்தம் சரிந்த 40 விக்கெட்டுகளில், வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 26 விக்கெட் வீழ்த்தினர்.

500

நேற்று புவனேஷ்வர் குமாரை அவுட்டாக்கினார் நியூசிலாந்தின் வாக்னர். முதல் தர கிரிக்கெட்டில் இது, இவரது 500வது விக்கெட்டாக அமைந்தது. இதுவரை 24 டெஸ்ட் (99 விக்.,), உட்பட மொத்தம் 120 முதல் தர போட்டிகளில் இந்த இலக்கை எட்டினார்.

93 ரன் 9 விக்.,

நேற்று நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 104 ரன்னுக்கு 1 விக்கெட் என, வலுவான நிலையில் இருந்தது. பின் திடீரென சரிந்த இந்த அணி, அடுத்து 93 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியடைந்தது.

அம்பயர் எச்சரிக்கை

நேற்று லதாமிற்கு பவுலிங் செய்த ஜடேஜா ‘எல்.பி.டபிள்யு.,’ அவுட் கேட்டு அப்பீல் செய்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அம்பயர் ராடு டக்கர் (ஆஸி.,), ஆடுகளத்தில் நடந்ததாக எச்சரிக்கை செய்தார். ‘ரீப்ளேயில்’ பந்து ‘ஸ்டம்சை’ தகர்ப்பது நன்றாகத் தெரிந்தது.

தோனியை முந்திய கோஹ்லி

இந்திய டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து தோற்காமல் வலம் வந்த கேப்டன் வரிசையில் கோஹ்லி (12 டெஸ்ட்) தோனியை (11) முந்தினார். இவரது தலைமையில் இந்திய அணி கடைசியாக பங்கேற்ற 12 டெஸ்டில், 9ல் வெற்றி பெற்றது. 3 போட்டி ‘டிரா’ ஆனது. இவ்வரிசையில் முதல் மூன்று இடங்களில் கவாஸ்கர் (18 டெஸ்ட்), கபில்தேவ் (17), அசார் (14) உள்ளனர்.

11–0

இந்திய அணி கடைசியாக சொந்தமண்ணில் பங்கேற்ற 12 டெஸ்டில் 11ல் வெற்றி பெற்றது. 1 போட்டி ‘டிரா’ ஆனது. இது சொந்தமண்ணில் இந்திய அணியின் சிறப்பான வெற்றிப் பயணமாக அமைந்தது.

தவான் ‘அவுட்’

கோல்கட்டா டெஸ்டில் ஷிகர் தவான் ‘பேட்’ செய்த போது, பவுல்ட் வீசிய பந்து தாக்கியதில், இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இது சரியாக குறைந்தது 3 வாரங்கள் தேவைப்படும் என்பதால், நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இவர் பங்கேற்க மாட்டார் என, அறிவிக்கப்பட்டது.

Source: Dinamalar

LEAVE A REPLY