தமிழரும் முஸ்லிமும் அணிதிரண்டால் அடக்குமுறையிலிருந்து விடுபட்டு அனைத்தையும் சாதிக்கலாம்

0
134

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பூதாகாரம் எடுத்து வரும் பேரினவாதப் பிடியிலிருந்து தப்ப வேண்டுமாயின் சிறுபான்மை இனங்களான தமிழரும் முஸ்லிமும் அணிதிரள்வது காலத்தின் தேவையாகும். அப்பொழுதுதான் அனைத்து விதமான அடக்குமுறைகளிலிருந்தும் விடுபட்டு அனைத்தையும் சாதிக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் ஞாயிறன்று பிற்பகல் (ஒக்ரோபெர் 02, 20163) இடம்பெற்ற முன்பள்ளிப் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்; தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்றினை வரைகின்ற செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்மூலமாக வடக்கு கிழக்கு இணைக்கபட்டு சமஷ்டி முறை ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதேவேளை, இந்தக் கருத்துக்கு எதிரான பலவிதமான கோஷங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு எதிர்ப்புக்கள் கிளம்பினாலும் இந்த விடயத்தில் தமிழ் பேசுகின்ற சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற அர்த்தத்தில் அணி திரள்வார்களாக இருந்தால் பேரினவாதத்தின் தாக்கத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு அதுதான் ஒரே வழியாக இருக்கும்.

இந்த இரு சமூகங்களும் சகோதர வாஞ்சையோடு இணைந்து கொள்ள வேண்டிய காலத்தின் தேவை இருக்கின்றது. வடக்கு கிழக்கின் பலம் பொருந்திய சக்திகளாக இந்த இரண்டு சமூகங்களும் தங்களது ஆற்றல் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

அடக்குமுறை அரசியலால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பதும் சமஷ்டி என்பதும் இன்றியமையாத தேவைப்பாடுகளாகும்.

மத்திய அரசில் குவிக்கப்பட்டிருக்கின்ற அரசியல் அதிகாரங்கள் ஏறத்தாள 70 வருடங்களாக எங்களுக்கு எதனையும் தந்து விடவில்லை. மாறாக ஒற்றையாட்சி முறை எங்களுக்கு இன வன்முறைகளை உருவாக்கி அழிவுகளையும், அவநம்பிக்கையையும், அவமானத்தையும் பரிசாகத் தந்திருக்கின்றது.

மேலும், இந்த ஒற்றையாட்சி முறை 30 வருட கால யுத்தத்தையும், சித்திர வதையையும், சிறை வாழ்க்கையையும், சீரழிவுகளையும், வாழ்க்கையோடு இருந்தவர்களை காணாமலும் ஆக்கியிருக்கின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் படுகொடுகலைகளுக்குத் தூபமிட்டிருக்கின்றது. ஆக, ஒற்றையாட்சியின் அரசியல் என்பது ஆக்கபூர்வமான அபிவிருத்திகளுக்குப் பதிலாக அழிவுகரமான பின்னடைவுகளையே தந்திருக்கின்றது.

எனவே, இந்த நாட்டை சின்னாபின்னப்படுத்திய இந்த சீர் கெட்ட ஒற்றையாட்சி அரசியலின் சீரழிவுகளிலிருந்து இருந்து சிறுபான்மை இனங்களை விடுவிடுவிக்கக் கூடிய விதத்தில் மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் மாகாண மட்டத்தில் பகிரப்பட்டு எங்களுடைய விருப்பு வெறுப்புக்களை நாங்களே சீர் செய்து கொள்கின்ற வகையில் அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்.

அவ்வாறானதொரு அதிகாரப் பகிர்வும் ஆட்சி முறையும் கிடைக்கின்ற போதுதான் வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் ஓரளவுக்காவது தலை நிமிர்ந்து விமோசனம் பெற முடியும்.

தென்பகுதியிலிருந்து கிளம்புகின்ற இனவாத, மதவாத, பேரினவாத தீச்சுவாலைகளை இன்னும் கொழுந்து விட்டு எரிவதற்கு சிறுபான்மை இனங்கள் தூண்டுகோலாக இருந்து விடாது அந்த இனவாத தீச்சுவாலைகளை குளிர் நீர் கொண்டு அணைப்பதற்கு சிறுபான்மை இனங்கள் இறுக்கமாக அணிதிரள வேண்டும்.
இதுவே காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

LEAVE A REPLY