மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோகம் ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கிறது: உதவி மாவட்ட செயலாளர் எஸ். ரங்கநாதன்

0
220

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கடந்த காலங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பெண்கள் துஷ்பிரயோகம் ஒப்பீட்டளவில் அதிகரித்திருப்பதாக உதவி மாவட்ட செயலாளர் எஸ். ரங்கநாதன் தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின்போது கிடைக்கக் கூடிய ஆதாரங்களை சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக பொலிஸ் நிலையங்களின் சிறுவர் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு சனிக்கிழமை (ஒக்ரோபெர் 01, 2016) மட்டக்களப்பு கீறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம்  எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த இரு நாள் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் சிறுவர் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக பொலிஸ் பெண் அதிகாரிகள் மத்தியில் மேலும் கூறிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது வன்முறை அதிகரித்திருப்பதற்கு பதிவுகள் செய்யும் முறைமை சிறந்ததாக இருப்பதா அல்லது முன்னரை விட துஷ்பிரயோகம் வன்முறை வீதம் அதிகரித்திருக்கின்றதா என்பது புரியவில்லை. இதுபற்றியும் ஆய்வு செய்து கண்டறிய வேண்டியுள்ளது.

ஆனால், எப்படியிருந்தாலும் சிறுவர் பெண்களுக்கெதிரான வன்முறைகள் இட்மபெறுகின்றது அல்லது அதிகரித்திருக்கின்றது என்பது ஒரு சிறந்த சமூகக் கட்டமைப்புக்கு ஆரோக்கியமானதல்ல.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குரிய பால்நிலை சம்பந்தமான பதிவுகளை உற்றுக் கவனித்தால், அறிக்கையிடப்பட்டதன் அடிப்படையில் சுமார் 250 வன்முறைப் பதிவுகள் கிடைத்திருக்கின்றன.

பால்நிலை அடிப்படையில் நோக்கினால் ஆண்கள் பாதிக்கப்படுவதை விட இரண்டரை மடங்கு அதிகமாக பெண்கள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவை வெளிப்படையாக பதிவுகளுக்கு வந்த வன்முறைச் சம்பவங்தான், இவை தவிர வெளியில் வராத பிரச்சினைகள் இன்னும் இருக்கக் கூடும்.

பாதிக்கப்படுபவர்களுக்கு சரியான நிவாரணங்கள், சட்ட உதவிகள் கிடைக்கின்றதா என்பதும் பாதிக்கப்பட்டவரை சமூக நீரோட்டத்தோடு மீண்டும் இணைப்பதற்கு தற்போதுள்ள வழிமுறைகள் போதுமானதாக இருக்கின்றதா என்பதும் ஒரு கேள்விக்குறியாகவுள்ளது.

பால்நிலை சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் இடங்களான பிரதேச செயலகங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் என்பனவற்றில் நிவாரணங்கள் எந்தளவு கிடைக்கின்றன அவை நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வாக இருக்கின்றதா என்றும் கண்டறியப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்நிலை வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக பொலிஸார் ஆற்றும் சேவைகள் அளப்பரியவை, பாராட்டத் தக்கவை.

அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் நலனோம்பு சேவைகளை முன்னெடுக்கின்ற பிரதேச செயலகம், மருத்துவத்துறை, வாபழ்வாதாரங்களை வழங்குகின்ற நிறுவனங்கள் உள்ளிட்ட இன்னும் அதற்காகப் பாடுபடுகின்ற ஏனைய சாராரோடும் இணைந்து நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வுக்காக இன்னும் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரசின் திட்டங்களை சமூகங்களின் மத்தியில் சரியான முறையில் அமுல்படுத்தி அதில் வெற்றி காண வேண்டும். இதில் அனைத்து தரப்பினரும் இணைந்து அக்கறையோடு பணியாற்ற வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY