உள்ளூராட்சி சபைகளினுடைய செயற்திறன்கள் அரசியல் சபைகள் கலைக்கப்பட்ட பின்னரே திறம்பட செயற்படுகின்றன

0
178

(எம்.ரீ. ஹைதர் அலி)

உள்ளூராட்சி தினைக்களங்களிலுள்ள அரசியல் சபைகள் கலைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் அரசியல் சபைகள் இருந்தபோது உள்ளதை விட தற்போதைய காலப்பகுதியில் உள்ளூராட்சி சபைகளினுடைய செயற்திறன் அதிகரித்தே காணப்படுகின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் 2016ம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி மாதம் ஆகியவற்றின் ஆரம்ப நிகழ்வுகளும் சிறுவர் தின நிகழ்வும் சனிக்கிழமை (01.10.2016) அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸாபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் விஷேட அதிதியாக உதவி உள்ளூராட்சி ஆணையாளர் K. சித்திரவேல் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்

உள்ளூராட்சி திணைக்களங்களில் அரசியல் சபை இருந்த காலத்தில் ஒரு சிறு வேலையினை செய்வதாக இருந்தாலும் அதிலே அரசியல் சார்ந்த செல்வாக்கு மற்றும் பல்வேறு இழுபரிகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. ஆனால் இப்போது நகரசபைகள் மிகவும் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்கின்றன.

குறிப்பாக காத்தான்குடி நகரசபை மிகவும் மிகவும் பாராட்டத்தக்க முறையில் செயல்பட்டு வருகின்றது. பல்வேறு சிறந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நகரசபை என்பது வெறுமனே குப்பை சேகரிக்கின்ற அல்லது வரி அறவிடுகின்ற ஒரு நிறுவனம் அல்ல. முழு நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயற்படக்கூடிய, சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் அதற்கு உள்ளது.

மேலும் எமது நகர சபை மூலம் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதாவது எமது ஊரில் கடைகள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றப்பட வேண்டும். காலை 7 மணி தொடக்கம் இரவு 6 மணி வரை இந்த நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த பாதுகாப்பு சம்மந்தமான கூட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை உள்ளதாக போலீசார் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

இரவு நேரங்களில் வெளியில் அதிகமான பொழுதை கழிப்பதே இதற்கு அதிக காரணமாகும். மேலும் பெற்றோர்கள் அதிக நேரம் வெளியில் செலவிடுவதால் தமது பிள்ளைகளுடனான உறவு குறைவடைகின்றது. ஆகவே எதிர் காலத்தில் கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டம் நகரசபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

சிறுவர் தினமான இன்று சிறுவர்கள் தொடர்பான உரிமை பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது எமது நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுகின்றது. ஆகவே எமது சிறார்கள் தொடர்பாக நாம் மிகவும் அவதானத்தோடு செயற்பட வேண்டும். குறிப்பாக எமது பெண் சிறார்களை தனிமையில் எங்கும் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY